கொங்கு நாடு ஒரு தனி நாடு :

கொங்குநாடு ஒரு தனி நாடு 


கொங்கு நாடு பன்னெடுங் காலமாகவே ஒரு தனி நாடாகவே வழங்கப் பெற்று வந்திருக்கிறது. தமிழகத்தை சேர, சோழ, பாண்டியர் ஆண்டனர் என்றாலும் கொங்கு நாடு ஒரு தனி நாடாகவே இருந்து வந்திருக்கிறது. மூவேந்தர்கள் அவ்வப்போது கொங்கு நாட்டைக் கைப்பற்றினாலும், இதனை ஒரு தனி நாடாகக் கொண்டு, தனிப் பிரதிநிதிகளை நியமித்து ஆட்சி செலுத்தி வந்தனர். சங்க இலக்கியங்களும் பிற்கால இலக்கியங்களும் கல்வெட்டுகளும் கொங்கு நாடு ஒரு தனி நாடாக இருந்ததற்குச் சான்று பகர்கின்றன. 


கொங்கு நாடு மிகவும் தொன்மையான ஒரு நாடாகும். இங்கு பன்னெடுங்காலமாகவே தனியாட்சி நடைபெற்று வந்திருக்கிறது. கல்வெட்டுகளிலும் இலக்கியங்களிலும் இதற்குச் சான்றுகள் பல உள்ளன. கல்வெட்டுச் சான்றுகள் அசோகன் கல்வெட்டில் தமிழகத்து அரசர்களாகச் சோழர், பாண்டியர், கேரளபுத்திரர், சத்தியபுத்திரர் ஆகியோர் குறிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சத்தியபுத்திரர் என்பார் கொங்கு நாட்டு மன்னரே ஆவர் என்பர் டாக்டர் மா.இராசமாணிக்கனார் அவர்கள்.  


சோழர், பாண்டியர் காலக் கல்வெட்டுகள் பல கொங்கு நாட்டை அப் மன்னர்கள் கைப்பற்றியதைக் குறிக்கின்றன. இதனால் கொங்கு நாடு ஒரு தனி நாடாக இருந்து என அறிகின்றோம். 


செப்பேட்டுச் சான்று :


பாண்டியன் நெஞ்சடையன் பராந்தகனுடைய வேள்விக்குடிச் செப்பேடு கோச்சடையன் ரணதீரன் என்னும் பாண்டிய மன்னனைக் "கொங்கர் கோமான்" என்று புகழ்கிறது. இதனால் தனி நாடாக இருந்த கொங்கு நாட்டை அம்மன்னன் கைப்பற்றினான் என அறிகின்றோம். 


இலக்கியச் சான்றுகள் :


சங்க இலக்கியங்கள் அகநானூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து ஆகிய சங்க நூல்களில் கொங்குநாடு தனியாட்சி நாடாகத் திகழ்ந்ததற்குப் பல சான்றுகள் உள்ளன.


'வாடாப் பூவில் கொங்கர் ஓட்டி நாடு பல தந்த பசும் பூண் பாண்டியல்' (அகம்.253), 'கொங்கு புறந்தந்த கொற்ற வேந்தே' (புறம் - 373), 'ஆகெழு கொங்கர் நாடகப் படுத்த வேல்கெழு தானை வெருவரு தோன்றல்' (பதிற் - 22) போன்ற சங்கப் பாடல் வரிகள் கொங்கு நாடு தனி நாடாக இருந்ததற்குச் சான்றாகின்றன. 


சிலப்பதிகாரம் :


கொங்கு நாடு தனி நாடாகத் திகழ்ந்ததற்குச் சிலப்பதி காரத்திலும் பல சான்றுகள் உள்ளன. 


 'கொங்கர் செங்கமத்துக் கொடுவரிக் கயற்பொடி பகைப்புறத்துத் தந்தவராயினும்' (சிலம்பு 25: 133 - 4) 


'குடகக் கொங்சரும் மாளுவ வேந்தரும் கடல் சூழிலங்கைக் கயவாகு வேந்தனும் ' 
(சிலம்பு 30 : 159 - 60) 


'கொங்கச் செல்வி குட மலையாட்டி தென்றமிழ்ப் பாவை ' 
(சிலம்பு 121 47 - 8) 


தேவாரம் : 


சுந்தரர் தேவாரத்தில் கொங்குநாடு பற்றிப் பல குறிப்புகள் வந்துள்ளன. 


'கொங்கே  புகினுங் கறை கொண்டாறலைப் பாரிலை'


 'கொங்கிற் குறும்பிற் குரக்குத் தளியாய்' 


பெரியபுராணம் : 


சேக்கிழார் தம் பெரியபுராணத்தில் பல இடங்களில் கொங்கு நாட்டைக் குறிப்பிட்டு உள்ளார். 


'குரவலர் சோலை அணி திருப்பாண்டிக் கொடுமுடி அணைந்தார் கொங்கில்'


 'கொங்கிற் குடபுலஞ் சென்ற ணைந்தார் '


குலசேகராழ்வார் தம்மக் கொல்லிக்காவலர், கொங்கர் கோமான் என்று கூறிக் கொள்வதால் அவர் கொங்கு நாட்டின் ஒரு பகுதியாகிய கொல்லி மலைக்குக் காவலராக இருந்தார் என அறிகின்றோம். 


பிற்கால இலக்கியங்களிலும் கொங்கு நாடு பற்றிய குறிப்புகள் உள்ளன. அருணகிரிநாதர் தம் திருப்புகழில் கொங்குநாடு சேரருக்கு உரியது என்று கூறியுள்ளார்.


 'சேரர் கொங்கு வைகாவூர் நனாடதில்' என்று அவர் திருப்புகழில் கூறியுள்ளார். இதனைக் கொண்டு பிற்காலப் புலவர்களும் கொங்கு நாடு    சேரருக்கு உரியது  என்று பாடிப் போந்தனர். கொங்கு நாட்டின் தென்மேற்குப் பகுதியைச் சேரர் கைப்பற்றியிருக்கக்கூடும். அதனால் அருணகிரியார் அவ்வாறு பாடியிருப்பார். அதனைக் கொண்டு கொங்கு நாடு சேர நாட்டின் ஒரு பகுதி எனக் கூறுதல் பொருந்தாது. சேர நாட்டாரின் பழக்க வழக்கங்களும் கொங்கு நாட்டாரின் பழக்க வழக்கங்களும் மாறுபட்டுக் காணப்படுகின்றன. எனவே கொங்கு நாடு ஒரு தனி நாடு என்று கொள்ளுதலே பொருந்தும். 


மற்றும் பிற்காலத்தே சோழரும் பாடியரும் கொங்கு நாட்டைப் பிடித்து, அங்குத் தங்கள் பிரதிநிதிகளை நியமித்து ஆட்சி செலுத்தினர். அவர்கள் கொங்குச் சோழர் எனவும் கொங்குப் பாண்டியர் எனவும் பெயரும் பெற்றுள்ளனர். இதனால் கொங்கு நாடு ஒரு தனி நாடாக இருந்திருக்க வேண்டும் என அறிகிறோம். 


முடிவுரை :


மேலே கூறியவற்றால் கொங்கு நாடு ஒரு தனி நாடாகத் திகழ்ந்தது என்பது தெளிவு. கொங்கு நாடு அவ்வப்போது மூவேந்தர்களுடைய ஆட்சியின் கீழ் இருந்தாலும் தனி நாடாகவே கருதப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. எனவே கொங்கு நாடு ஒரு தனி நாடாகத் திகழ்ந்தது என்பதில் ஐயமில்லை.