தமிழர் வரலாற்றை ஆவணப்படுத்திய முதலியார் இராஜநாயகம்..!

தமிழர் வரலாற்றை ஆவணப்படுத்திய முதலியார் இராஜநாயகம்..!


இலங்கை தமிழ் மக்களின் வரலாற்று ஆவணங்கள் இன்று முழுமையாக பாதுகாக்கப்படவில்லை. தொல்பொருள் திணைக்களம், சுவடிக் கூடத் திணைக்களம், தேசிய நூலகம் இவற்றிலே பெரும் தொகையான வரலாற்று ஆவணங்கள் இருப்பினும் இவைபற்றிய சரியான விளக்கங்கள் எவையும் பொதுமக்கள் முன்பு வைக்கப்படவில்லை. 
இந்நிலையில் இலங்கையில் தமிழ் மக்களின் வரலாற்றிக்கு எழுத்து வடிவில் வழிகாட்டிய முதலியார் இராசநாயகம் பற்றியும் அவர் எழுதிய பல நுால்கள் பற்றியும் இன்றைய காலகட்டத்தில் ஆய்வு செய்வதுவும் அவசியமானது. 



பூர்வீகம்


முதலியார் ராசநாயகம் யாழ்ப்பாணத்தில் நவாலியூரில் பிறந்தவர். வீரசிங்க உடையாரின் வழித்தோன்றலில் உதித்த செல்லப்பாப்பிள்ளையின் புத்திரர். 1870ம் ஆண்டிலே தோன்றிய முதலியார். இராசநாயகம் கொழும்பு சென்ற் தோமஸ் கல்லூரியின் மாணவன். நீதிமன்றத்தில் மொழி பெயர்ப்பாளராகக் கடமையாற்றிய முதலியார் ராசநாயகம் தனது இறுதிக்காலத்தில் சிவில் சேவிஸ் அதிகாரியாகக் கடமையாற்றினார். இக்காலத்தில்தான் தமிழர் சரித்திரத்திற்கு உயிர் ஊட்டவேண்டும் என்ற எண்ணம் இவருக்கு உண்டாயிற்று. இவருடைய தமிழ் ஆங்கில அறிவு மிகவும் திறமையாக விளங்கியதால்தான் இந்து சாதன பத்திரிகாசிரியரான திரு.வே.திருஞானசம்பந்தப் பிள்ளை. அயோத்தியா காண்டம் என்ற நுாலை முதலியார் இராசநாயகம் அவர்கட்கு அர்ப்பணம் செய்திருக்கின்றார். 


நூல்பெயர் அகராதி


தமிழர் சரித்திரத்தின் பால் சில தரவுகளை நிறுவும் பொருட்டு முதலியார் 1929ம் ஆண்டில் இங்கிலாந்து உட்பட அதிகளவான ஐரோப்பிய நாடுகட்குப் பிரயாணம் செய்துள்ளார். தமிழில் முதலில் நுாற்பெயர் அகராதி ஒன்று வெளிவருவதற்கு உழைத்தவர் முதலியாரே. இந்த அகராதியில் தமிழில் இதுவரை வெளிவந்த நூல்களின் பெயர்கள், ஆக்கியோன் பெயர்கள் யாவும் செவ்வையாக இடம் பெற்று இருந்தன. சுமார் முப்பதாயிரம் நுால்களின் பட்டியல் இதில் இடம் பெற்றிருந்தது. சென்னை நூல் நிலையக் கழகத்தார் கேட்டுக்கொண்டதற்கிணங்க முதலியார் இந்த அகராதியை அங்கு அனுப்பி வைத்தார். சென்னையில் இருந்து வெளிவந்த நுாற்பெயர் அகராதி முதலியார் இராசநாயகத்தின் சேவையை அடிப்படையாகக் கொண்டது. 


பண்டைய யாழ்ப்பாணம்


பண்டைய யாழ்ப்பாணம் எனப் பெயரிடப்பட்டு முதலியார் ராசநாயகத்தால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட சரித்திர நுால் இத்துறையில் ஒரு முன்னோடி முயற்சி எனலாம். இந்நூல் தமிழ் மக்களின் எழுச்சியையும் வரலாற்றையும் மிகைப்படக்கூறும் ஒன்றென சில ஆய்வாளர்களால் குறிப்பிடப்படுகிறது. ஆயினும் தமிழர் சரித்திரத்தில் இது ஒரு முன்னோடி முயற்சி என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. இந்த நூலை எழுதுவதற்கு வரலாற்று ஆசிரியர்கள் கொட்றிங்ரன் தொடர்புகளும் ஏற்பட்டிருக்கலாம் எனச் சுட்டிக் காட்டப்படுகின்றது. 


