மதுரை குகைக்கல்வெட்டு 1

மதுரை குகைக்கல்வெட்டு

       சங்கம் வைத்து தமிழ் வளர்த்த     தமிழின் தாய்வீடான மதுரைக்கு உலகத்தின் எந்த மூலையிலிருந்து நீங்கள் வந்தாலும் உங்களை வரவேற்பது மதுரையைச் சூழ்ந்த மலைகளே. யானைமலை, நாகமலை, அழகர்மலை, சமணமலை, திருப்பரங்குன்றமலை, பசுமலை போன்ற மலைகளைக் காணாமல் மதுரைக்குள் பயணிக்க இயலாது.

     நாலாபக்கமும் நான்மாடக்கூடலைச் சூழ்ந்த இம்மலைகள் மதுரைக்கு அழகாகவும், அரணாகவும்  திகழ்கின்றன. தொல்குடிகளின் பாறைஓவியங்களும், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழிக் கல்வெட்டுகளும், சமணத்துறவிகளின் காலடித்தடங்களும்  இம்மலையில் உறைந்திருக்கிறது.

      அனைவருக்கும் கல்வியையும், மருத்துவத்தையும் கொடையாய் வழங்குவதை தம் பணியாகக் கொண்ட சமணத்துறவிகளின் அன்புதான் இம்மலைகளிலுள்ள பாறையிடுக்குகளில் ஊற்றாய் இன்றும் கசிந்து கொண்டிருக்கிறது.
சமணர்கள் வாழ்ந்த மலைக்குகைகளில் சங்க கால தமிழி(பிராமி) எழுத்துக்கள் காணப்படுகின்றது.இவற்றில் மாங்குளம் கல்வெட்டு பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் பெயர் உள்ள கல்வெட்டு ஆகும்.


மாங்குளம் தமிழ்க் கல்வெட்டுக்கள்
        மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ள மாங்குளம் என்ற ஊரிலுள்ள கழுகுமலையில் பல பிராமி கல்வெட்டுக்கள் உள்ளன. மாங்குளம், மீனாக்க்ஷிபுரம் என்றும், அரிட்டாபட்டி என்றும் பல வாறாக அழைக்கப்பட்டது. இங்குள்ள கல்வெட்டுக்கள் 1882ல் ராபர்ட் சீவல் என்பவரால் பார்வையிடப்பட்டாலும் முதலில் இதனை முயற்சித்துப் படித்தவர் வெங்கோபராவ் ஆவார். இவரால் 1903ல் கீழவளவு என்ற இடத்தில் தமிழ் கல்வெட்டைப் படிக்கத் தொடர்ந்ததை அடுத்து 1906ல் மாங்குளம் கல்வெட்டும் படிக்கப்பட்டது.

மாங்குளத்தில் மொத்தம் 6 கல்வெட்டுக்களும் அரிட்டாப்பட்டியில் 1 கல்வெட்டும் காணப்படுகின்றன. மாங்குளம் அரிட்டாப்பட்டி, மீனாட்சிபுரம் இவை அனைத்தும் மிக அருகில் அமைந்திருக்கும் காரணத்தினால் இவை ஒரே ஊரேயே குறிப்பதாகக் கருதப்பட்டு வந்தது. தற்பொழுது அரிட்டாப்பட்டியிலும் ஒரு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றுள் இரண்டு கல்வெட்டுகள் தமிழக வரலாற்றில் மிக முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன.

கல்வெட்டு செய்தி : 

     பெரும்பாலும் இவை அனைத்துமே இந்தப்பாறைக் குகைகளில் சமண முனிவர்கள் அமர்ந்து கொள்ளவும், படுத்து உறங்கவும், பாறைகளைச் செப்பனிட்டு வழவழப்பாக அமரும் வண்ணம் செய்து கொடுத்ததையே கூறுகின்றன. இவ்விதம் அமைத்துக்கொடுப்பதற்கு கல்வெட்டுக்களில் பாளிய் என்ற சொல் பயன்பட்டுள்ளது. பாளிய் என்ற சொல்லிற்கு மேடானப் பகுதி என்றுப்பொருள். ஆனால், இவற்றைப் பல அறிஞர்களும் பிராகிருதச் சொல் எனக்கொண்டுள்ளனர். பின்னர் காலங்களில் ஏற்பட்ட சமண, புத்தப் பள்ளிகளுக்கு இவையே அடிப்படையாகும். பாறையைச் செப்பனிட்டு கொடுக்கும் செயலிற்கு பிணவு, பிளவு, கொட்டுதல் போன்ற பல சொற்களைப் பயன்படுத்தியுள்ளனர். இதன் காலம் பொ.ஆ.3 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தாகும்.

கல்வெட்டுப் பாடம்

கல்வெட்டு 1

  கணிய் நந்தஸிரிகுவன் கே தம்மம்
ஈத்த நெடுஞ்செழியன் பணாஅன்
கடலன் வழுதி கொட்டுபித்த பாளிய்
செய்தி

நந்த ஸிரிகுவன் என்ற சமண முனிவருக்குச் சங்க காலப் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் பணியாள் கடலன் வழுதி என்பவர் பாளிய் (சமணர் இருக்கை)அமைத்துக் கொடுத்துள்ளார்.

