பாண்டிய மன்னன் இடத்தில் பிராமணருக்கு மட்டும்தான் சலுகையா ?

நன்றி : சேசாத்திரி ஸ்ரீதரன் 

பிராமணருக்கு மட்டும்தான் சலுகையா ?

இந்தியத் துணைக் கண்டத்தில் சற்றொப்ப ஒரு லட்சம் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டு உள்ளன. இவற்றுள் பிராமி, பிராகிருத கல்வெட்டுகள் தவிர்த்து பெரும்பாலன கோவில் சார்ந்த கல்வெட்டுகளே. இவற்றில் கோவிலுக்கு நன்கொடைகள் தந்த செய்திகளே அதிகம் இடம்பெற்றுள்ளன. தமிழ்க் கல்வெட்டுகள் 60,000 மேல் உள்ளதாக அறியப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டுகள் யாவும் பிராமணர்களின் இசைவால் கோவில் சுவற்றில் பொறிக்கப்பட்டவை. எனவே பிராமணரால் தான் இந்த வரலாற்றுப் பதிவு நமக்கு கிட்டியுள்ளது. பிராமணரின் கோவில் தொடர்பால் அவர்களைப் பற்றிய குறிப்புகள் அவற்றில் அதிகம் உள்ளன.

கல்வெட்டில் அறியப்படும் சதுர்வேதி மங்கலங்கள் ஆற்றுப் பாசனத்தை சார்ந்த பிராமணக் குடியேற்ற ஊர்கள் ஆகும். பிரம்மதேயம் என்பது ஒரு பிராமணருக்கு தனிப்பட்ட முறையில் விலையில்லாமல், ஆவணப்பதிவுக் (registration fee) கட்டணம் இல்லாமல் மன்னனால் கொடுக்கப்பட்ட நிலங்கள் ஆகும். எனினும் பிரம்மதேயமாக அறிவிக்கப்பட்டு நேரடியாக மன்னனிடம் இருந்து முதன் முறையாகப் பெறும் பிராமணருக்கு மட்டும் தான் இந்த சலுகை கிடைக்கும். அங்ஙனம் பிரம்மதேய நிலத்தை பெற்ற ஒரு பிராமணர் வேறு ஒருவருக்கு அந்நிலத்தை விலைக்கு விற்றால் அது ஆவணப்  பதிவுக் கட்டணம் கட்டப்பட வேண்டியதாகின்றது. அதோடு இந்த விற்பனை நிகழ்வால் அந்நிலம் பிரம்மதேயம் என்ற பொருளையும் இழந்து விடுகின்றது என்பதை பலரும் உணர்ந்திருப்பது இல்லை.

இதே போல் தவறாகப் பொருள் புரிந்து கொள்ளப்பட்ட இன்னொரு சொல் தான் இறையிலி என்பது. இறை என்பதற்கு மன்னன், வரி என்ற சொற் பொருள் உள்ளன. ஒரு மன்னன் இறையிலி அறிவித்தால் அதற்கு வரிகட்ட வேண்டியதில்லை என்று பரவலாக தவறாக புரிந்து கொள்ளப்படுகின்றது.  உண்மையில் மன்னன் தனக்கு வரவேண்டிய வரித்தொகையை கோவில் ஊர் அல்லது கோவிலின் வளச்சிக்கு பயன்படட்டும் என்ற நோக்கில் விட்டுக்கொடுப்பதை வரி கட்டத் தேவையில்லை என்று கொண்டால் மன்னன் எந்த நோக்கத்திற்கு இறையிலி அறிவித்தானோ அந்த நோக்கம் ஈடேறாது போகும். இப்படி ஆவதற்கு அவன் இறையிலி அறிவிக்காமலே இருக்கலாம் என்று எண்ணத் தோன்றும்.  அப்படியானால் இதன் உண்மைப் பொருள் தான் என்ன? இறையிலி என்றால் மன்னனுக்கு தான் வரி கட்டவேண்டியதில்லையே தவிர கோவில் வளர்ச்சிக்காக ஒருவர் கட்டாயமாக அந்த வரியை கட்டியே ஆகவேண்டும். ஆதலால் பொருட்படி அது மக்களுக்கான இறையிலி அல்ல மன்னனுக்கே அது இறையிலி. எனவே பிராமணர் அக்காலத்தே பிரம்மதேயம், இறையிலி ஆகிய சலுகைகளைப் பெற்று வரியே கட்டாமல் சுகபோக வாழ்வு வாழ்ந்தனர் என்ற தப்பான கருத்து சிலரால் அச்சிலும் இணையதளத்திலும் பரப்பப்பட்டு வருகின்றது. பிராமணர்களும் வரிகளைக் கட்டினர். அவர்களுக்கு வரிச் சலுகை ஏதும் இல்லை என்று சிந்திக்க கீழே இடம்பெறும் முதல் இரு கல்வெட்டுகள் சான்றாகின்றன. பிணை, தாலி காது அறுப்பு, போரில் பிராமணர் பங்கு பெறல் பற்றிய சிந்தனைக்கும் கீழே கல்வெட்டுகள் உள்ளன.

