குகைக்கல்வெட்டு-2 சமணர் மலை

எண்பெருங்குன்றம் எனப் பெயர் பெற்ற மாமதுரையின் கூவாத மலையெனச் சொல்லப்படும்
சமணமுனிகள் வாழ்ந்த பகுதிகளுக்கு ஏதேனும் ஒரு பெயர் இருக்கும். ஆனால், கீழக்குயில்குடியில் மட்டும் அதற்கு 'சமணர்மலை' என்றே பெயர்
சமணர் மலை அல்லது அமணர்மலை என்ற பெயரும் உண்டு. மதுரையில் இருந்து மதுரை - தேனி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நாகமலை புதுக்கோட்டைக்குத் தெற்கே அமைந்துள்ள ஒரு குன்று ஆகும். கீழக்குயில்குடி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. இங்கு தமிழிக் கல்வெட்டுக்களும்,சமணப் படுகைகளும், சமணச் சிற்பங்களும் காணப்படுகின்றன.

செட்டிப்புடவு
 
         கீழக்குயில்குடி சமணர் மலையின் தென்மேற்கே செட்டிபுடவு என்றழைக்கப்படும் பகுதி இருக்கிறது. இப்பகுதியில் சிற்பங்களுடன் கூடிய குகை ஒன்று காணப்படுகிறது. இந்த குகையின் இடதுபுற பாறை முகப்பில் புடைப்புச்சிற்பமாக செதுக்கப்பட்டுள்ள அழகிய முக்குடை அண்ணலின் (மகாவீரர்) காதுநீண்ட உருவம் ஒரு செட்டியாரைப் போல் தோற்றமளிக்கிற காரணத்தால் செட்டிப்புடவு என அழைக்கப்படுகிறது.இச்சிற்பத்தில் மகாவீரர், இருபுறமும் சாமரம் வீசுபவர்கள் சூழ, முக்குடைக்கு மேலே வானவர்கள் பறந்துவர, அரசமரத்தின்கீழ், மூன்று சிம்மங்கள் தாங்கும் ஆசனத்தில் அமர்ந்திருக்கிறார். அதன் கீழே இச்சிற்பத்தை செய்து கொடுத்தவரைப் பற்றிய வட்டெழுத்துக் கல்வெட்டு காணப்படுகிறது.

"வெண்பு நாட்டுக் குறண்டி திருக்காட்டாம்பள்ளி கனக னந்திப்ப டாரர் அபினந்தபடாரர் அவர் மாணாக்கர் அரிமண்டலப் படாரர் அபினந்தனப்படாரர் செய்வித்த திருமேனி" என்பது இக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள வட்டெழுத்து செய்தி. இதன் மூலம் குறண்டி திருக்காட்டாம்பள்ளி மாணாக்கர்களே இச்சிற்பத்தைச் செய்யக் காரணமாயிருந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.மேலும் இன்னாரது மாணாக்கர் என்று அவர்தம் ஆசிரியர் கொண்டு தனிநபர்கள் அடையாளப்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

இயற்கையாக அமைந்த குகைத்தளமான செட்டிப்புடவின் உட்பகுதியின் மேல்புறத்தில் ஐந்து சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. முதலிலும் கடைசியிலும் இயக்கியர் சிற்பங்களும் நடுவிலுள்ள மூன்று சிற்பங்களில் முக்குடைக்கு கீழே அமர்ந்திருக்கும் தீர்த்தங்கரர் உருவமும் செதுக்கப்பட்டுள்ளன. முதலில் உள்ள இயக்கி சிம்மத்தின் மீதமர்ந்து யானை மேல் வரும் அசுரனை எதிர்கொள்வது போலுள்ளது. இச்சிற்பம் மாமல்லபுரத்திலுள்ள மகிஷாசுரமர்த்தினி சிற்பத்தை நினைவுபடுத்துவதாக உள்ளது. இவ்வியக்கியின் பெயர் கொற்றாகிரியா. கடைசியில் உள்ள சிற்பத்திலுள்ள இயக்கி இருசேடிப் பெண்கள் சூழ இடக்காலை மடக்கி வலதுகாலை நீட்டி ” சுகாசன " நிலையில் அமர்ந்துள்ளார். இவ்வியக்கியின் பெயர் அம்பியா. இந்த ஐந்து சிற்பங்களின் கீழும் அவற்றை செய்து கொடுத்தவர்களின் பெயர்கள் வட்டெழுத்துகளில் பொறிக்கப்பட்டுள்ளன.

