நாகபட்டினம் மாவட்டம், நன்னிலம் வட்டம் திருப்பாம்புரம் ஊரில், சேடபுரீசுவரர் கோவிலின் கருவறை தெற்கு, மேற்கு, வடக்குப்புற பட்டிகைளில் உள்ள 6 வரிக் கல்வெட்டு.


நன்றி : சேசாத்திரி ஸ்ரீதரன் 


நாகபட்டினம் மாவட்டம், நன்னிலம் வட்டம் திருப்பாம்புரம் ஊரில், சேடபுரீசுவரர் கோவிலின் கருவறை தெற்கு, மேற்கு, வடக்குப்புற பட்டிகைளில் உள்ள 6 வரிக் கல்வெட்டு.

ஸ்வஸ்தி ஸ்ரீ கோற்சடபன்மர் திருபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ ஸுந்தர பாண்ட்ய தேவர்க்கு யாண்டு 23 வது மகர நாயற்று அப[ர]பக்ஷத்து த்ருதியையும் பெற்ற ஆலியத்து நாள் உய்யகொண்டார் வளநாட்டு பாம்பூர் நாட்டு பாம்புரமான குலோத்துங்க சோழ சருப்பேதி மங்கலத்து உடையார் திருப்பாம்புரமுடையார் கோயில் ஆதிசண்டேசுர தேவர், கன்மிகளுக்கு. இவ்வூர் திருக்குடந்தை _ _ _ செம்பியன் மாராயனும் முட்டைப் புறத்து சங்கர நாராயண பட்டனும் _ _ _ ணவ _ _ _ _ பிரமாணம் பண்ணிக் குடத்த பரிசாவது. இவ்வூர் பெரும் பற்றப் புலியூர் காசிபன் உலகமுண்டான் இராசநாராயண பிரமராயனும் திரு_ _ _பண்_ _ _சோனா_ _ _ _

முட்டைப்புறத்து சங்கர நாராயண பட்டனும் இவ்மூவோம் இருபத்தொன்றாவதும் இருபத்திரண்டாவதும் வரை_ _ _[கொ]ற்றவாயில்  புவனயர் நிற்கையில் இந்த இ[ராச நாரா]யண பிரம[ரா]யன் நிலை நின்று கடமை இறாமல் ஓடிப்போகையில் இருபத்திரண்டாவது வரை சிகைக்கு நாட்டுக் கணக்கு கீழ் முத்தூருடையார் பேராயிரமுடையார் கணக்குப்படி இவர்பேரால் வந்த _ _ _ இராசநாராயண பிரம்மராயற்கு [பு]ணைப்பட்ட கவுசியன் அழகிய திருச்சிற்றம் பலமுடையான் _ _ _ _ இராசநாராயண பிரமராயற்க்கு [பு]ணைப்பட்ட எங்களை இறுக்க வேணும் என்கையில் இந்த இராசநாராயண பிரமராயன் _ _ _ க்ஷேத்ரமான மனைகளும் நிலங்களும் இன்னாய _ _ _ பாம்புரமுடையார் _ _ _ _

க நாங்கள் புணைவிலையாக விற்றுக் குடுத்தோம். விற்றுக் குடுத்த மனைகளும் நிலங்களுமான இவ்வூர் நத்த[த்]து இவர் மனைகளுக்கு கீழ்பாற்கெல்லை இன்னாயனார் திருமடை விளாகத்து எல்லைக்கு மேற்கு தென்பாற்கெல்லை இன்னா[யனா]ர் திருக்குளத்துக்கு வடக்கும் மேல்பாற்கெல்லை விழாவரு வீதிக்கும் சேலூர் சோலை அரசு பட்டன் மனைக்கும் திருவரங்கமுடையான் பட்டன் மனைக்கு கிழக்கும் வடபாற்கெல்லை விழாவரு வீதிக்கு தெற்க்கு ஆக [இ]சைந்த  இன்னான் கெல்லையுள் நடுவுபட்ட மனைகளும் _ _ _ _ _ ஆற்றுக்கு தெற்குப்பட்ட விளைநிலத்தில் உய்ய வந்த விளாகம் என்று பேர் கூவப்பட்ட நிலத்துக்கு கீழ்பாற்கெல்லை பாம்பூர்க் கிழார் நிலத்துக்கு மேற்க்கும் தென்பாற்கெல்லை ஓடை வாய்க்கா[லுக்கு] வடக்கும் மேல்[பாற்கெல்லை] _ _ _ _

