இரண்டு மாதத்தில் 20 யானைகள் உயிரிழப்பு அதிர்ச்சி தகவல்!

18 April 2023

தொடர் யானை இறப்பு குறித்த அறிக்கை!

விதை பரவுதல்,காடுகள் மேலாண்மை, இயற்கை பாதுகாப்பு என அனைத்திற்கும் யானைகள் முக்கியமனதாக உள்ளது.யானைகள்தான் இயற்கையின் ஆதார உயிர்.இது இருந்தால் மட்டுமே மற்ற உயிரினங்கள் வாழ்வதற்கான சூழல் உருவாகும்.
நாடு செழிக்க காடு முக்கியமென்றால்...
காடு செழிக்க யானை முக்கியமல்லவா.?
யானைகள் இறந்தால் விவசாயத்துக்கே தண்ணீர் கிடைக்காதே ...
இந்தியாவில் வெறும் 28,000 யானைகளே உள்ளன.இங்கு யானை அழிவின் விளம்பில் உள்ள உயிரினம்.
தமிழ்நாட்டில் வெறும் 2761 யானைகள் மட்டுமே உள்ளதாக கடைசியாக எடுத்த கணக்கெடுப்பில் உள்ளது.ஒவ்வொரு வருடம் 100 க்கும் மேற்பட்ட யானைகள் கண் முன்னே இறந்து போகிறது. இனி வரும் காலங்களில் நம் பிள்ளைகளுக்கு யானைகளை எப்படி காட்டப்போகிறோம் சொல்லுங்கள்.யானைகள் பாதுகாப்பில் அக்கறை கொள்வோம்.

நாம் ஏன் யானைகளையும் அதன் வழிதடங்களையும் பாதுகாக்க வேண்டும்?
ஒரு தேசத்தின் வளத்தை அந்த தேசத்தில் வாழும் உயிரினங்களை வைத்து அறிந்து கொள்ளலாம். இந்தியாவை போல பல்லுயிர் தன்மை கொண்ட ஒரு தேசத்தை காண்பது இயலாது. ஒவ்வொரு உயிரினமும் அது வாழ்வதற்கென்று ஒரு சூழல் வேண்டும். அந்த சூழலுக்கு
ஏற்றவாறு தன்னை தகவமைத்துக் கொண்டு பரிணாம வளர்ச்சி அடைந்து வாழும் எண்ணற்ற உயிரினங்கள் கொண்ட நாடு இந்தியா. ஒவ்வொரு உயிரினமும் சூழலை சமநிலையில் வைக்கவும் இயற்கையை காக்கவும் உதவி  புரிகின்றன. ஒவ்வொரு உயிருக்கும் சூழலை முறையாக கட்டமைப்பதில் ஒரு பங்கு உண்டு. இந்த கட்டமைப்பு தான், இன்று வரை இந்த உலகை இயக்கிக் கொண்டிருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை இந்த கட்டமைப்பு நல்ல நிலையில் இல்லை. மனிதனின் சுய தேவைகளுக்காக இந்த கட்டமைப்பு வேகமாக உடைக்கப்படுகிறது. 

யானைகளின் பிரம்மாண்டத்தை ரசிக்காதவர்கள் யாரும் இல்லை. யானைகளை பார்க்கும் போதெல்லாம் நமக்குள் ஒரு புத்துணர்ச்சி உருவாகிறதே ஏன்? இந்திய கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக யானைகள் இருக்கின்றனவே எப்படி? யானைகளை இழப்பது, இயற்கையை இழப்பது போல் இல்லையா? பரிணாம வளர்ச்சியில் உருவான இந்தனை பெரிய உயிரினம் அமெரிக்காவிலோ ஐரோப்பாவிலோ இல்லை. நம்மூரில் இருக்கின்றன. பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நம்முடையது இல்லையா? "யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்" என்பது மனித சுயநலத்தில் உண்டான பழமொழி. யானைகளை பணத்தால் மதிப்பிட முடியாது. யானைகளின் சாணத்தில் உள்ள உப்பை உறிஞ்சி வாழும் வண்ணத்துப்பூச்சிகள் மகரந்த சேர்கை செய்வதன் மூலம் புதிய பழங்களை உருவாக்குகின்றன. அந்த பழத்தை உண்ணும் யானை முளைப்பு தன்மை கொண்ட விதைகளை உருவாக்குகிறது. இதையெல்லாம் மனிதர்களால் செய்து கொண்டிருக்க முடியாது. இந்த பூமியில் மனிதர்களுக்கு வாழும் உரிமையை விட யானைகளுக்கு கொஞ்சம் கூடுதலாகவே இருக்கிறது. இதை நம் உணர மறுத்தால் இயற்கை உணர்த்தும்.