‘ ஸ்வஸ்திஸ்ரீ இப்பள்ளிவுடையகுணசேன தேவர் சட்டன் தெய்வ பலதேவர் செய்விச்ச திருமேனி ‘,’ ஸ்வஸ்திஸ்ரீ வெண்பு நாட்டுக் குறண்டித் திருக்காட்டாம்பள்ளிக் குணசேனதேவர் மாணாக்கர் வர்தமானப் பண்டிதர் மாணாக்கர் குணசேனப் பெரியடிகள் செய்வித்த திருமேனி ‘,’ ஸ்வஸ்திஸ்ரீ இப்பள்ளி ஆள்கின்ற குணசேனதேவர் சட்டன் அந்தலையான் களக்குடி தன்னைச் சார்த்தி செய்வித்த திருமேனி ‘ என்றுள்ள கல்வெட்டுக்கள்வழி மாதேவிப் பெரும்பள்ளிக்கு நெடுங்காலமாய் பொறுப்பு வகித்த குணசேனதேவர் மற்றும் அவருடைய மாணாக்கர்கள் இச்சிற்பங்களைச் செய்து கொடுத்து பாதுகாத்தனர் என்பதை அறியலாம்.

பேச்சிப்பள்ளம் 
 
தீர்த்தங்கரர்களின் சிற்பம், பேச்சிப்பள்ளம்
இந்த மலையில் இயற்கையாக அமைந்த ஒரு சுனை உள்ளது.இந்த சுனையே பேச்சிப்பள்ளம் என்று அழைக்கப்படுகிறது.பேச்சிப்பள்ளத்தில் எட்டு தீர்த்தங்கரர் சிற்பங்களும், வட்டெழுத்துக் கல்வெட்டுக்களாக செதுக்கியவர் பெயர்களும் உள்ளன. இங்கு பாகுபலி (கோமதேஸ்வரர்), பார்சுவநாதர், முக்குடைநாதர் சிற்பங்கள் உள்ளன.அச்சணந்தி முனிவரின் தாயார், இங்கு செயல்பட்ட பள்ளியின் தலைவர் குணசேனதேவர், குறண்டி திருக்காட்டாம் பள்ளியைச் சேர்ந்தோர் முதலியோர் இச்சிற்பங்களைச் செய்துள்ளதை இங்குள்ள கல்வெட்டுகளிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

மாதேவிப்பெரும்பள்ளி
பேச்சிப்பள்ளத்திற்கு சற்று மேலே உள்ள இடத்தில் கி.பி.10 ஆம் நூற்றாண்டில் செயல்பட்ட மாதேவிப் பெரும்பள்ளி என்னும் சமணப்பள்ளியின் அடித்தளம் மட்டும் காணப்படுகிறது. அதில் உள்ள வட்டெழுத்துக் கல்வெட்டு மூலம் பராந்தக வீரநாராயணன் (கி.பி.860-905) என்னும் பாண்டிய மன்னன் தன் மனைவி வானவன் மாதேவியின் பெயரால் இப்பள்ளியைக் கட்டியுள்ளது புலனாகிறது.

” ஸ்வஸ்திஸ்ரீ கோமாறஞ்சடையற்கு யாண்டு இருபத்தேழிதனெதிராண்டி னெ திரான் டு மாடக்குளக் கீழ் திருவுருவகத்து மாதேவிப் பெரும்பள்ளிச் சந்தம் நாட்டாற்றுப் புறத்து புளிங்குன்றூர் நீர்நில மிருவே லியாலும் கீழ்மாந்தரனமான் வயும் அதன்துடவரும் மேற்றி நில மிரண்டு மாவும் திருவுருவகத்து மலைக்கீழ் (போய்) யின வடகீழ் சிறபால வயக்கலு மிதன் தென்வய "என்பது மாதேவிப் பெரும்பள்ளி அடித்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வெட்டின் வாசகம்.

இக்கல்வெட்டு வீரநாராயணனின் 29 ஆம் ஆட்சியாண்டான கி.பி.889ல் வெட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் இம்மலைக்கு "திருவுருவகம்" என்ற பெயர் இருந்ததும், இப்பள்ளியின் பராமரிப்புக்காக "மாடக்குளக்கீழ்" என்னும் நாட்டுப்பிரிவில் அமைந்திருந்த புளிங்குன்றூரில் இரு வேலி நிலம் கொடையளிக்கப்பட்டுள்ளது என்ற செய்தியையும் அறிய முடிகிறது. புளிங்குன்றூர் என்னும் ஊரே இன்று சமணப்படுகைகள் அமைந்துள்ள கொங்கர் புளியங்குளம் என்ற ஊராகலாம்.

இந்த சமணப்பள்ளி இடிந்தபின் இங்கிருந்த இயக்கியர் உருவங்களை கீழே உள்ள அய்யனார் கோயிலில் வைத்து மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

கன்னடக் கல்வெட்டு
மாதேவிப் பெரும்பள்ளியின் அடித்தளம் அமைந்துள்ள பகுதியிலிருந்து மலையேறிச் சென்றால், கிழக்கிலிருந்து தெற்காக செல்லும் சரிந்து நீண்ட ஏற்றத்தின் உச்சியில் ஒரு தீபத்தூணை வைத்து மக்கள் வழிபட்டு வருகிறார்கள். அதன் கீழே கன்னடக் கல்வெட்டுக்கள் வெட்டப்பட்டுள்ளன.இந்த கல்வெட்டுகள் அனைத்தும் கர்நாடகா வில் உள்ள சிரவணபெளகொள பகுதியிலிருந்து வந்து சென்ற சமணத்துறவிகளின் பெயர்களாக இருக்கலாம். இரண்டாம் கல்வெட்டு மட்டும் தமிழிலும் மற்றவை கன்னடத்திலும் உள்ளன.

