அதிமுகவில் இருக்கும் 75% பேர் திமுகவிற்கு வாக்களிப்பர்.

05 February 2021

அதிமுகவில் இருக்கும் 75% பேர் திமுகவிற்கு வாக்களிப்பர்.

 2 ஆயிரம் பணம் வாங்கிக் கொண்டு, புத்தாடைகள் அணிந்து சென்னைக்கு அழைத்துச் சென்றார்கள், அவர்கள் கலைஞர் சமாதியை தான் பார்த்துச் சென்றனர் - கரூரில் ஆர்.எஸ்.பாரதி பேச்சு.

கரூர் மாவட்ட திமுக கட்சி அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் திமுக வழக்கறிஞர் அணிக்கான தேர்தல் களப்பணி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் சின்னசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் உள்ளிட்ட கட்சி பொறுப்பாளர்களும், வழக்கறிஞர்களும் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய ஆர்.எஸ்.பாரதி,
வழக்கறிஞர் அணியின் செயல்பாடுகளை பார்த்த தலைவர் கழக பணியுடன் சேர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக மாவட்ட தலைமை அலுவலகத்தில் ஒரு அலுவலகம் செயல்பட வேண்டும்.
பிப்ரவரி மாதம் கடைசி வாரத்தில் தேர்தல் அறிவிப்பு வர இருப்பதாகவும்,
நானும் டி.ஆர். பாலுவும் டெல்லியில் தேர்தல் ஆணையத்திற்கு சென்று அதிகாரிகளை சந்தித்த போது அது தெரிய வந்தது. 24 மணி நேரத்தில் இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார் செந்தில் பாலாஜி. உங்களுக்கு தேர்தல் பணி குறித்து உணர்வு வந்துள்ளது. இது நல்ல துவக்கம். வழக்கறிஞர்கள் கட்சி பணி மட்டுமல்லாது, களப் பணியும் ஆற்ற வேண்டும் அது நம் கடமை. தேர்தல் ஆணையத்தில் நான் பல்வேறு மனு அளிக்க போகும் போது அதிகாரிகள் திமுகவினர் வந்தாலே நல்ல தகவல் கிடைக்கும் என கூறினார்கள். 80 வயதுக்கு மேற்பட்டோர் தபால் மூலம் வாக்களிக்கும் முறையை நான் எடுத்துரைத்த பிறகு தான் வெளியில் தெரிய வருகிறது. இன்று முதல் 23 நாள் நாம் உழைக்க வேண்டும்.
ஏப்ரல் கடைசி வாரத்தில் தேர்தல் நடக்கும் என தெரிய வருகிறது. 45 நாள் நாம் செய்யும் பணி தான் நாம் தமிழகத்தில் நல்ல ஆட்சி கொடுக்க முடியும். இந்த தேர்தலில் நாம் வெற்றி பெற்றால் அடுத்து ஸ்டாலினை யாரும் வெல்ல முடியாது. கடந்த தேர்தலில் 1 சதவீதத்தில் தான் தோல்வி அடைந்தோம். தலைவர் செல்லும் இடங்களில் அதிகளவில் கூட்டம் கூடுகிறது. அதிமுகவில் இருக்கும் 75% பேர் திமுகவிற்கு வாக்களிப்பர். 2 ஆயிரம் பணம் வாங்கிக் கொண்டு, புத்தாடைகள் அணிந்து சென்னைக்கு அழைத்துச் சென்றார்கள். அவர்கள் அனைவரும் கலைஞர் சமாதியை தான் பார்த்துச் சென்றனர். காங்கிச் சட்டை முன்பு நின்று பேசும் தைரியம் கருப்பு கோட்டிற்கு உண்டு. 40, 45 நாள் பயன்படுத்தி கட்சியினருக்கு தெம்பு ஊட்ட வேண்டும். கரூர் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் திமுக வெற்றி பெற வழக்கறிஞர்கள் பாடுபட வேண்டும் என்றார்.