வரலாற்றில் அக்கசாலை என்றால் என்ன ? அறியாத தகவல்

அக்கசாலை!?

     அக்கசாலை என்பது அரசு வெளியிடும் பொன்,வெள்ளி,செம்பு, ஆகிய உலோகங்களால் ஆன நாணயங்களை அளவு, வடிவம், தரம், எடை, ஆகியவை குறையாமல் அமைத்து , அரச இலட்சினை ஒரு புறமும் நாணய மதிப்புக்குறி மறுபுறமும் அமையுமாறு முத்திரையிடும் தொழிற்சாலைக்கு அக்கசாலை என பெயர்.

பண்டமாற்று முறை
        மனித இனத்தின் தேவை காலத்திற்கும் நாகரித்தின் வளர்ச்சிக்கும் ஏற்றவாறு மாறத்தொடங்கியது. மனிதனது செயல்பாடுகள் ஒரு குடும்பத்தை அல்லது குழுவைச் சார்ந்ததாக இருந்தபொழுது அவனது தேவைகள் குறைவாக இருந்தன. பின்னர் பிற குழுக்களுடன் போராடி தமது பலத்தை நிரூபித்து தனி அரசுகளை உருவாக்கினர். இதனால் அவர்களது நடவடிக்கைகள் விரிவடைய ஆரம்பித்தன. இதன் காரணமாகத் தமது தேவைகளுக்குப் பொருட்களை வாங்கவும், கொடுக்கவும் வேண்டியிருந்ததால் பண்டமாற்று முறையைப் பயன்படுத்தினர். தங்களது பகுதியில் உற்பத்தியாகும் பொருட்களில் தேவைக்குப் போக மிஞ்சியதைப் பிறப் பகுதிகளில் உற்பத்தியாகும் பொருட்களுக்காகப் பண்டமாற்று செய்தனர். இவ்வாறாகச் சில பகுதிகளில் சிறிது சிறிதாக நடைபெற்ற பண்டமாற்று மக்கள் பெருக்கம் காரணமாக வணிகப் பொருட்களுக்கு ஏற்பட்ட தேவையாலும் (demand) உபரி உற்பத்தியாலும் (Surpius production) பெருமளவில் நடைபெறத் தொடங்கியது. எடுத்துக்காட்டாக உப்புக்குப் பதிலாக அரிசியையும் நெய்யிற்கு மாற்றாக நெல்லினையும் பெற்றனர். நிலம், ஆபரணங்கள் போன்றவற்றைப் பரிமாற்றம் செய்யும் பொழுது சமமான மாற்றின்மையால் வணிக நடைமுறைகள் சிக்கலானது. இதனால் பொதுவானதொரு மாற்றுப் பொருளின் தேவையை உணரத் தொடங்கினர். எனவே தொடக்கக் காலங்களில் செல்வமாகக் கருதி வந்த "பசு”வை பண்டமாற்றுப் பொருளாகப் பயன்படுத்தியுள்ளனர். அஸ்டாத்யாயி என்னும் நூலில் "கோபுச்சம்” (gobuchcham) என்ற ஒரு நாணய வகை குறிப்பிடப்படுகிறது. (கோ என்பது மாடு என்றும் புச்சம் என்றால் வால் என்றும் பொருள்படும்). இந்தியாவில் மட்டுமின்றி ரோம் போன்ற நாடுகளிலும் கால்நடைகளை மாற்றுப்பொருளாகப் பயன்படுத்தியுள்ளனர். "கால்நடை” என்று பொருள்படும் "பெக்குனியா” (pecunia) என்ற சொல்லினை இவர்கள் செல்வம் என்பதற்கும் பயன்படுத்தியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழிலும் "மாடு” என்ற சொல் செல்வத்தைக் குறிக்கப் பயன்பெற்றுள்ளது. இடைக்காலத் தமிழக நாணய வகைகளுள் இடம்பெறும் "மாடை” என்பதும் இச்சொல்லிலிருந்தே தருவிக்கப் பெற்றிருக்கலாம். இதுபோல் கிரேக்க நாட்டில் ஹோமர் காலத்தில் தட்டுகளும் கோடரிகளும் நாணயமாகப் பயன்பட்டு வந்தன. சீனாவில் விவசாயப் பொருட்கள், பண்டமாற்றுப் பொருளாகப் பயன்பெற்றுள்ளன. கிளிஞ்சல், சங்கு, ஆபரணங்கள் போன்றவை பொது மாற்றுப் பொருள்களாகப் பயன்பட்டுள்ளன.