வலசை தொலைத்த பேருயிர்:

யானை என்பது ஒற்றை உயிர் அல்ல.அதுதான் காடுகளின் ஆதார உயிரினம்.அது இருந்தால் மட்டுமே மற்ற உயிர்கள் வாழும் சூழல் உருவாகும்.அதனாலேயே இதனை பேருயிர் என்கிறோம்.

உலகில் இரண்டு கண்டங்களில் மட்டுமே யானைகள் வாழ்கின்றன.  ஆசியாவை பொறுத்தவரை யானைகள் அதிகம் இருப்பது இந்தியாவில் தான். யானைகள் பொதுவாக ஒரே இடத்தில வாழ்வதில்லை.ஏனெனில் அவைகளின் உணவுத் தேவை அதகம்.அதனால் ஒரு வாழிடம் விட்டு இன்னொரு வாழிடம் செல்லும்.அப்படி செல்லும்போது அவைகள் காலம்காலமாக பயன்படுத்தியதுதான் வலசைப் பாதைகள். அந்த பாதையை தான் அவை தொடர்ந்து பயன்படுத்துகின்றன. தனது குட்டிகளுக்கும் போதிக்கிறது. தற்போதைய பிரச்சினையே இந்த வலசை பாதைகளை அது இழந்து வருவது தான். இந்த பாதைகள் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்படுமானால் யானைகள் உயிர் வாழ்வதே கேள்விக் குறியாகிவிடும். யானைகள் இல்லாமல் நம் காடுகள் கிடையாது. காடுகள் இல்லாமல் மழை கிடையாது. மழையின்றி விவசாயம் கிடையாது.விவசாயம் இன்றி நமக்கு உணவு கிடையாது.. எனவே நாம் தினசரி உண்ணும் உணவுக்கும் எங்கோ இருக்கும் யானைக்கும் தொடர்பு உண்டு.

வலசை பாதை தொலைத்த யானைகள் வாகனங்களிலும் ரயில்களிலும் அடிபட்டு சாகின்றன. இதற்கெல்லாம் யார் காரணம்? என்ன தீர்வு?நாம்தான் காரணம்.நம்முடைய நுகர்வுக்காவே காடுகள் இங்கு அழிக்கப்படுகின்றன. நன்கு யோசித்துப் பாருங்க.தேவைக்கு வாழாமல் ஆசைக்கு வாழ பொருட்களை வாங்கி வாங்கி குவிக்கிறோம்.அந்த பொருட்களை செய்யும் மூலப்பொருள் எல்லாம் காடுகளை சார்ந்தே உள்ளது.எனவே இங்கு காடழிப்பு தொடந்து கொண்டே இருக்கிறது.
காடுகளுக்குள் போடப்படும் குப்பைகளை உண்ணும் யானைகள் , மனிதர்களால் உண்டாக்கப்படும் காட்டுத்தீ, புதிய புதிய சாலைகள், மின் வேலிகள், அகழிகள், ஒலி மாசு, என பல காரணங்களால் யானைகள் துரத்தப்படுகின்றன.

கடந்த 2 மாதத்தில் இறந்து போன யானைகளின் பட்டியல்

1) சிறுமுகை வனசரம் - பெத்திக் குட்டை வனப்பகுதியில் ஆண்யானை ஒன்று இறந்து கிடந்தது.செய்தி வந்த தேதி
27- 02- 2023

2) காரமடை வனச்சரகம்,நெல்லித்துறை காப்புக்காடு- மானார் பிரிவு- 04-03-2023 -பெண் யானை ஒன்று இறந்து கிடந்தது.

3) தருமபுரி மாவட்டம் -மாரண்டஹள்ளி பகுதியில்  07-03-2023- அன்று 3 யானைகள் விவசாய நிலத்தின் மின்வேலியில் சிக்கி பலியானது.இரண்டு குட்டி யானைகள் அனாதையாகிப் போன சோகமான தருணம்.

4) தருமபுரி மாவட்டம் கம்பை நல்லூர் அருகே 17-03-2023 அன்று தாழக்கிடந்த மின்சார கம்பி பட்டு முதிர்ந்த ஆண் யானை பலியானது.

5) கோவை மாவட்டம் வடக்கு தாலுகாவில் உட்பட்ட தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் எண்.24. வீரபாண்டி வருவாய் கிராமத்திற்குட்பட்ட சேம்புக்கரை மலைவாழ் பழங்குடியினர் கிராமத்தில் 17-03-2023 அன்று மர்மமான முறையில் பெண் யானை ஒன்று  இறந்து கிடந்தது

6) கோயம்புத்தூர் காரமடையில் வாயில் காயம் ஏற்பட்ட பெண் யானை டாப்ஸ்லிப்பில் 19-03-2023 அன்று சிகிச்சை பலனின்றி யானை உயிரிழந்தது.

