கொங்கு நாட்டு வெள்ளாளர்களின் மன்றம் - மன்றாட்டு - மன்றாடி

கோவை மாவட்டத்துக் கல்வெட்டுகளில் மன்றம், மன்றாட்டு, மன்றாடி ஆகிய சொற்கள் பயின்று வரக்காணலாம். மன்றம் அன்னூர், சேவூர் ஆகிய ஊர்க்கல்வெட்டுகளில் குறிக்கப்பெறுகின்றது. அன்னூர் கல்வெட்டுகளில் மன்னியூர் மன்றம் என்றும், சேவூர்க்கல்வெட்டுகளில் இவ்வூர் மன்றம் என்றும் குறிக்கப்பெறுகின்றது. அன்னூர் கல்வெட்டில் மன்றம் வரி செலுத்துமிடமாகவும், சேவூர்க் கல்வெட்டுகளில் நிலம் விற்கும் இடமாகவும் குறிக்கப்பெறுகின்றது. 


சங்க இலக்கியத்தில் மன்றம், மன்று ஆகிய சொற்கள் பலகாலும் பயின்று வருகின்றன. அக்காலத்தில் மன்றம், மன்று ஆகிய சொற்கள் ஊர்ப்பொதுவிடத்தைக் குறிக்கும். மன்றம் ஊரின் அனைத்துப் பொதுக்காரியங்கள் நடக்குமிடமாகவும் போர்க்காலங்களில் முதல்தாக்குதலுக்குரிய இடமாகவும் விளங்கியது. பாணர், புலவர் ஆகியோர் வந்து தங்குமிடமாகவும் விளங்கியது. மன்றத்தில் பொதியில் இருந்தது. அங்கு கந்தில் (தூண்) உறையும் கடவுளை வழிப்பட்டனர். 


கவர்ந்து வந்த நிரைகளை மன்றில் கொண்டு வந்து நிறுத்துவர், "கன்று நிரையும் மன்று என்கோ" என்று ஒரு புறப்பாடல் குறிப்பிடும். மேலும் பல சங்கப் பாடல்கள் மன்றத்தில் நிறைந்திருந்த மாட்டு மந்தைகளைப் பற்றிக் குறிப்பிடும். மன்று என்ற சொல் பல்லவ மன்னன் ஸ்கந்த சிஷ்யனின் இராயக் கோட்டை, செப்பேட்டில் குறிக்கப்பெறுகின்றது. மேலும் நன்னிலம் கல்வெட்டுகளிலும் இச்சொல் பயின்று வரக் காணலாம். நன்னிலம் கல்வெட்டில் மன்று என்பது நிலவெல்லையாகக் குறிக்கப் பெறுகின்றது. தருமபுரி மாவட்டத்தில் மன்ற நாடு (மன்னநாடு) என்றவொரு நாடு குறிக்கப்பெறுகின்றது. கேரளத்தில் ஊர்ப்பெயர்கள் மன்றம் (மன்னம்) என்ற விகுதியுடன் பயின்று வரக்காணலாம், கோயில்மன்னம், சூழல்மன்னம் ஆகிய பெயர்கள் இதற்குச் சிறந்த சான்றுகள். மன்றம் தமிழக வரலாற்றில் காலந்தோறும் செயல்பட்டதன்மை இதனால் புலப்படாமல் போகாது. 