_ _ _ _ __  கீழ்பாற்கெல்லை பெருமருதூர் திருசெல_ _ பலவூர் சதிர பட்டன் நிலத்துக்கு வடக்கு மேற்பாற்கெல்லை_ _ _ உடையான் பட்டன் நிலத்துக்கு மேல்பாற்கெல்லை _ _ _ பட்ட ரு இரண்டு மாவும் _ _ _ _ [வ]டக்கடை _ _ _ என்று பேர்கூவப்பட்ட நிலத்துக்குக் கீழ்பாற்கெல்லை வீற்றிருந்தான் பட்டன் நில்த்துக்கு மேற்கு

கெல்லை _ _ _ _ மாதேவ பட்டன் உள்ளிட்டார் நிலத்துக்கு வடக்கும் மேற்பாற்கெல்லை கவுணியன் செம்பியன் மாராயந் பட்டன் நிலத்துக்கு கிழக்கும் வடபாற்கெல்லை கோன் நிலத்துக்கு இசைந்த இன்னான் கெல்லையுள் நடுவுபட்ட ரு இரண்டு மாவும் தத்தமான்னாற்றுக்கு வடக்கு _ _ம் பற்றூரூடையான் உய்ய கொண்டான்_ _இவன்_ _ _ _நத்தத்துக்கு கீழ்பா

ற்கெல்லை_ _ _ற்றூர் நத்தத்துக்கு வடக்கும் மேல்பாற்கெல்லை உடையார் பாம்புரமுடையார் திருநாமத்துக்காணி_ _ _ (கல்வெட்டு நிறைவுறாமல் நிறுத்தப்பட்டுள்ளது).

அபரபக்ஷம் – தேய்பிறை; ஆதிசண்டேசுவரர் – சிவன் கோவிலகளில் முதல் மரியாதை செலுத்தப்படுபவர்; கன்மிகள் – கோவில் பொறுப்பாளர்; பிரமாணம் – உறுதி ஏற்பு ஆவணம்; பரிசாவது – ஏற்பாடு, வகை, விவரம்; நிற்கையில் – சாட்சியாக இருக்க; கடமை இறாமல் – அரசுக்கு செலுத்த வேண்டிய வரிஇனங்களை செலுத்தாமல்; புணை – பிணை, surety, collateral security, ஆள் ஜாமின்; க்ஷேத்ரம் – வயல் நிலங்கள், வீடு இவை யாவும்; பிரம்மராயன் – மன்னனால் கோவில் செயற்பாட்டை கவனிக்க அமர்த்தப்படும்  பிராமண அதிகாரி.