7)கோவை வனக்கோட்டத்தில் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் பூச்சியூரில் 25-03-2023 அன்று மின்சாரம் தாக்கி யானை உயிரிழப்பு.

8) திருநெல்வேலி களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலய வனத்தில் 26-03- 2023 அன்று 20 வயது பெண் யானை இறந்து கிடந்தது

9) ஈரோடு மாவட்டம் கேர்மாளம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கெத்தேசால் வனப்பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒன்று 30-03- 2023 அன்று இறந்து கிடந்தது

10) ஈரோடு பர்கூர் வனப்பகுதியில் வனத்துறைக்கு தெரியாமல் மின்வேலியில் சிக்கி பலியான யானையை புதைத்த விவசாயி கைதானார்.30-03-2023 அன்று யானையின் சடலத்தை தோண்டி எடுத்தனர்.

11)தருமபுரி மாவட்டம் பென்னாகரம்
அருகே கிணற்றில் இருந்து மீட்கப்பட்டு முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள்  முகாமிற்கு கொண்டு வரப்பட்ட குட்டி யானை ஒன்று 31-03-2024 அன்று உயிரிழந்தது.

12) ஒகேனக்கல் வனப்பகுதியில் வெவ்வேறு இடங்களில் 2 யானைகள் உயிரிழந்த நிலையில் 3-04- 2023 அன்று 
போரூர் பகுதியில் ஆண் யானையும், கோடுபட்டி அருகே பெண் யானையும் மர்மமான முறையில் உயிரிழப்பு.

13). நீலகிரி மாவட்டம் தெங்குமரஹடா பகுதியில் 07- 04 -2023 அன்று இறந்த நிலையில் ஆண் யானையின் சடலத்தை மீட்டுள்ளனர்.

14) தமிழ் நாட்டின் எல்லையில் கேரள வனப்பகுதியான அச்சக்கோவில் அருகே 08-04- 2023 அன்று குட்டியானை ஒன்று இறந்து கிடந்தது.

15) கோவை மாவட்டம் வால்பாறை பூனாட்சி வனப்பகுதியில் 10-04-2023 அன்று அழுகிய நிலையில் 37 வயது மதிக்கத்தக்க யானை இறந்து கிடந்தது.

16) தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே கரும்பு தோட்டதின் மின்வேலியில் சிக்கி 10-04-2023 அன்று ஆண் யானை பலியானது.இது சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலி.

17) தென்காசி மாவட்டம் சிவகிரி வனப்பகுதிக்குட்பட்ட கருங்குளம் பகுதியில் உள்ள கரும்புத் தோட்டத்தில் 11-04-2023 அன்று உயர்மின் அழுத்த வேலியில் சிக்கி 8  வயது ஆண் யானை இறந்தது.

18) கோவை மாவட்டம், வடக்கு தாலுகாவிற்கு உட்பட்ட , (பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம்)கோவனூர் பள்ளத்தாக்கு பகுதியில் மலை அடிவாரத்தில் தோண்டி வைக்கப்பட்ட தண்ணீர் தொட்டி குழிக்குள் 11-04-2023 அன்று  குட்டி யானை ஒன்று விழுந்து இறந்து போனது.

இதில் மொத்தம் 8 யானைகள் மின்வேலியில் சிக்கி இறந்துள்ளது.
வாழிட அழிப்பால் தனது வாழிடம் தொலைத்து விவசாய நிலங்களை தனது வாழிடமாக மாற்றி வைத்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரமான மேற்குக் கோவையை ஆக்கிரமிப்பு செய்துள்ள அத்தனைப் பேருமே இயற்கை முன் குற்றவாளிகள்தான்.
கோவையில்,30 ஆண்டுகளில் யானை வழித்தடம் மற்றம் வனப்பகுயின் ஆக்கிரமிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை படிப்படியாக பார்க்க் வேண்டும்
மலைப்பகுதி மற்றும் அடிவாரங்களில் கட்டடம் கட்ட, ஹாகா என்றழைக்கப்படும் தமிழ்நாடு மலைப்பகுதிகள் பாதுகாப்பு ஆணையத்திடம் அனுமதி வாங்க வேண்டும். ஆனால், கோவையில் உள்ள பெரும்பாலான கட்டடங்கள், ஹாகா அனுமதியில்லாமல்தான் இயங்கி வருகின்றன.
இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவும் இல்லை. நீண்ட ஆண்டுகளுக்கு முன்பிருந்த இடைத்தாங்கல் மண்டலம் (Buffer Zone)(வனத்திலிருந்து குறிப்பிட்ட தொலைவுக்கு எந்தப் பணிக்கும் அனுமதி வழங்காமல் அந்த இடத்தை பராமரிப்பது) தொழில்நுட்பமும் இப்போது இல்லை.