கங்கைச் சமவெளி நாகரிகம்
         கங்கைச் சமவெளி நாகரிகத்தைக் கொண்டிருந்த வேதகால மக்கள் தங்களது வாழ்க்கை முறையை மேய்ச்சல் பொருளாதாரத்திலிருந்து வேளாண்மைப் பொருளாதாரத்திற்கு மாற்றிக் கொண்டதனால் "தட்சிணை” "கொடை” என்ற முறையில் பொருள் பரிமாற்றங்களை அமைத்துக்கொண்டனர். இக்காலத்தில் ஆபரணங்களும் மாற்றுப் பொருட்களாகப் பயன்படுத்தப் பெற்றன. "நிஷ்கம்”, "சதமானம்”, "ஸ்வர்ணம்” போன்றவற்றை இவ்வகையில் கூறலாம். நிஷ்கம் என்பது ஒருவகைக் கழுத்தணியாகும். சங்க இலக்கியங்கள் சுட்டும் "காசு” என்பது கூட ஆபரணமே தவிர தற்பொழுது வழக்கில் உள்ளது போல் நாணயம் அல்ல என்பது ஆய்வுகள் மூலம் மெய்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக இவர்கள் பயன்படுத்தி வந்த மாற்றுப் பொருட்கள் சிறு சிறுப் பொருட்களை வாங்குவதில் சிக்கல்களைத் தோற்றுவித்தன. பொருட்களைக் கொடுப்போர், வாங்குவோர் என இரு தரப்பினருக்கும் நட்டமில்லாத "இணை மதிப்புள்ள மாற்று” (double co-incidence) தேவைப்பட்டுள்ளது. இதனால் பொருட்களுக்கு ஏற்றாற்போல் மதிப்புடைய உலோகத் துண்டுகளைப் பயன்படுத்தியுள்ளனர். இதுவே நாணயங்களின் தோற்றத்திற்கு வழி வகுத்திருக்கும் எனக் கருதலாம்.


சங்ககால நாணயங்களின் வரலாறு
      பண்டைய காலம் பழங்காலத்தில் இந்திய மக்கள் பொருட்களை பண்டமாற்று முறையில் பரிமாறிக்கொண்டனர்.   இதற்கு ஆதாரமாக சம்பளம் என்னன்னு சொல்லு சான்றாகும். (சம்பு- நெல்-அளம்- உப்பு). இயற்கை பொருளாதாரம்  மாறிப்  பணப்பொருளாதார முறை வந்தவுடன் கட்டிப் பொன், காணம்,  காசு,  பொன் என  வழங்கும் சொற்கள் தமிழில் வழங்கின.

பண்டமாற்று முறையின்  பரிணாம வளர்ச்சியில்  காசுகள் காலமாற்றத்திற்கேற்ப பல வடிவங்களில் அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளன.  பண்டமாற்று முறையினை அடுத்து  'ஹரண்ய பிண்டம்'  என்று அழைக்கப்படும் தங்க கட்டிகள் போன்ற சில பொருட்கள் பண்டங்களை பெறுவதற்கு  இடை  பொருளாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் பிறகு முத்திரைக் காசுகள் தான் காசுகள் என்ற அடிப்படையில் அச்சிடப்பட்டு வெளியிடப் பட்டுள்ளன.

உலகின் ஆதி நாணயம்
          கிமு 680 இல்  கிரேக்க நாட்டில் ஆசியா மைனரில் "லிடியா"  நகரை வாழ்ந்த வணிகர் ஒருவரின் முத்திரை பதித்த காசே உலகின் முதல் காசு என கருதப்படுகிறது.  இக்காசு  பொண்ணு,  வெள்ளியும் கலந்த ' எலக்ட்ரம்'  என்னும் கலப்பு உலோகத்தால்  செய்யப்பட்டது.