ஸ்வஸ்தி ஸ்ரீ கோற்சடபன்மர் திருபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ ஸுந்தர பாண்ட்ய தேவர்க்கு யாண்டு 23 வது மகர நாயற்று அப[ர]பக்ஷத்து த்ருதியையும் பெற்ற ஆலியத்து நாள் உய்யகொண்டார் வளநாட்டு பாம்பூர் நாட்டு பாம்புரமான குலோத்துங்க சோழ சருப்பேதி மங்கலத்து உடையார் திருப்பாம்புரமுடையார் கோயில் ஆதிசண்டேசுர தேவர், கன்மிகளுக்கு. இவ்வூர் திருக்குடந்தை _ _ _ செம்பியன் மாராயனும் முட்டைப் புறத்து சங்கர நாராயண பட்டனும் _ _ _ ணவ _ _ _ _ பிரமாணம் பண்ணிக் குடத்த பரிசாவது. இவ்வூர் பெரும் பற்றப் புலியூர் காசிபன் உலகமுண்டான் இராசநாராயண பிரமராயனும் திரு_ _ _பண்_ _ _சோனா_ _ _ _

முட்டைப்புறத்து சங்கர நாராயண பட்டனும் இவ்மூவோம் இருபத்தொன்றாவதும் இருபத்திரண்டாவதும் வரை_ _ _[கொ]ற்றவாயில்  புவனயர் நிற்கையில் இந்த இ[ராச நாரா]யண பிரம[ரா]யன் நிலை நின்று கடமை இறாமல் ஓடிப்போகையில் இருபத்திரண்டாவது வரை சிகைக்கு நாட்டுக் கணக்கு கீழ் முத்தூருடையார் பேராயிரமுடையார் கணக்குப்படி இவர்பேரால் வந்த _ _ _ இராசநாராயண பிரம்மராயற்கு [பு]ணைப்பட்ட கவுசியன் அழகிய திருச்சிற்றம் பலமுடையான் _ _ _ _ இராசநாராயண பிரமராயற்க்கு [பு]ணைப்பட்ட எங்களை இறுக்க வேணும் என்கையில் இந்த இராசநாராயண பிரமராயன் _ _ _ க்ஷேத்ரமான மனைகளும் நிலங்களும் இன்னாய _ _ _ பாம்புரமுடையார் _ _ _ _

க நாங்கள் புணைவிலையாக விற்றுக் குடுத்தோம். விற்றுக் குடுத்த மனைகளும் நிலங்களுமான இவ்வூர் நத்த[த்]து இவர் மனைகளுக்கு கீழ்பாற்கெல்லை இன்னாயனார் திருமடை விளாகத்து எல்லைக்கு மேற்கு தென்பாற்கெல்லை இன்னா[யனா]ர் திருக்குளத்துக்கு வடக்கும் மேல்பாற்கெல்லை விழாவரு வீதிக்கும் சேலூர் சோலை அரசு பட்டன் மனைக்கும் திருவரங்கமுடையான் பட்டன் மனைக்கு கிழக்கும் வடபாற்கெல்லை விழாவரு வீதிக்கு தெற்க்கு ஆக [இ]சைந்த  இன்னான் கெல்லையுள் நடுவுபட்ட மனைகளும் _ _ _ _ _ ஆற்றுக்கு தெற்குப்பட்ட விளைநிலத்தில் உய்ய வந்த விளாகம் என்று பேர் கூவப்பட்ட நிலத்துக்கு கீழ்பாற்கெல்லை பாம்பூர்க் கிழார் நிலத்துக்கு மேற்க்கும் தென்பாற்கெல்லை ஓடை வாய்க்கா[லுக்கு] வடக்கும் மேல்[பாற்கெல்லை] _ _ _ _

_ _ _ _ __  கீழ்பாற்கெல்லை பெருமருதூர் திருசெல_ _ பலவூர் சதிர பட்டன் நிலத்துக்கு வடக்கு மேற்பாற்கெல்லை_ _ _ உடையான் பட்டன் நிலத்துக்கு மேல்பாற்கெல்லை _ _ _ பட்ட ரு இரண்டு மாவும் _ _ _ _ [வ]டக்கடை _ _ _ என்று பேர்கூவப்பட்ட நிலத்துக்குக் கீழ்பாற்கெல்லை வீற்றிருந்தான் பட்டன் நில்த்துக்கு மேற்கு

கெல்லை _ _ _ _ மாதேவ பட்டன் உள்ளிட்டார் நிலத்துக்கு வடக்கும் மேற்பாற்கெல்லை கவுணியன் செம்பியன் மாராயந் பட்டன் நிலத்துக்கு கிழக்கும் வடபாற்கெல்லை கோன் நிலத்துக்கு இசைந்த இன்னான் கெல்லையுள் நடுவுபட்ட ரு இரண்டு மாவும் தத்தமான்னாற்றுக்கு வடக்கு _ _ம் பற்றூரூடையான் உய்ய கொண்டான்_ _இவன்_ _ _ _நத்தத்துக்கு கீழ்பா

ற்கெல்லை_ _ _ற்றூர் நத்தத்துக்கு வடக்கும் மேல்பாற்கெல்லை உடையார் பாம்புரமுடையார் திருநாமத்துக்காணி_ _ _ (கல்வெட்டு நிறைவுறாமல் நிறுத்தப்பட்டுள்ளது).