கூழங்கைச் சக்கரவர்த்தி


யாழ்ப்பாண சரித்திரத்தில் உண்மை என நம்பப்பட்டு வந்த சில குருட்டு நம்பிக்கைகட்கு முதலியார் ஆப்பு வைத்தார். யாழ்ப்பாண சரித்திரத்தில் கூழங்கை சக்கரவர்த்தியின் பங்கு உள்ளது. இப்பெயருக்கு அளவில் குறைந்த கைகளையுடையவன் என்றே பொருள் விளங்கப்பட்டது. அதனால் இப்பதம் காலிங்கச் சக்கரவர்த்தி என்றே அவரால் நிறுவப்பட்டது. காலிங்க சக்கரவர்த்தி என்ற பதம் கூழங்கை சக்கரவர்த்தி என மாறும் தன்மையுடையது. காலிங்க சக்கரவர்த்திகள் ஆட்சி யாழ்ப்பாணத்திலும் சிங்களப்பிரதேசங்களிலும் நடைபெற்றே இருக்கின்றது. தாம் ஆட்சி நடத்திய இடங்கள் எல்லாவற்றிலும் இவர்கள் 'சிங்க' என்று தொடங்கும் பெயர்களை இட்டிருக்கின்றார்கள். 'சிங்கப்பூர்' என்ற பெயர் முதலில் காலிங்க சக்கரவர்த்திகளால் 'சிங்கப்பூர்' என இடப்பட்டதாக முதலியார் கருதுகின்றார். காலிங்க நாட்டரசர்களின் தலைநகர் ‘சிங்கப்பரம்' எனப்படும். இக்கொள்கை சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற நுால்களிலும் காணப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் சிங்கை நகர் என பெயரிடப்பட்ட ஒரு நகரும் சிங்கையாரியன் என ஒரு அரசன் இங்கு இருந்ததையும் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறு சுட்டப்படும் ஆரியர்கள் தமிழர்களாகப் பரிணமித்துள்ளார்கள் என்பதுவும் வரலாற்று ஆசிரியரின் ஆய்வாகும். யாழ்ப்பாணகந்தரோடையில் முதலில் செய்யப்பட்ட தொல்பொருள் ஆய்வுகள் முதலியாராலும் பவுல் பீரிஸ் அவர்களாலும் செய்யப்பட்ட முதல் முயற்சிகளாகும்.

கொழும்பு தொல்பொருட்காட்சிச்சாலை ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் அதன் மேற்பார்வையாளர் குழுவின் அங்கத்தவராகச் செயற்பட்டவர் முதலியார் அவர்களாவார். தொல்பொருட்காட்சிச்சாலையில் தமிழர் வரலாற்று மரபு நன்கு பேணப்படவேண்டும் என்பதில் முதலியார் மிக அக்கறையாக இருந்தார். எனவே தமிழ் மக்களின் வரலாறு திரிபுநிலையை அடையக் கூடாது என்பதற்காகப் பல கட்டுரைகளையும் பல நூல்களையும் அவர் எழுதியுள்ளார். இக்கட்டுரைகளும், நுால்களும் மீண்டும் புதுப்பிக்கப்படாவிடின் தமிழர் வரலாற்றிக்கு இவை பெரும் நட்டமாக இருக்கும் என்பதில் ஐயத்திற்கு இடமில்லை. 


முதலியாரால் வெளியிடப்பட்ட சில முக்கிய வரலாற்றுக் கட்டுரைகள் கீழே தரப்படுகின்றன. 


1. Note on ' nagadipa ' R.A.S journal vol xxvi No 70. 


2. Vijayabahu inscription pollanaruwa ibid vol x no 77. 


3. The Tamil kingdom 08 jaffna and the early Greek writings. 


4. The origin of pallavas. 


5 . The alogeswara period (ceylon literary journal). 


நூல்கள்


இவர் வெளியிட்ட நுால்கள் மிகவும் போற்றி பாதுகாக்கப்பட வேண்டியது " Tamil Document in the Archives ” என்ற நுாலாகும். இந்த நுாலுடன் 'KATARAGAMA'  என்ற ஆங்கில நூலும் (1930) தமிழில் எழுதப்பட்ட "யாழ்ப்பாண சரித்திரம்" (1933) ஆங்கிலேயர்காலம் (1934) என்பனவும் இன்று அழிந்து போகும் நிலையில் உள்ளன. இந்த நுால்கள் மீண்டும் வெளிவரின் தமிழர் சரித்திரத்தில் ஒரு மையில் கல்லாக அமையும் என்பதில் ஐயம் இல்லை. 


சுவாமி ஞானப்பிரகாசரும் முதலியார் 


சேது என்று பொறிக்கப்பட்டிருக்கும் நாணயங்கள் யாழ்ப்பாண அரசகால நாணயங்கள் என்றும் அது ஒரு தேசிய இனத்தின் அடையாளம் என்றும் முதல் முதலில் சுட்டிக்காட்டியவர் முதலியாரே! இந்தக்கருத்து பின்பு சரியாக நிறுவப்பட்டதாக சுவாமி ஞானபிரகாசர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழர் வரலாற்றிக்கு உரமளிக்கும் ஆய்வாலர்கள் இவரின் நுால்களை வெளியிட முன்வரவேண்டும்.