கோவைமாவட்ட கல்வெட்டுகளில் மன்றாட்டு, மன்றாடி ஆகிய சொற்கள் மிகுதியும் பயின்று வரக்காணலாம். கோயில்களுக்கு ஊர்களைத் தேவதானமாக அளிக்கும்போது இச் சொற்கள் பயின்றுவரக் காணலாம். தேவதானமாகக் கொடுக்கப்பெற்ற ஊர்கள் நீர்வளமற்ற பகுதிகளாகவும் நீர்வளமிக்க பகுதிகளாகவும் இருந்துள்ளன. வறண்ட பகுதிகளான பல்லடம், அவினாசி, கோவை வடக்கு ஆகிய வட்டங்களில் கிடைக்கும் கல்வெட்டுகளில் மன்றாட்டு மிகுதியும் பயின்று வந்துள்ளது. ஆற்றங்கரையில் நீர்வளத்துடன் கூடிய ஊர்களிலும் மன்றாட்டுகள் இருந்துள்ளன. இன்றைய, கோவை மாவட்டத்தில் அடங்கியிருந்த தென் கொங்கில் மன்றாட்டு பற்றிய கல்வெட்டுகள் மிகதியும் கிடைக்கின்றன. வடகொங்கு கல்வெட்டுகள் மூன்று மன்றாட்டு பற்றிக் கூறுகின்றன. இருப்பினும் இவற்றில் இரண்டு கல்வெட்டுகள் தென் கொங்கிலிருந்த ஊர்கள் பற்றியவை. ஒரு கல்வெட்டு கருவூர் அருகில் வெஞ்சமாங்கூடலில் கிடைக்கின்றது. இந்தச் சான்றுகள் மன்றாட்டிற்கும் தென்கொங்கிற்கும் (கோவை மாவட்டம்) இடையில் நிலை பெற்றிருந்த நெருங்கிய தொடர்பினை அறிய உதவும். 


பேரூர், முருகன்பூண்டி, அன்னூர், போளூவாம்பட்டி, கொழுமம், குமரலிங்கம், சோழமாதேவி கடத்தூர் ஆகிய ஊர்களில் மன்றாட்டுகள் பற்றிய கல்வெட்டுகள் மிகுதியும் கிடைக்கின்றன. இவற்றில் பல ஊர்கள் ஆற்றங்கரைகளில் அமைந்துள்ளன. பேரூரில் நான்கு கல்வெட்டுகள் மன்றாட்டு பற்றியும், மன்றாடிபற்றியும் குறிப்பிடுகின்றன. கொழுமத்தில் இரண்டு கல்வெட்டுகள் மன்றாட்டு, மன்றாடி ஆகிய சொற்கள் பற்றிப்பேசுகின்றன. சோழமாதேவியில் ஒரு கல்வெட்டும், கொழுமத்தில் ஒரு கல்வெட்டும், கடத்தூரில் ஒரு கல்வெட்டும் மன்றாட்டு, மன்றாடி ஆகியவை பற்றிச் சுட்டுகின்றன. திங்களூர் கல்வெட்டு மன்றாடி பற்றிக் குறிப்பிடுகின்றது. 


மன்றாட்டுகள் தேவதானமாக அளிக்கபெற்ற ஊர்களில் இருந்துள்ளன. அரசன் தேவதானம் அளிக்கப்பெற்ற ஊர்களைக் குறிப்பிடும்போது அவ்வூர்களை ஐந்து மன்றாட்டு, ஆறு மன்றாட்டு, ஏழு மன்றாட்டு, எட்டு மன்றாட்டு, ஒன்பது மன்றாட்டு, பத்து மன்றாட்டு எனப் பல மன்றாட்டுகளாகப் பிரிக்கப் பெற்றிருந்த தன்மையைச் சுட்டுகின்றன. 


மன்றாட்டு கருவூலத்தில் காசு கட்டிய பின் அளிக்கப் பெற்றிருக்க வேண்டும். சோழர்காலக் கொங்கில், சமூகம் பல்வேறு மாற்றங்களைக் கண்டது. நாடோடி வாழ்க்கையிலிருந்து நிலையான வாழ்க்கைக்கு மாறி வந்தது. அதனால் சமூகத்தில் பல்வேறு பிரிவினர் பொருள் வளத்திலும், அந்தஸ்து நிலையிலும் வளர்ந்தனர். ஒவ்வொரு சாதியிலுமிருந்த உயர்ந்தோர் ( Elite ) அரசனிடமிருந்து பல்வேறு உரிமைகளையும், தொழில் செய்யும் உரிமைகளையும் பெற்றனர் என்பதற்குப் பல கல்வெட்டுச் சான்றுகள் கிடைத்துள்ளன. 