அபரபக்ஷம் – தேய்பிறை; ஆதிசண்டேசுவரர் – சிவன் கோவிலகளில் முதல் மரியாதை செலுத்தப்படுபவர்; கன்மிகள் – கோவில் பொறுப்பாளர்; பிரமாணம் – உறுதி ஏற்பு ஆவணம்; பரிசாவது – ஏற்பாடு, வகை, விவரம்; நிற்கையில் – சாட்சியாக இருக்க; கடமை இறாமல் – அரசுக்கு செலுத்த வேண்டிய வரிஇனங்களை செலுத்தாமல்; புணை – பிணை, surety, collateral security, ஆள் ஜாமின்; க்ஷேத்ரம் – வயல் நிலங்கள், வீடு இவை யாவும்; பிரம்மராயன் – மன்னனால் கோவில் செயற்பாட்டை கவனிக்க அமர்த்தப்படும்  பிராமண அதிகாரி.

விளக்கம்:  சடவர்ம சுந்தர பாண்டிய தேவர் 23-ம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 1273) நாகை மாவட்டம் நன்னிலம் வட்டம் திருப்பாம்புரம் சேடபுரீசுவரர் கோவிலில் வெட்டப்பட்ட கல்வெட்டு இது. ஆதிசண்டேசுவர தேவரை வணங்கி கோயில் பொறுப்பாளர்களுக்கு தெரிவிக்கும் விவரமாவது "திருக்குடந்தை கவுணியன் செம்பியன் மாராயனும் முட்டைப்புறத்து சங்கர நாராயண பட்டனும் இந்த உறுதி ஏற்பு ஆவணத்தில் செய்து கொடுத்த ஏற்பாடு யாதெனில், இவ்வூரில் வாழும் பெரும் பற்றுப் புலியூர் காசிபன் உலகமுண்டான் இராசநாராயண பிரம்மராயனும், திரு_ _பண்_ _ _சோனா_ _ _, முட்டைப்புறத்து சங்கர நாராயண பட்டனும் ஆகிய இம்மூவரும் சுந்தர பாண்டியனின் 21-22 ஆம் ஆட்சிக் கால கட்டத்தில் கொற்றவாயில் புவனயர் சாட்சியாக இருந்திட இம்மூவருக்கும் இடையே ஒருவர் தவறினால் மற்றவர் அவர் சார்பாக வரி கட்டுவது என்ற பிணை (surety) ஒப்பந்தம் ஏற்பட்டது. இவ்வாறான நிலையில் இந்த இராசநாராயண பிரம்மராயன் தன் கடமையில் வழுவாது நின்று அரசிற்கு செலுத்த வேண்டிய வரிஇனங்களை கட்டாமல் எங்கோ போய் மறைந்தான்.  நாட்டுக் கணக்கர் கீழ்முத்தூருடையார் பேராயிரமுடையார் ஆகியோரின் கணக்குப்படி இந்த இராசநாராயண பிரம்மராயன் பேரில் 22 –ம் ஆட்சி ஆண்டில் செலுத்த வேண்டிய வரி நிலுவையை அவருடன் இன்னொரு பிணையில் உள்ள கவுசியன் அழகிய திருச்சிற்றம்பலமுடையான் இராசநாராயண பிரம்மராயனோடு பிணையப்பட்ட எங்கள் இருவரையும் (திரு_ _பண்_ _ _சோனா_ _ _, முட்டைப்புறத்து சங்கர நாராயண பட்டன் ஆகியோர்) கட்டச் சொன்னான். ஆகையால் இந்த இராசநாராயண பிரம்மராயனுக்கு சொந்தமான நிலங்களை இதாவது, வீடு விளைநிலம் ஆகியனவற்றை திருப்பாம்புர ஈசனுக்கு பிணைக்கு விலையாக விற்றுவிட்டோம்” என்று கூறியுள்ளனர். இந்நிலங்கள் பற்றிய எல்லை விவரங்கள் எஞ்சிய வரிகளில் குறிக்கப்பட்டுள்ளன. கல்வெட்டுச் செய்தி நிறைவு செய்யப்படாமல் அப்படியே பாதியில் நிறுத்தப்பட்டுவிட்டது. ஒரேஒரு ஆண்டிற்கான வரியை கட்டாததாலேயே ஒருவரது உடைமை முழுவதையும் விற்றுவிடுவது ஞாயமா? உடைமையின் மதிப்பு வரிநிலுவையை விட அதிகமாகத்தானே இருக்க வேண்டும்? என்ற கேள்வி எழுகின்றது. கல்வெட்டில் பிணைக்கட்ட அனைவரும் பிராமணர் என்று தெரிகின்றது.