தமிழிக் கல்வெட்டுதொகு
மாதேவிப் பெரும்பள்ளியின் அடித்தளம் அமைந்துள்ள பகுதியிலிருந்து மலையுச்சியிலுள்ள தீபத்தூணை நோக்கிச் செல்லாமல், மலையின் வடபுறம் நோக்கிச் சென்றால் அங்குள்ள பாறையின் கீழ் தமிழிக் கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. இக்கல்வெட்டை 2012ல் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வு மாணவர் திரு.முத்துக்குமார் கண்டுபிடித்துள்ளார். இக்கல்வெட்டை பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் கல்வெட்டு வல்லுநர்கள் படித்துப் படியெடுத்துள்ளனர். "பெருதேரூர் குழித்தை அயஅம்" என 13 எழுத்துக்களை இத்தமிழ் பிராமிக் கல்வெட்டு கொண்டுள்ளது. இதன் காலம் கி.மு இரண்டாம் நூற்றாண்டு. பெருந்தேரூரார் செய்த கற்படுக்கை என்பது இதன் பொருளாகும்.

சமணர்மலையின் அடிவாரத்தில், கருப்புசாமி, ஐயனாருக்குக் கோயில் உள்ளது. இதன் வாயிலில், 'பட்டவன் சாமிகோயில்' என மாலிக்காபூர் படையெடுப்பின்போது, அப்படையை எதிர்த்துப் போரிட்டு, உயிர் துறந்த கள்ளர்குல தளபதிகளான வீரத்தேவர், கழுவதேவர் இருவருக்கும் நடுகல் எடுத்து, வழிபடுவதைக் காணமுடியும். நடுகல்லில், வீரத்தேவர், கழுவதேவர் வலக்கையில் வாளும், இடக்கையில் வளரியும் வைத்திருப்பதைக் காணலாம்.

இந்த மலையடிக் கருப்பு ஐயனார் கோயிலுக்குள் இப்போது பூத்துக் குலுங்கும் நாகலிங்க மரங்களும், மகாவில்வம் என்கிற விசேட வில்வமரமும் இருப்பது கூடுதல் சிறப்பாகும். இக்கோயிலின் மேற்குப்புறத்தில், பாண்டிய மன்னனின் பழைமையான சிலை ஒன்றுக்கு 'பாண்டியராஜன் சாமி' என்று பூசைகளும் நடைபெறுவது வித்தியாசமான ஒன்றாகும்.

செட்டிபுடவின் இரண்டாவது குகையில்தான் மதுரைக்காமராசர் பல்கலைக்கழகத்தின் வௌவால் குறித்த சிறப்பான ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டு, சர்வதேச கவனத்தை ஈர்த்தது. இக்குன்றின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் ஆலமரங்களின் தாய்மரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்தவை என்று சொல்லி, இன்னும் அவ்வூர் மக்கள் அப்பகுதியில் ஆலமரங்களைக் கண்ணும் கருத்துமாய் வளர்க்கிறார்கள். முந்நூறு ஆண்டுகள் பழைமையான பொந்து விழுந்த நாவல் மரமொன்று இன்றும் பழங்களை உதிர்த்து பறவைகளைப் பேணுகின்றன. நீர்மருது மரமும், பூத்துச் சொரியும் பாலை மரங்களும், மழை வருவதற்கு ஒரு வாரம் முன்பு செடியே பூக்களாய் தேனீக்களை ஈர்க்கும் கள்ளிச்செடிகளுமாய், இச்சமணர் மலை வரலாற்றுத் தலமட்டுமல்லாமல், அழகியதொரு சுற்றுலாத்தலமாகவும் விளங்குகிறது.

குன்றின் கீழிருக்கும் தாமரைக்குளத்தில், பல்கிப் பெருத்திருக்கும் மீன்களையும் ஆமைகளையும், இலையின் மேல் ஒய்யாரமாய் ஏதேனும் மழலை மொழி மிழற்றியபடி நடந்து திரியும் கானாக்கோழிகளையும், வக்கா என்னும் குருட்டுக்கொக்குகளையும், நீர்க்காகங்களையும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

                             அன்புடன்,
                   பாலமுருகன்,M.A,,TPT, PGD.CA, PGD.YOGA, PGD.E.A, D.EM,                                                                
தொல்லியல் & கல்வெட்டு ஆர்வலர்