இலங்கையில் ஆட்சி செய்த கடைசி மன்னர்..!

இலங்கையில் ஆட்சி செய்த கடைசி  மன்னர்..!

இலங்கையிலுள்ள கண்டியைக் கடைசியாக ஆண்ட தமிழ் மன்னன் விக்ரம ராஜ சிங்கா என்ற கண்ணுசாமி ஆவர். இவர்   வெள்ளையர்களை எதிர்த்துப்போரிட்டு, அவர்களால் கைது  செய்ய பட்டு , தமிழ் நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டார் . அதன் பின் வேலூர்ச் சிறையில் அடைக்கப்பட்டு, தனது 52 -வது வயதில் இறந்து போனார் ”  என்பது வரலாறு .

விக்ரமசிம்மலேந்திர மகாராஜா என்னும் விக்ரமராஜ சிங்கா [1780 - 1832] மதுரை நாயக்க மன்னரின் வழி முறையினர் ஆவார். அவரது முன்னோர் மதுரை நாயக்கரின் மருமகன் ஸ்ரீ நரேந்திர சிங்கா (1709 - 1739), ஸ்ரீ விஜய ராஜ சிங்கா (1739 - 1749) புத்தரின் புனிதப் பல்லுக்கு விழா தொடக்கி வைத்த கீர்த்தி ஸ்ரீ (1747 - 1780), இராஜாதி ராஜ சிங்கா (1780 - 1798) ஆகியோர் ஆவர். இந்த ராஜ சிங்கனுக்கு குழந்தைகள் இல்லை. ஆதலால் அவரது தளவாய் பிலாமி, புதுகோட்டை நாச்சம்பட்டி பகுதி பூலம்பட்டியில் வாழ்ந்த, மன்னரது இளைய மைத்துனர் கண்ணுசாமியை அழைத்து வந்து கண்டி மன்னராக்கினான். அவரே விக்ரம ராஜ சிங்கா. கடற்படை வலிமை கொண்ட ஆங்கிலேயர் இந்தியா மீதான ஆதிக்கத்திற்கு இலங்கை தளமாக அமையும் என்று கருதினர். ஆதலால் இராஜாதி ராஜ சிங்கனின் துணையைப் பெற்று, அவர்கள் திரிகோண மலையைக் கைப்பற்றினர். மேலும் இலங்கை சிற்றர சர்களுக்குள் கலகம் மூட்டவும், இலங்கைப் பகுதிகளில் ஆங்கில நிர்வாக முறையைத் 
திணிக்கவும் செய்தனர்

 

கட்டபொம்மன், திப்பு போன்ற மா வீரர்களைக் கொன்ற பின்பு, ஆங்கில ஆட்சி 19 -ம் நூற்றாண்டின் தொடக்கம் தென்னகத்திலிருந்த தன் கவனத்தை இலங்கை மீது திருப்பிற்று. அதே நேரம், கண்டி ராஜன் ஸ்ரீ விக்ரம ராஜ சிங்கன் வெள்ளையர் ஆதிக்கத்தை வெறுத்து, எதிர்த்து அவர்களை அகற்றப் போராடத் தொடங்கினார் . பதினெட்டு வயதில் அரசரான விக்ரம் ராஜ சிங்கா 1798 முதல் 1815 வரை அரசாண்டார். பிரித்தாளும் சூழ்ச்சி மிக்க வெள்ளையர் அவரது அண்ணன் முத்துசாமி தளவாய் பிலாமி ஆகியோரைப் பயன்படுத்தி அவரை வீழ்த்தினர் (1815 மார்ச் , 2). வழக்கம்போல் தமக்கு உதவியவர்களையும் பின்பு வெள்ளையர்கல்  அழித்தனர்.

விக்ரமராஜனின் வீழ்ச்சியோடு முழு இலங்கையும் ஆங்கிலேயர் கைக்குள் வீழ்ந்தது. மன்னரும் உறவினர் 21 பேரும் தமிழகத்திற்கு நாடு கடத்தப்பட்டனர். இலங்கை கவர்னர், சென்னை மாநில கவர்னருக்கு விக்கிரம ராஜரை பாதுகாப்பில் வைக்கத்தக்க கோட்டையோடு கூடிய இடம் ஒன்ற ளிக்கக் கேட்டு கடிதம் எழுதினார் (8 - 4 - 1815). நீண்ட கடிதத் தொடர்புகளுக்குப் பின் வேலூர்க் கோட்டையே தக்ககாவல் அமைப்புடையது என்று தீர்மானிக்கப்பட்டு விக்கிரம ராஜா வேலூரில் வைக்கப்பட்டார் ( 8 - 3 - 1816 ). சிறை வாழ்க்கையெனினும் சிம்மத் தமிழனாய் வாழ்ந்தார் மன்னர் விக்கிரம ராஜ சிங்கா.

அது கண்ட கும்பினி ஆட்சி, மன்னர் மணிமுடி தரிக்கக் கூடாது எனவும் பொன்னிழைத்த கிரீடத்தை உருக்கி வேறு நகைகளாக செய்துகொள்ள வேண்டுமெனவும் ஆணையிட்டது. அவரது அணி மணி தகுதிகள் குறித்தும் கட்டுப்பாடு விதித்தது. மேலும் வேலூரில் அவரோடு தங்க வைக்கப்பட்ட அவரது உறவினர்களைப் பிரித்து அனுப்பி வைத்தனர்.மன்னனுக்குப் பல்லக்கும், சுமக்க பணியாட்களும் வழங்கப்பட்டன (17 - 3 - 1817). அப்பல்லக்கு மன்னருக்குரிய சிறப்புகளுடன் இல்லாததால், கர்நாடகப் பல்லக்கு போன்றதொன்றை தமக்கு வழங்குமாறு அவர் வேண்டிக் கொண்டார். 17 ஆண்டுகள் ஆட்சி நடத்திய விக்ரம் ராஜா 17ஆண்டுகள் வேலூர் கோட்டைச் சிறையில் நலிந்து 1832 - ல் மரணம் அடைந்தார். விக்ரம் ராஜாவின் கல்லறை, வேலூர் - சித்தூர் சாலையில் பாலாற்றின் தென்கரையில் பழைய பாலத்திற்கு மேற்கில் அமைந்துள்ளது. மன்னரது உறவினர் அவரது கல்லறை அமைக்கவும், சடங்குகளுக்காகவும் அருகந்தம்பூண்டி , கொணவட்டத்தில் 10 காணி நிலம் பெற்றனர். மன்னரது கல்லறையில் காணும் வாசகம் இது : "His Majesty Sri Vikramaraja Singha Last Ex - King of Kandy - Died 1832 " "கண்டி மகாராஜா ஸ்ரீவிக்ரம ராஜசிங்கா மரணம் - 1832 " அதனருகே அவரது மூன்று பட்டத்தரசிகள் மற்றும் உறவினரது கல்லறைகள் மொத்தம் ஏழு உள்ளன.

இவை யாவும் இலங்கைக் கட்டடக் கலை மரபைச் சார்ந்து அமைக்கப்பட்டவை ஆகும் .

மன்னர் விக்ரமராஜ சிங்காவுக்குப் பின் அவரது உறவினர்கள் பலர், தஞ்சையில் அவர்களுக்கென அமைக்கப்பட்ட கண்டி ராஜா அரண்மனையில் வாழ்ந்தனர். அவ்வாறு, தஞ்சையில் வாழ்ந்த விக்ரம் ராஜ சிங்கா வின் பேரர் ரங்கராஜா (மறைவு 1944 ), அவரது மனைவி ராஜலட்சுமி (மறைவு 1944) ஆகியோரது அஸ்திகளும் வேலூருக்கு எடுத்து வரப் பட்டு மன்னர் கல்லறைக்கருகில் புதைக்கப்பட்டன.

    


அயலவர் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய தமிழ் மன்னன் விக்ரம் ராஜ சிங்கனது வீரத்தைப் போற்றி நினைவுகூரும் வகையில் அழகியதொரு முத்து மண்டபம் மன்னரது கல்லறையையொட்டி தமிழ்நாடு அரசால் கட்டப்பட்டுள்ளது.