நாணயச் சாலை
         காசுகளை  அச்சடிக்கும் இடத்தை  அக்கசாலை என சிலப்பதிகார உரையில் எடுத்தாளப்பட்டுள்ளது.  தங்கசாலை, கம்பட்டம், இடங்கன் சாலை எனவும் நாணய சாலைக்குத் தமிழ் மொழியில் சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
 தமிழ்நாட்டில்,  ஆற்காடு,  நாகை,  திருவரங்கம்,  பழவேற்காடு,  தூத்துக்குடி பரங்கிப்பேட்டை,  காரைக்கால்,  நாகப்பட்டினம்,  தஞ்சாவூர்,  புதுச்சேரி,  திருவாரூர்,  பழனி,  திண்டுக்கல்,  மதுரை, கொற்கை,  கரூர்,  சேலம்,  கிருஷ்ணகிரி,  தாராபுரம்,  சத்தியமங்கலம் சேவூா், மயிலாப்பூர்,  நத்தார் நகர்  முதலிய இடங்களில் முன்னர் நாணயச் சாலைகள்  இருந்துள்ளன.

சங்க காலம்
           சங்ககாலம் என்பது சங்க இலக்கியங்கள் இயற்றப்பட்ட காலம் ஆகும். சங்ககால மக்களின் வாழ்க்கை முறைகளையும் பண்பாடுகளையும் அறிந்து கொள்வதற்கு சங்க இலக்கியங்கள் பெரிதும் பயன்படுகின்றதன.  அவற்றில் மன்னர்களின் பெயர்கள் பல காணப்படுகின்றனவா ஆயினும் அவர்கள் வாழ்ந்த காலத்தை அறிந்து கொள்வதற்கு கல்வெட்டுக்கள் எதுவும் கிடைக்கவில்லை.  கிமு 3 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 2 ஆம் நூற்றாண்டு வரை உள்ள காலத்தைச் சங்ககாலம் என்று தமிழக அறிஞர்கள் கூறுவார்கள். சங்ககாலத்தில் தமிழகத்தை சேர சோழ பாண்டிய  மலையமான் அரசர்கள் ஆண்டுவந்தனர் அவர்கள் பயன்படுத்திய காசுகள் தற்பொழுது ஆற்று படுகைகளில் இருந்து  பழங்கசு    எடுப்போரால்  கிடைக்கின்றன.

புராண காசுகள்  அல்லது முத்திரைக் காசுகள்
          முத்திரைக் காசுகள் கி.மு. 5-ஆம் நூற்றாண்டு துவக்கம் முதல் கி.மு. 2-ஆம் நூற்றாண்டின் இறுதிவரை புழக்கத்தில் இருந்திருக்கின்றன. இக் காசுகளை  புராணக் காசுகள்   அல்லது அச்சு குத்திய காசுகள் அல்லது முத்திரைக் காசுகள் என்பர். இவ்வகை காசுகளை உலோகங்களை உருக்கி, சம்மட்டி கொண்டு அடித்து  தகடுகளாக  மாற்றி அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அவற்றின்மேல் முத்திரை பொறிகளை கொண்டு முத்திரை பதித்தனர். ஆரம்பகாலத்தில் ஒரு பக்கத்தில் மட்டும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட குறியீடுகளும்,  பின்பக்கத்தில் குறியீடுகள் எதுவும் இல்லாமலும் இருந்தன. குறியீடுகளாக குன்றுகள்,  மலைகள்,  மரங்கள்,   மீன்,  கதிரவன்,  சந்திரன்,  யானை,  மயில்,  பாம்பு,  எருது,   வில்-அம்பு போன்ற  300 க்கும் மேற்பட்ட குறியீடுகள் கொண்ட நாணயங்கள் கிடைத்துள்ளன.  இக்காசுகள் பெரும்பாலும் சதுரம்,  நீள் சதுரம்,  வட்டம், நீள்வட்டம்,  முக்கோணம் போன்ற வடிவங்களில் தயாரிக்கப்பட்டிருக்கின்றன.  இவ்வகை நாணயங்கள் இந்தியா முழுவதும் பரவலாக செலவாணியில் இருந்துள்ளன. சங்ககாலத்தில் சேர சோழ பாண்டிய மன்னர்கள் வெள்ளி முத்திரைக் காசுகளை வெளியிட்டுள்ளனர்.