 "வனப்பகுதியில் இருந்து பட்டா நிலத்துக்கு 40 மீட்டர் முதல் 60 மீட்டர் தொலைவு இருக்க வேண்டும் என்பது விதிமுறை. பெரும்பாலான இடங்களில், இது கடைப்பிடிக்கப்படுவதில்லை.
பட்டா நிலங்கள் தற்போது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு(Reserve forest) மிகவும் அருகில் வந்துவிட்டன. அதுதான் பிரச்னைக்கு முக்கிய காரணம். அந்த நிலங்களின் பட்டாக்களை ரத்து செய்ய, மேலிடத்துக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.
யானைகள் கேட்பது, நமது பட்டா பூமியையோ உணவையோ அல்ல. மறிக்கப்பட்டுள்ள தங்களது வழித்தடத்தையும் வாழ்விடத்தையுமே யானைகள் தேடி வருகின்றன.
இந்தப் பிரச்னையை சரிசெய்யாமல் கோவையில் எத்தனை திட்டங்கள் செயல்படுத்தினாலும் அவையும் யானைகளுக்கு மனித இனம் செய்யும் தீங்குதான்.மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் மட்டுமில்லாமல் தமிழ் நாட்டின் கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் நிறைய யானை வாழிடங்களும் வழித்தடமும் உள்ளது. கிழக்குத் தொடர்ச்சி மலை பொறுத்த வரையில், 1900 களில் பரவலாக யானைகள் எல்லா இடங்களிலும் காணப்பட்டது. ஆனால் காலப்போக்கில் காடுகள் அழிக்கப்பட்டு, விவசாய நிலங்களாக மாற்றப்பட்டதால் யானைகள் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டன. ஓசூர், தர்மபுரி போன்ற சில இடங்களில் மட்டும் அங்கங்கே யானைகளைப் பார்க்கமுடிகிறது. அதுவும் ஏகப்பட்ட சிக்கல்களையும் சவால்களையும் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. 
சேலம் மாவட்டத்தைப் பொறுத்த வரையில் 150 வருடத்திற்கு முன்னர்ச் சேர்வராயன் மலை , கல்வராயன் மலை , பால மலை, பொம்முடி, மற்றும் மேட்டூர் பகுதிகளில் யானைகள் மிகுத்துக் காணப்பட்டன. சேலம் வனப்பகுதிகள் யானைகளுக்கு ஒரு முக்கிய  வாழ்விடமாகவும்,வழித்தடமாகவும் இருந்தன. மைசூர் வனப்பகுதியில் இருந்து வலசை வரும் யானைகள் , கல்வராயன், சேர்வராயன் மலை , தோப்பூர் வழியாகவே மேற்குத் தொடர்ச்சி மலைச் சென்றுவந்தன. அப்போது சேலம் வனப்பகுதிகள் செழிப்போடு காணப்பட்டன. புலிகள், சிறுத்தை, வெளிமான், நீள்கை, சிவிங்கிப்புலி , சாம்பல் இருவாட்சிப் பறவை போன்ற வனவிலங்குகள் நம் சேலம் பகுதிகளில் இருந்தன. அனால் இன்று அதனை எல்லாம் நாம் இழந்துவிட்டோம். ஒரே ஆறுதலான விஷயம் மேட்டூர் பகுதிகளில் யானைகளைப் பார்க்க முடிகிறது. கர்நாடக, ஈரோடு மற்றும் தர்மபுரி வனப்பகுதிகளில் இருந்து அவ்வப்போது வருவதுண்டு.
ஆனால் அவை சேர்வராயன், கல்வராயன் மலைக்கு வந்து செல்ல வழித்தடங்கள் இல்லை. நாம் இந்தப் பகுதிகளுக்கு வரும் யானைகளைப் பாதுகாக்கவும், அதன் வழித்தடங்களைப் பாதுகாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும். நம் தமிழ்நாட்டில் யானைகள் பரவலாக இருந்ததைப் பற்றியும், அவை ஏன் காணாமல் போயின என்பதைப் பற்றியும் எல்லோரிடமும் முதலில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உலக யானைகள் தினமான ஆகஸ்ட் 12 க்குள் இதை செய்ய வேண்டியது அவசியமாகும்.

தொகுப்பு :
யானைகள் சூழுலகு மதோற்கடம் 

இரா ஜெகதீஷ் மற்றும் ஆற்றல் பிரவீன் குமார் ..