கல்வெட்டு 2

கணிய் நந்த ஸிரிய்குவன்
தம்மம் ஈத்த நெடுஞ்செழியன் ஸாலகன
இளஞ்சடிகன் தந்தைய் சடிகன்
செஈய பாளிய்
செய்தி:

நெடுஞ் செழியனுடைய சகலனாகிய, இளஞ்சாடிகனின் தந்தை சடிகான் கணிய நந்தாஸிரியருக்கு பள்ளியைத் தர்மம் செய்துள்ளார்.

சிறப்புகள்:

• நெடுஞ்சழியன் என்ற சங்க காலப் பாண்டிய மன்னனின் பெயர் பொறிக்கப்பெற்றுள்ள கல்வெட்டு.
• புலிமான் கோம்பை மற்றும் தாதப்பட்டிக் கல்வெட்டுகள் கண்டுபிடிப்பதற்கு முன்பு வரை மாங்குளம் கல்வெட்டே காலத்தால் முந்தைய பழந்தமிழ் எழுத்தாக்க் கருதப்பெற்றுவந்தது.
• சமணர் குகையில் இக்கல்வெட்டு காணப்படுகிறது.
• கணிய் நந்தஸ்ரீகுவன் என்ற சமணத் துறவிக்குச் சங்க காலப் பாண்டிய மன்னன் நெடுஞ்சழியனின் சேவகனும், சகலையும் மற்றும் பல பொது மக்களும் குகையில் இருக்கை அமைத்துக் கொடுத்ததை அங்குள்ள கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

கல்வெட்டு 3

கணிய நந்தஸிரிகுவன்
வெள் அறைய் நிகமது
காவிதி கழிதிக அந்தை
அஸீதன் பிணஉ கொடுப்பிதோ
செய்தி

வெள் அறைய் என்னும் ஊரிலுள்ள, வணிகக்குழுவைச் சேர்ந்த அந்தை அஸீதன் என்பவன் கணிய நதாஸிரியருக்கு பிணஉ (சன்னல், கயிறுகட்டு, பிளவு) கொடுத்ததைக் கூறுகிறது. வாணிகத்தில் சிறந்து விளங்குபவருக்குக் காவிதி என்று பட்டப்பெயர் வழங்குவது தெரிய வருகிறது. காழிதிகம் என்பது முத்தைக் குறிக்கும். எனவே அந்தை அஸிதன் ஒரு முத்து வணிகன் என்பது தெளிவு.

கல்வெட்டு 4

கணிய நத்திக் கொடியவன்
செய்தி:

கணிய என்பது சமண முனியைக் குறிக்கும் பிராகிருதச் சொல். நத்தி என்ற சமண முனிக்கு பாறையைக் கொட்டிக் கொடுத்துள்ளதைக் கூறுகிறது.

கல்வெட்டு 5

சந்தரிதன் கொடுபிதோன்
செய்தி

சந்திரிதன் கொடுபித்தோன்

கல்வெட்டு 6

வெள்அறை நிகமத்தோர் கொட்டியோர்
செய்தி

நிகமம் என்ற பிராகிருதச் சொல் வணிகக்குழுவினைக் குறிக்கும். இந்தப் பாறையைக் கொட்டிக் கொடுத்தவர் வெள் அறை என்னும் ஊரிலுள்ள வணிகக் குழுக்கள் ஆவர்.

இவ்விதம் இந்த 6 கல்வெட்டுக்களையும் தொகுத்துக் காணும்பொழுது இக்கல்வெட்டுக்கள் தமிழக வரலாற்றுப் புனரமைப்பிற்குப் பெரிதும் துணைபுரிவனவாக உள்ளன. முதல் இரண்டு கல்வெட்டுகளும் சங்க காலத்தில் வாழ்ந்த நெடுஞ்செழியன் என்ற பாண்டிய மன்னனின் சகலையும், பணியாளும் சமண முனிவருக்குச் செய்து கொடுத்த பாளிய் குறித்துப் பேசியது. மேலும் நிகமம் என்று அழைக்கப்பட்ட வணிகக்குழுக்கள் இருந்தமை தெரியவருகிறது. காவிதிப் போன்ற பட்டங்கள் வணிகர்களுக்கு வழங்கப்பட்டமையை அறியமுடிகிறது. சங்க காலத்தில் முத்து வணிகம் சிறப்புற்று இருந்திருப்பதை அறியலாம். பாண்டி நாட்டில் சமணத்திற்கு அரச ஆதரவு இருந்துள்ளமையினையும் அறியலாம்.
                           அன்புடன்,
                       ச.பாலமுருகன்,M.A, TPT, PGD.CA,PGD.YOGA ,  PGD.A.E,  D.E.M,    C.G.T.
தொல்லியல் & கல்வெட்டு ஆர்வலர்.