கரந்தை காட்டும் சோழம்.

கரந்தை காட்டும் சோழம்.

பல செப்பேடுகளில் திருமாலின் அவதாரமாகக் காட்டப்படும் இராஜேந்திர சோழன், வைணவ அந்தணர்களுக்கு, திரிபுவனமாதேவி சதுர்வேதி மங்கலம் என்ற பெயரில், ஒரு பெரும்  கிராமத்தையே, அவர்களது வாழ்வாதாரத்திற்காகத் தானமாய் தந்ததைக் குறிப்பிடுவது கரந்தைச் செப்பேடு. 

இராஜேந்திரரின் எட்டாவது ஆட்சியாண்டில், கிபி 1020ல் எழுதப்பட்ட இச்செப்பேடு, 57 இதழ்களைக் கொண்டது. இதழ்கள் ஒரு வளையத்தில் கோர்க்கப்பட்டு, இராஜேந்திரரின் அரசமுத்திரையோடு உள்ளது.

அரசமுத்திரையில், ஒரு புலி, தனது இரு கால்களை மடக்கிய நிலையில், அமர்ந்திருந்தாலும், அதனுடைய வால், முன்னங்கால்வரை உயர்ந்துள்ளது புலியின் வீரத்தையும், கோபத்தையும் இணைத்தே காட்டுவது சிறப்பு.

கரந்தைச் செப்பேடு நிலதானம், வாய்மொழியாக ஆணையிடப்பட்டது, இராஜேந்திரரின் எட்டாவது ஆட்சியாண்டு, 107 ஆவது நாள். இது பல சோழ அதிகாரிகளால் அலசப்பட்டு, சரிபார்க்கப்பட்டு, தானமளித்த நிலங்கள் அளக்கப்பட்டு, உரியவரிடம் தானநிலம் ஒப்படைக்கப்பட்டபின், செப்பேட்டில் எழுதப்பட்டது. செப்பேடு எழுதப்பட்ட நாள்.. அதே எட்டாம் ஆட்சியாண்டின் 280ஆவது நாள். 
அதாவது வெறும் 173 நாளில், அரசனின் வாய்மொழி ஆணை முறையாக நிறைவேற்றப்பட்டு, பதியப்பட்டிருக்கிறதெனில், அந்த நிர்வாகத்தின் வேகமும், ஆற்றலும், திறமையையும் பற்றி சற்று யோசித்துப் பாருங்கள்.

எதிரிகளுக்கு எமன், களத்தில் தயவுதாட்சண்யமே காட்டாதவன், தவறுகளுக்கு தண்டனையைத் தவிர வேறு எதையுமே பரிசாகத் தராதவன் என்றெல்லாம் குறிப்பிடப்படும் இராஜேந்திரரின் இன்னொரு பக்கத்தை, கரந்தைச் செப்பேட்டின் சில வரிகள் கூறும்போது, நெஞ்சம் நெகிழ்வதென்னவோ உண்மை.

அது என்ன என பார்ப்போம்...

பெரும்பற்றப்புலியூர் மாளிகையில் இராஜேந்திர சோழர் அமர்ந்திருக்கும் வேளை. அவருடைய அமைச்சர் ஜனநாதன் என்பவர் 1080 அந்தணர்களுக்கு வேண்டி, நிலதானம் தருமாறு கோரிக்கை விடுக்க, அவரின் வேண்டுகோளினை ஏற்று, 57 கிராமங்களை ஒன்றிணைத்து, தன் தாயான திரிபுவனமாதேவியின் பெயரில் தானமாக வழங்குகிறார்.

இந்த நிலதானக் கொடையின் முதல்பகுதியிலேயே, ஒரு வேண்டுகோளும் வைக்கிறார். 
யாருக்கு.?.. எதிர்கால சந்ததியினருக்கு.
என்னவென்று ? 
இது அரசனின் கொடை.. காப்பாற்றப்படவேண்டும்... கடைபிடித்தே ஆகவேண்டும்.. இல்லையேல் உயிர் போய்விடும்.. என மிரட்டலாகவா.?..
இல்லை.. இல்லை.