விளக்கம்:  சடவர்ம சுந்தர பாண்டிய தேவரின்  23-ம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 1273) நாகை மாவட்டம் நன்னிலம் வட்டம் திருப்பாம்புரம் சேடபுரீசுவரர் கோவிலில் வெட்டப்பட்ட கல்வெட்டு இது. ஆதிசண்டேசுவர தேவரை வணங்கி கோயில் பொறுப்பாளர்களுக்கு தெரிவிக்கும் விவரமாவது "திருக்குடந்தை கவுணியன் செம்பியன் மாராயனும் முட்டைப்புறத்து சங்கர நாராயண பட்டனும் இந்த உறுதி ஏற்பு ஆவணத்தில் செய்து கொடுத்த ஏற்பாடு யாதெனில், இவ்வூரில் வாழும் பெரும் பற்றுப் புலியூர் காசிபன் உலகமுண்டான் இராசநாராயண பிரம்மராயனும், திரு_ _பண்_ _ _சோனா_ _ _, முட்டைப்புறத்து சங்கர நாராயண பட்டனும் ஆகிய இம்மூவரும் சுந்தர பாண்டியனின் 21-22 ஆம் ஆட்சிக் கால கட்டத்தில் கொற்றவாயில் புவனயர் சாட்சியாக இருந்திட இம்மூவருக்கும் இடையே ஒருவர் தவறினால் மற்றவர் அவர் சார்பாக வரி கட்டுவது என்ற பிணை (surety) ஒப்பந்தம் ஏற்பட்டது. இவ்வாறான நிலையில் இந்த இராசநாராயண பிரம்மராயன் தன் கடமையில் வழுவாது நின்று அரசிற்கு செலுத்த வேண்டிய வரிஇனங்களை கட்டாமல் எங்கோ போய் மறைந்தான்.  நாட்டுக் கணக்கர் கீழ்முத்தூருடையார் பேராயிரமுடையார் ஆகியோரின் கணக்குப்படி இந்த இராசநாராயண பிரம்மராயன் பேரில் 22 –ம் ஆட்சி ஆண்டில் செலுத்த வேண்டிய வரி நிலுவையை அவருடன் இன்னொரு பிணையில் உள்ள கவுசியன் அழகிய திருச்சிற்றம்பலமுடையான் இராசநாராயண பிரம்மராயனோடு பிணையப்பட்ட எங்கள் இருவரையும் (திரு_ _பண்_ _ _சோனா_ _ _, முட்டைப்புறத்து சங்கர நாராயண பட்டன் ஆகியோர்) கட்டச் சொன்னான். ஆகையால் இந்த இராசநாராயண பிரம்மராயனுக்கு சொந்தமான நிலங்களை இதாவது, வீடு விளைநிலம் ஆகியனவற்றை திருப்பாம்புர ஈசனுக்கு பிணைக்கு விலையாக விற்றுவிட்டோம்” என்று கூறியுள்ளனர். இந்நிலங்கள் பற்றிய எல்லை விவரங்கள் எஞ்சிய வரிகளில் குறிக்கப்பட்டுள்ளன.

கல்வெட்டுச் செய்தி நிறைவு செய்யப்படாமல் அப்படியே பாதியில் நிறுத்தப்பட்டுவிட்டது. ஒரேஒரு ஆண்டிற்கான வரியை கட்டாததாலேயே ஒருவரது உடைமை முழுவதையும் விற்றுவிடுவது ஞாயமா? உடைமையின் மதிப்பு வரிநிலுவையை விட அதிகமாகத்தானே இருக்க வேண்டும்? என்ற கேள்வி எழுகின்றது. கல்வெட்டில் பிணைக்கட்ட அனைவரும் பிராமணர் என்று தெரிகின்றது.

இக்கல்வெட்டின் மூலம் பண்டு ஒருவருக்கு ஒருவர் பிணை (ஆள் ஜாமீன்) கொள்ளும் முறை சமூகத்தில் இருந்தது தெள்ளப் புலனாகின்றது. அதோடு பிராமணரும் மற்றவரைப் போல வரி கட்ட வேண்டி இருந்தது என்பதற்கு இக்கல்வெட்டு ஒரு நல்ல சான்றாகும். இதுவல்லாமல் பிராமணர் அந்தராயத்தில் அடங்கும் நெல் வரி, காசாய வரியில் அடங்கும் குடிமகண்மை வரி, வீட்டிற்கான வாசல் வரி உள்ளிட்ட பல வரிகளையும் கட்ட வேண்டும் என்பதை மேலும் சில கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகின்றது. எனவே பிராமணர் வரி கட்டாமலேயே அரசு சலுகை பெற்று சுகபோக வாழ்க்கை வாழ்ந்தனர் என்ற பரவலான கருத்து பிழையானது என்று தெரிகின்றது. எனவே யார் என்ன எழுதினாலும் சொன்னாலும் அதன் உண்மைத் தன்மை என்ன என்று தக்க சான்றுகளுடன் ஆராய வேண்டிய கட்டாயக் கடமை நம் அனைவருக்கும் உள்ளது.

பார்வை நூல்: நன்னிலம் கல்வெட்டுக்கள் – I, எண்: 138/1977, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு.