யாழ்ப்பாணத்தை ஆண்ட சங்கிலி மன்னன்..!

யாழ்ப்பாணத்தை ஆண்ட சங்கிலி மன்னன்..!


யாழ்ப்பாணத்தில் பல தமிழ் அரசர்கள் ஆட்சி புரிந்தாலும் போர்த்துக் கேயரையும் ஒல்லாந்தரையும் எதிர்த்துப் போராடிய மன்னர்களுள் சங்கிலி முக்கியத்துவம் பெறுகிறான். 


சங்கிலி செகராசசேகரன் 450 வருடங்களுக்கு முன்னர் யாழ்ப் பாணத்தை ஆட்சிபுரிந்து வந்தான். அக்காலத்தில் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார்க் கரைகளில், கரைதட்டிய கப்பல்களையும் அவற்றில் உள்ள பொருட்களையும் உரிமைப்படி யாழ்ப்பாண அரசர் எடுத்துக் கொள்வர். இதன்படி பல போர்த்துக்கேயக் கப்பல்களைச் சங்கிலி கைப்பற்றினான். 


இச்செயலைத் தடுக்கவென போர்த்துக்கேய தளபதி "அல் பொன்சோ த சூசா" என்பவன் தமது அரசுக்கு அடங்கியிருக்கும் படி சங்கிலியைப் பணித்தான். 


அத்துடன் மன்னாரில் சிலர் கத்தோலிக்க மதத்திற்கு மாறினர். பலர் மதம் மாற்றப்பட்டனர். இதனையறிந்த சங்கிலி மதம் மாறியவர்களைத் தண்டித்தான். 


அக்காலத்தில் சிங்கள நாட்டில் "மாயாதுன்னை" என்ற அரச குமாரனும் போர்த்துக்கேயருக்கு எதிராக எழுச்சி கொண்டான். சங்கிலியும் மாயாதுன்னையும் சேர்ந்து போர்த்துக்கேயரை எதிர்த்துப் போர் புரிந்தனர். இவர்களிருவருக்கும் தஞ்சை மன்னனும் உதவினான். 


சங்கிலியைத் தண்டிக்க போர்த்துக்கேயர் காலம் பார்த்திருந்தனர். போர்த்துக்கேயத் தளபதி "கொன்ஸ்தாதீன் த பிறகன்ச" கடல் வழியாக ஒரு பெரும் படையுடன் யாழ்ப்பாணத்தில் உள்ள கொழும்புத்துறையை அடைந்தான். 


இவன் நல்லூரை அடைந்து சங்கிலியின் கோட்டை கொத்தளங்களை அழித்தான். சங்கிலி தன் மாளிகைக்குத் தீமூட்டிவிட்டு கோப்பாய்க்கு ஓடினான். அங்கும் போர்த்துக்கேயர் தொடரவே, அவன் வன்னிக்குப் போய் ஒளிந்து கொண்டான். 


போர்த்துக்கேயர் தாம் கைப்பற்றிய யாழ்ப்பாணத்தில் வேட்டையாடுதல், பசுவதை செய்தல் போன்ற ஏகபோக சுகங்களை அனுபவித்தனர். மக்கள் மனம் வெதும்பினர். போர்த்துக்கேயருக்கு எதிராகத் திரண்டெழுந்தனர். எதிர்ப்பட்ட போர்த்துக்கேயரை வெட்டி வீழ்த்தினர். இதனால் பெரும் கலகம் மூண்டது. 


இத்தருணத்தில் சங்கிலி மன்னன் நல்லூருக்கு வந்து சிதறுண்ட தன்படையைச் சீர் செய்தான். போர்த்துக்கேயருக்கு எதிராகப் பெரும் போர் நிகழ்த்தினான். 


இந்த எதிர்ப்பிற்கு நிகராக போர்த்துக் கேயரால் போர்புரிய முடியவில்லை. இதனால் அவர்கள் கப்பலேறிச் சென்றனர். வீரம் செறிந்த மக்கள் போராட்டத்தினால் யாழ்ப்பாண அரசு காப்பாற்றப்பட்டது.