தென்கிழக்காசிய நாடுகளை எல்லாம் வென்ற மாவீரன்.
உலகத்தின் கால்பகுதியை தன் காலடியில் வைத்திருந்தவன்.
கடல்கடந்து வெளிநாடுகளை வென்ற முதல் வீரன்.
இராஜேந்திர சோழன்.. வைத்த வேண்டுகோளை கவனியுங்கள்.

"இராஜேந்திர சோழனாகிய நான், உலகம் என்ற ஏரியில் விளையாடும் அன்னப்பறவை போன்றவன்.
தைரியம், அறிவு, அன்பு, செல்வம், இரக்கம் போன்றவை என்னிடம் அதிகம் உள்ளன.
புலவர்கள் என்னிடம் விவாதிக்கும்போது, அவர்களின் வார்த்தைகளில் உள்ள உண்மைகளுக்கு மதிப்பளிப்பவன்.
இப்பிறப்பிலும், மறுபிறப்பிலும் சொல்லப்படும் தத்துவங்கள் முழுதும் அறிந்தவன்.
என்னிடம் போரில் தோற்ற பகை மன்னர்களும், சிற்றரசர்களும், என் பாதத்தை தொடர்ந்து வணங்குவதால், அவர்களது தங்கத்தினாலான மணிமுடி என் காலில் பட்டு என் கால்கள் பளபள என மின்னுகின்றன.
அத்தகைய #இராஜேந்திரன் ஆகிய நான், எதிர்காலத்தில் அரசனாக வருகின்றவர்களிடம் எனது தலைதாழ்த்தி, வணங்கி, யாசித்து வேண்டிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான்.
நான் தருகின்ற இக்கொடையை தயவுசெய்து காப்பாற்றுங்கள்.”

இவைதான் அந்த வரிகள். ஏழை அந்தணர்களின் வாழ்வாதாரத்திற்காக தான் அளித்த நிலக்கொடை எக்காலத்திலும் காப்பாற்றப்பட்டு, தொடரவேண்டும் என்ற நல்லெண்ணத்தில், ஒரு மாபெரும் பேரரசன், அடுத்து வரப்போகும் அரசர்களின் காலில் விழுந்து யாசிக்கிறான் எனில், 

நல்லவற்றிற்காக, ஒரு சமூகத்தின் நல்வாழ்விற்காக, தன் நிலையைக் கூடத் தாழ்த்திக்கொண்டு, கொண்ட நல்லெண்ணத்தை நிறைவேறச் செய்யவேண்டும் என்ற நோக்கில், தான் எப்பேர்ப்பட்டவன் என்பதையும் உரைத்து, எதற்காக அடக்கத்தோடு யாசிக்கிறான் என்பதையும் தெளிவுபடுத்தி இருக்கிறது கரந்தைச் செப்பேட்டு வரிகள்.

பேரரசனே ஆயினும், மனித வாழ்வு நிலையில்லாதது என்பதை உணர்ந்திருக்கிறான். தானோ, தன் வம்சமோ நாளை இல்லாவிடினும், கொடுத்த தானமும், அதனால் பயனடைந்தவர்களின் வாழ்வும் நிலைத்து நீடூழி நிற்கவேண்டும் என்பதற்காக, தனது நிலையை தாழ்த்திக்கொண்டு யாசிக்கிறான்.

மற்றவர்களை மண்டியிட வைக்கும் வீரமும்,
மற்றவர் நலனுக்காக மண்டியிடத் தயங்காத நற்குணமும்
கொண்டதுதான் சோழர் பண்பாடு என்பதை உயர்த்தியே காட்டி நிற்கிறது கரந்தைச் செப்பேடு.

எழுத்தாக்கம் : உளிமகிழ் ராஜ்கமல்.