நாணயங்கள் தயாரிக்க பயன்படும் உலோகம்:
        செம்பு, ஈயம், வெள்ளி,  ஒரு சில பொற்காசுகள்  வைகை,  தாமிரபரணி, அமராவதி, தென்பெண்ணை,  காவிரி ஆறுகளின் மேற்பரப்பிலிருந்து பழங்கசு    எடுப்போரால்  எடுக்கப்பட்டுள்ளது.

வடிவமைப்பு
        சதுர,  நீண்ட சதுர வடிவேல் சேர சோழ பாண்டியன் மலையமான் மன்னர்களின் காசுகள் கிடைத்துள்ளன.  ஒரு சில சோழா் மற்றும் சேரர்  காசுகள் வட்ட வடிவத்திலும் கிடைத்துள்ளன.

நெல்லிக்காய் வடிவிலும்,  வேப்பம்பழம் வடிவிலும்  சில பொற்காசுகள் நாணயம் சேகரிப்பாளர்கள் சேகரித்துள்ளனர்.  இப்போர்களில் மூவேந்தரின் புலி, மீன், வில் அம்பு சின்னம் பொறிக்கப்பட்டிருக்கின்றன. இந்த நாணயங்களை பற்றிய மாறுபட்ட கருத்துக்களும் உண்டு.

நாணயங்களில் சின்னங்கள்
         சேரர் சோழர் பாண்டியர் செப்புக் காசுகளில் யானை சின்னம் இடமாகவோ, வளமாகவோ, காசின் முகப்பில் அமைந்துள்ளது.  யானை  உருவத்திற்கு மேலாக  மங்கலச் சின்னங்கள் ஸ்வஸ்திகம்,  கும்பம்,  மத்தளம், திருமறு போன்ற உருவங்களும் சிறு  உருவங்களாக பொறிக்கப்பட்டுள்ளன.  காசுகளின் புறத்தில் அந்தந்த மன்னர்களின் குலமரபுச் சின்னங்களான, வில் அம்பு, புலி, அங்குசம் வரை கோட்டுருவில் மீன்  சின்னம் பதிக்கப்பட்டுள்ளது.  பெரும்பாலும் முகப்பில் யானைச் சின்னமே அச்சிடப்பட்டுள்ளன. குதிரை,  மாடு அல்லது காளை, சிங்கம், மீன்,  ஆமை சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. காசுகளின் எடை 500  மில்லிகிராம் முதல் 16  கிராம் எடை வரை பல்வேறு அளவுகளில் செப்புக் காசுகள் கிடைத்துள்ளன.  காசுகளின்  எடைகள் அவற்றின் மதிப்பை காட்டுவனவாக இருக்கக்கூடும்.

யானை சின்னம்
        சங்ககால காசுகளில் யானை சின்னம் பொறிக்கப்பட்டதன் நோக்கம். அரசர்களின் வலிமையையும் மேன்மையையும் காட்டுவதற்காக இருக்கலாம்.  

மாடு / காளை
        செல்வத்தை குறிப்பிட மாடு சின்னமாகக் கருதப்பட்டது.  வலிமையையும் பொலிவையும் காட்டும் சின்னமாக காளை/எருது  அமையும். நாணயத்தில் சைவசமய சின்னமாக, சிவனின் வாகனமாக கருதப்படும் காளை, நாணயங்களில் பொறிக்கப் பட்டிருக்கக்கூடும். பாண்டியனின் செம்பு  காசுகள்,  சேரனின் செம்புக் காசுகளிலும் மாடு சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.

 நாணயங்களில் மீன்  
         வளமான வாழ்வையும்,  செல்வச் செழிப்பையும்,  நீரின் ஆற்றலையும் கடல் கடந்து தம்  ஆட்சி பரந்து உள்ளதையும் காட்ட  மீன் சின்னம் நாணயங்களில் இடம் பெற்றுள்ளன. நீர்நிலைகளில் வாழும் மீன்கள் தன் குஞ்சுகளை கண் இமைக்காது காப்பது போல,  அரசர்கள் தம் மக்களை பகைவர் தம் படைப்பிலிருந்து காத்து ரட்சிக்க வேண்டும் என்பதைக் காட்ட,  காசுகளில் மீன் சின்னத்தைப் பொறிக்கப்பட்டது எனலாம். 

 காசுகளில் புலி சின்னம்
         வேங்கை புலி  எப்படி பகை விலங்குகளை தாக்குகிறதோ அதுபோல பகைவரை தாக்கி  வீழ்த்துபவன் என்பதை சுட்டிக்காட்ட நாணயங்களில் புலிச்சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது எனலாம்.

சங்க கால சோழ மன்னரின்  வட்ட வடிவ செம்பு காசுகளிலும்,  வட்ட வடிவ ஈயக்  காசுகளிலும் முகப்பில் யானைச் சின்னமும்,  புறத்தில்  புலிச் சின்னமும் பொறிக்கப்பட்டுள்ளன.

குதிரை சின்னம்
       வேந்தன் தன் பகை மன்னர்களை வென்று தன் பெருமையை நிலைநாட்ட பிற மன்னர்களுடன் குதிரை மீது ஏறி போர் புரிகிறான்.  குதிரைகள் வேகம் மற்றும் வீரத்திற்கு  பெயர் பெற்றது இதன் பொருட்டு நாணயங்களில் குதிரை சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. அரேபியா முதலிய அயல்நாடுகளில் இருந்து குதிரைகள் சங்க காலத்திலேயே மரக்கலம் மூலம் கடல் வழி இறக்குமதி செய்யப்பட்டன. குதிரை பூட்டப்பட்ட தேர்களை உடையவன் சங்ககாலச் சோழ மன்னன் என்பதை காட்ட அவர்கள் வெளியிட்ட  காசுகளின் முகப்பில் யானை மற்றும் குதிரை பூட்டப்பட்ட தேர்  சின்னத்தையும் உடன் பொறித்துள்ளனர். குதிரை பெருமையின் சின்னம். 

நாணயங்களில் சிங்கம்
        கானகத்தில் வாழும் மிருகங்களிலும் ராஜாவாக சிங்கம் கருதப்படுவது போல மண்ணகத்து மன்னன் சிங்கம் போன்றவன் என்பதை காட்ட நாணயங்களில் சிங்க சின்னத்தை  பொறித்துள்ளனர். சங்ககாலச் சேரர் வெளியிட்டவட்டவடிவமான செம்புக் காசுகளில் அமர்ந்த நிலையில் சிங்கத்தின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது மற்றும்  பாண்டியர் சோழ நாணயங்களில் சிங்க உருவம் முகப்பில் பொறிக்கப்பட்டிருக்கிறது.

சங்ககால சோழர் காசுகள்
        சோழர்கள் பற்றிய வரலாறு  அசோகரின் 13வது பாறை சாசனம்,பாண்டியர் கேரளபுத்திரா், சத்திய புத்திரருடன், சோழரையும் மௌரிய நாட்டின் அண்டை நாடுகள் என குறிப்பிடுகிறது. சங்க காலச் சோழர் காசுகளின் முன் பக்கத்தில் பொதுவாக யானை உருவமும்,  பின்புலத்தில் புலி, வெளியிட்ட மரம்,  குடை,  வேல் போன்ற சின்னங்கள் பொறிக்கப்பட்டிருக்கும்.  இவ்வகை காசுகள் கிமு இரண்டாம் நூற்றாண்டு அல்லது கிபி இரண்டாம் நூற்றாண்டு வரை புழக்கத்திலிருந்த காசுகளாக இருக்கலாம்.  சங்ககால சோழ அரசர்கள் உறையூரை தலைநகரமாகவும்,  காவிரிப்பூம்பட்டினம் (பூம்புகார்)  துறைமுகமாகவும் விளங்கின.  சங்ககால சோழர் மன்னர்களில் குறிப்பிடத்தக்கவராக விளங்குபவர் கல்லணையை கட்டிய கரிகால்வளவன், நலங்கிள்ளி,  நெடுங்கிள்ளி, பெருநற்கிள்ளி போன்றவர்கள்.  இவருக்கு முந்தைய அல்லது பிந்தைய மன்னர்களின் வரலாற்றுப் பதிவு எதுவும் நமக்கு கிடைக்கவில்லை.  சங்ககால சோழர் காசுகளின் எழுத்துப் பொறிப்புள்ள காசு எதுவும் இதுவரை நமக்கு கிடைக்கவில்லை.  காசுகளில் பொறிக்கப்பட்டுள்ள குறியீடுகள் மற்றும் சின்னங்கள் கொண்டு கால வரையறை செய்யவேண்டியுள்ளது.  இக்காசுகள் சதுரம் நீள் சதுரம் வட்ட வடிவங்களில் உள்ளன.

சங்ககால சேரர் காசுகள்
          சேர அரசர்களைப் பற்றிய வரலாறு பத்துப்பாட்டு விதம் பாடிய 100 பாடல்களின் தொகுப்பு பதிற்றுப்பத்து ஆகும். முதல் பத்துப் பாடல்களும் இறுதிப் பத்து பாடல்களும் நமக்கு கிடைக்கவில்லை எஞ்சியவை சேரலாதன், இரும்பொறை மரபுகளின் வரலாற்றை கூறுகின்றன.சேர நாடு என்பது இன்றைய கேரளம்,  கொங்கு மண்டலமும் சேர்ந்த  பகுதியாகும்.  இவர்களின் தலைநகரம் கரூர் ஆகும். இவ்வகை காசுகள் பெருவாரியாக செம்பு உலோகத்திலும், சிலவகை காசுகள் வெள்ளி,  ஈயம் உலோகங்களிலும் கிடைத்து வருகின்றன.  இவ்வகை காசுகளில்  முன் பக்கத்தில்  யானை, குதிரை, சிங்கம் இவைகளோடு மங்கலச் சின்னங்கள் அல்லது தொட்டி, பிறை, பரசு  கட்டாரி, பனைமரம்,  சக்கரம் இன்ன பிற உருவங்கள் பதிக்கப் பெற்று இருக்கின்றன.  பின்பக்கத்தில் வில் அம்பு, அங்குசம் உள்ளன. 

 சங்ககால சேரர் காசுகளில் குறிப்பிடத்தக்கவர்கள் இரும்புறை,  கொள் இரும்புறை, குட்டுவன் கோதை,  மாக்கோதை,  என்று தமிழ் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட காசுகள், இவை சங்க கால சேரர்களின் வரலாற்றை அறிய ஆவணங்களாக திகழ்கின்றன.

சங்ககால பாண்டியர் காசுகள்
         சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமை பாண்டியர்களையே சேரும்.சங்ககால பாண்டியர் பற்றிய செய்திகள் நற்றிணை, புறநானூறு, பரிபாடல், திருமுருகாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, ஆகிய நூல்களில் இடம்பெற்றுள்ளன. இன்றைய மதுரை, இராமநாதபுரம்,  திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களே அன்றைய சங்ககால பாண்டியர் நாடாக விளங்கியது.  மதுரையே தலைநகராக திகழ்ந்தது.  முடத்திருமாறன் அறிவுடைநம்பி,  நன்மாறன்,  பெருவழுதி,  நெடுஞ்செழியன்,  மாறன்  ஆகியோர் சங்ககால பாண்டிய பாண்டிய மன்னர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள். இவர்கள் பற்றிய குறிப்பு  சங்க இலக்கிய  நூல்களில் காணப்படுகின்றன.  இவர்கள் வெள்ளி,  செம்பு, ஈயம்  போன்ற உலோகங்களில் காசுகள் வெளியிட்டு இருக்கிறார்கள்.  இருப்பினும் செம்புக் காசுகளே அதிக அளவில் கிடைக்கின்றன.  இவ்வகை காசுகள் சதுரம், நீள் சதுரம்,  வடிவங்களில் கிடைத்து வருகின்றன.  இக்காசுகளின் முன்பக்கத்தில்  வலது அல்லது இடது பக்கம் நோக்கி நிற்கும் யானையும் சிங்கமும்,  அதனுடன் மீன் அல்லது வேல்,  சூலம், தொட்டிக்குள் இரண்டு அல்லது நான்கு ஆமைகள், வேலியிட்ட மரம்,  திரிசூலம்,  மங்கலச் சின்னங்கள் இவற்றில் ஏதாவது ஒன்றும், பின்பக்கத்தில் பெரும்பாலும் மீன் குறியீட்டு சின்னம் பொறிக்கப்பட்டிருக்கிறது.  இவர்களின் ஆட்சிக்காலம் கிமு 3 ஆம் நூற்றாண்டு முதல் கிபி மூன்றாம் நூற்றாண்டு வரை கிபி 300க்கு பின் களப்பிரா் படையெடுப்பால் சங்க கால பாண்டியன் ஆட்சி  முடிவுக்கு வந்ததாக கருதப்படுகிறது.  சங்க காலப் பாண்டியர் காசுகள்.  பெருவழுதி,  செழியன்,  மாறன் எழுத்துப் பொறிப்புள்ள காசுகள் கண்டறியப்பட்டுள்ளன இக்காசுகளை தவிர்த்து மற்ற காசுகளில் எழுத்துப் பொறிப்புள்ள காசுகள் நமக்கு இதுவரை கிடைக்கவில்லை.

மலையமான்
            மலையமான் என்ற சிற்றரசன் திருக்கோவிலூரை தலைமையகமாகக் கொண்டுஆட்சி புரிந்துள்ளான். மலையமான் காசுகளில்  முன்பக்கம் குதிரைச் சின்னமும்,  அதனுடன் அங்குசம்,  நந்திபாதச் சின்னம், பிறை,  எருதுதலை, மேடையில் ஒரு தொட்டி போன்ற சின்னங்களில் ஒன்று அமைந்திருக்கும்.  அதன் பின் பக்கத்தில்  மலை முகடுகளும்,  நதியும்,  நதியில் மீன்கள் நீந்துவது போன்ற உருவங்கள் பதிக்கப்பட்டிருக்கும்.  இவ்வகை காசுகள் திருக்கோவிலூர் சுற்றுவட்டாரங்களில் கிடைத்துவிடுவதால்,  சங்ககால மலையமான் காசுகளாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்தக் காசுகள் சதுர நீள்சதுர வடிவங்களில் செம்பு உலகத்தில்  கிடைத்து வருகிறது. மலையமான், காரி  என பெயர் பொறிக்கப்பட்ட காசுகளும் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆங்கிலேயர் காசுகள்
      எல்லிஸ் என்பார் 1810 ஆம் ஆண்டு முதல் 1819 ஆண்டு வரை சென்னை மாகாணத்தில் பிரித்தானிய அரசின் கீழ் பணியாற்றிய அதிகாரி ஆவார்.
இவர் மாநில நிதி அதிகாரியாகவும், அக்கசாலை (Mint)யின் தலைவராகவும் இருந்த காரணத்தால்,

திருவள்ளுவர் உருவம் பொறித்த (புழக்கத்தில் வராத) தங்க நாணயங்களை வெளியிட்டார் என்று தெரிகிறது.

இந்நாணயங்களை அண்மைக் காலத்தில் நாணயவியல் அறிஞர்கள் ஐராவதம் மகாதேவன்  மற்றும் அளக்குடி ஆறுமுக தாராமன் ஆகிய இருவரும் கண்டுபிடித்துள்ளனர்.

தங்கசாலை.
        இந்திய நாணயங்களும், பிரிட்டீஷ் நாணயங்களும் சேர்ந்து புழங்கிக் கொண்டிருந்த 19-ம் நூற்றாண்டின் மக்களுக்காக இந்தியாவின் வராகன்களும், பிரிட்டிஷாரின் ஜார்ஜ் படம் போட்ட நாணயங்களும் சேர்ந்தே தயாரிக்கப்பட்டன. அதற்கான நாணயத் தயாரிப்புக் கூடம் முதலில் கோட்டையில்தான் இருந்தது. பின்னர், ஏழுகிணறு என்று அழைக்கப்பட்ட இன்றைய வள்ளலார் நகர் பகுதியில் அந்தத் தயாரிப்புக் கூடம் இயக்கப்பட்டது. இன்றும் தங்கசாலை என்றும் மின்ட் என்றும் அந்தப் பகுதி அழைக்கப்படுகிறது. அங்கே வராகன், பகோடா உள்ளிட்ட இந்திய நாணயங்கள் தயாராகின. வராகன் என்பது திருமாலின் வராக அவதாரத்தைச் சின்னமாகப் பொறித்த நாணயமாகும். நாயக்கர் ஆட்சி கால இறுதிகட்டத்தில் இருந்த அந்த நாணயத்தில் அவர்கள் பின்பற்றிய வைணவக் கடவுளான வராக அவதாரச் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது.

       பகோடா என்பது காசுகளில் குறைந்த மதிப்பு உடையது. 
மின்ட் என்று அழைக்கப்பட்ட அந்த நாணயக் கூடத்தில் வெகு ஆரம்பத்தில் தங்க மெருகேற்றப்பட்ட வெள்ளி நாணயங்கள் தயாரிக்கப்பட்டன. பிறகு வெள்ளி நாணயங்கள், வெண்கல நாணயங்கள் என தயாரிக்கப்பட்டன. சென்னையில் தயாரிக்கப்பட்ட இந்த நாணயங்கள்தான் இந்தியா முழுதும் புழங்கின என்பதற்காக காலரை தூக்கிவிட்டுக் கொள்ளலாம். ஜார்ஜ் மன்னர்கள், விக்டோரியா ராணிகள் எல்லாம் இங்கே நாணய அச்சில் வார்க்கப்பட்டார்கள்.

          தொண்டி காலணா என்ற பெயரில் ஒரு நாணயத்தை சிறுவயதில் பார்த்திருக்கிறேன். நாணயத்தின் நடுவே ஓட்டை இருக்கும். பலர் அதை இடுப்பில் கட்டியிருக்கும் அரைஞான் கயிற்றில் கோர்த்துக் கட்டியிருப்பார்கள். தாலிக்கயிற்றில் தங்கக் காசுகளைக் கோர்த்துக்கொண்டிருக்கும் பெண்களைப் போல ஆண்களுக்கு காலணா காசுகள் என நினைக்கிறேன். நிறைய இருக்கும்போது இடுப்பிலே கோர்த்து சேமிப்பார்களோ? அந்த நாணயங்கள் வழக்கத்தில் இருந்து மறைந்தபின்னும் சில தாத்தாக்களின் இடுப்பில் அவை நாணயங்களின் சாட்சியாக தங்கிவிட்டதைத்தான் நான் பார்த்திருக்கக் கூடும்.

        மின்ட் பகுதியில் அச்சடிக்கப்பட்டு வந்த நாணயங்கள், பிறகு வேறு  இடத்துக்குப் பெயர்ந்து போய்விட்டது. நாணயங்களும் தங்கத்தில் இருந்து வெள்ளி, வெண்கலம், பித்தளை, செம்பு, அலுமினியம், நிக்கல் என்று அநியாயத்துக்கு தரம் தாழ்ந்து போய்விட்டது.

        தம்பிடி, அரையணா, காலணா, ஓர் அணா, நாலு அணா, எட்டு அணா, பத்து அணா, முக்கா ரூபா போன்ற பிரயோகங்கள் இன்றும் சென்னையில் உண்டு. அதுவும் இன்றைய மின்ட் வாசிகள் அவை தயாரான இடம் இதுதான் என்பதே தெரியாமல்கூட பேசலாம்.

        காலம் எல்லா வரலாற்றையும் காலில் போட்டு மிதித்துக்கொண்டு மதயானை போல போய்க்கொண்டிருக்கிறது. அப்படி புதைந்துபோன வரலாற்றில் இப்படியான சில செப்பு நாணயங்களைத் தேடி எடுப்பதில் ஒரு சுவாரஸ்யம் இருக்கத்தான் செய்கிறது……...

அன்புடன்,
                       ச.பாலமுருகன்,M.A, TPT, PGD.CA,PGD.YOGA ,  PGD.A.E,  D.E.M,    C.G.T.
தொல்லியல் & கல்வெட்டு ஆர்வலர்.