அவினாசிக் கல்வெட்டு ஒன்று 'வடபரிசாரநாட்டுப் பார்ப்பார் சான்றார் நம் சரக்கிற்கு பொன் வைத்தமையில் கொடுத்த வரிசையாவது' என்று தொடங்கும். மேலும் சர்க்கார் பெரியபாளையம் கல்வெட்டு ஒன்று மன்னியூர் சிவப்பிராமணன் ஒருவன் முப்பது பொன் தந்து எனக்கு காணிதர வேணும் என்று கேட்டான் என்று வீரராசேந்திரன் கல்வெட்டு கூறும். இந்த அடிப்படையில் வைத்துப் பார்க்கும்போது மன்றாட்டு உரிமையும் பணம் கொடுத்து வாங்கிய உரிமையாகவே இருந்திருக்கவேண்டும் எனலாம். 


மன்றாட்டினை அளிக்கும் அதிகாரம் அரசன் வசமே. இருந்துள்ளது . அரசனுடைய அதிகாரிகளில் சிலர் துரோகியாய் ஓடிப்போனமையில் அவர்கள் மன்றாட்டும் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பெற்றது. விக்ரமசோழன் கல்வெட்டு ஒன்றில் 'வீர சிங்கதேவன் நமக்கு துரோகியாய் போனமையில் அவனது மன்றாட்டு நம்முதானமையில்' என்ற வாசகம் குறிப்பிடத்தக்கது. இது போன்ற கல்வெட்டுகள் கோவை மாவட்டத்தில் கிடைக்கின்றன. மேலும் ஓர் ஊரைத் தேவதானமாக அளிக்கும்போதும் மன்றாட்டுகளைப் பிரித்தளிக்கும் அதிகாரத்தினை அரசனே வைத்திருந்தான் என்பதற்குப் பல கல்வெட்டுச் சான்றுகள் கிடைத்துள்ளன. அனாதிபாழாய்க் கிடந்த பல ஊர்கள் தேவதானமாக அளிக்கப்பெற்றபோது மன்றாட்டுகளைப் பிரித்தளித்த அதிகாரம் அரசனிடமே இருந்தது என்பதற்குப் பல கல்வெட்டுச்சான்றுகள் கிடைத்துள்ளன. செலக்கெறிச்சில், பலகைப்புழை, குமிலை, சூரலூர் (இன்றைய சூலூர்) ஆகிய ஊர்கள் அனாதி பாழாய்க் கிடந்தன என்பதை சர்க்கார் பெரியபாளையம், பேரூர் ஆகிய ஊர்க்கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இவை அனைத்தும் இன்றைய பல்லடம் வட்டத்தில் உள்ளன. 


மன்றாட்டினைப் பெற்றவர்கள் பல்வேறு சாதியினைச் சேர்ந்தவர்கள். வெள்ளாளர், பிராமணர், ஊராளி, வியாபாரி, படைத்தலைவர், சாமந்தர் எனப் பலதரப்பட்ட மக்கள் மன்றாட்டிளை வாங்கியுள்ளனர். ஒரு மன்றாட்டினைப் பலர் வாங்கியுள்ளனர். ஒன்றுக்கும் மேற்பட்ட மன்றாட்டுகளை ஒருவரே வாங்கியுள்ளார். ஒரு மன்றாட்டினை ஒருவர் வாங்கியுள்ளார். கோவை மாவட்டத்துப் பூர்வ குடிகளான பூலுவர், வேட்டுவர், ஆரியர், குன்னாடியர் ஆகியவர்கள் மன்றாட்டினை விலைக்கு வாங்கியதற்கான சான்று கிடைக்கவில்லை. பூலூவர்கள் ஊராளிகளாகவும் ஊர்க்காமிண்டர் களாகவும் குறிக்கப் பெறுகின்றனர். எந்தக்கல்வெட்டிலும் மன்றாடி என்று குறிக்கப் பெறவில்லை. அதனால் இவர்கள் மன்றாட்டு பெறுவதிலிருந்து விலக்கி வைக்கப்பெற்றார்களோ என்று கருத வேண்டியுள்ளது. அல்லது மன்றாட்டினை விலை கொடுத்து வாங்கும் வசதியற்றவர்களாக இருந்திருக்க வேண்டும். மன்றாட்டுகளைப் பெற்றோர் மன்றாடி எனப்பெற்றனர். 


அன்னூர்க் கல்வெட்டுகள் சில , மன்றாட்டுளைப்பற்றிக் குறிப்பிடுகின்றன. அவற்றில் ஒன்று வெள்ளைப்பாடி என்ற ஊரிலிருந்த மன்றாட்டுப் பங்குகளைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. வெள்ளைப்பாடி மன்றாட்டினைப்பெற்றவர்கள் கோயிலுக்குச் செலுத்தவேண்டிய வரியினை வாங்கிக் கோயிலில் செலுத்த வேண்டும் என்று கூறுகின்றது . அதனால் மன்றாட்டு என்பது கோயில் வருவாயுடன் தொடர்புடைய சொல்லாக அமைந்துள்ளது எனலாம். மேலும் பேரூரில் கோயில்பண்டாரம் அழிவுபட்டபோது அதுபற்றி அரசனுக்கு அறிவிக்க சென்றவர்களில் மன்றாடிகளும் இருந்தனர் என்று வீரராசேந்திரன் கல்வெட்டு கூறும், கோயிலுக்குரிய தேவதான ஊர்களில் மன்றாடி முக்கிய பொறுப்பிலிருந்தான் என்பது இக்கல்வெட்டால் விளங்கும். தாவளத்திலும் மன்றாட்டு இருந்தமை பற்றி மற்றொரு பேரூர்க் கல்வெட்டு கூறும். மன்றாட்டுக்கும், கோயிலுக்குமிடையில் உள்ள தொடர்பு பற்றி கோவை மாவட்டத்துக் கல்வெட்டுகள் விரிவாகப் பேசியுள்ளன. மன்றாட்டு என்பதன் பொருளை விளங்கிக் கொள்ள திருமுருகன் பூண்டிக் கல்வெட்டு ஒன்று நமக்க துணையாக நிற்கின்றது. 


திருமுருகன்பூண்டிக் கல்வெட்டு மன்றாட்டினை விளங்கிக் கொள்வதற்குப் பல வகையிலும், உதவியாக இருப்பதால் அக்கல்வெட்டின் முழுவாசகத்தையும் தருதல் பயனுடையது. 


1. தண்டீஸ்வரன் ஒலைச் சாகரஞ்சூழ் வையகத்துக் கண்டீஸ்வரன் கரும மாராய்ந்து பண்டே அறஞ் செய்தான் செய்தான் அறங்காத்தன் பாதம் திறம்பாமல் சென்னி மேல் வைத்து அருளான் ஆதிசண்டேஸ்வரன் ஆதேசம் நம் சக்தன் ஆழ்வான் அண்ணாமலையானுக்கு நம் ஓலை குடுத்தபடியாவது உடையார் திருமுருகன் பூண்டி, ஆளுடைய நாயனார் கோயிற் தானத்தாருடன் இக் கோயிலுங் கேட்டு ஊர் மன்றாட்டு ஆள்வதாக இவனுக்கு நாம் மன்றாட்டு குடுக்கையிற் 


2. இவன் இக் கோயிற் திருப்பணிக்குறை தீரப்பல திருப்பணிக்கும் இவ்வூற் கால்பாட்டில் தேவர் கோயில் திருப்பணிக்கும் . . . . ன் இ . . . ப . . . று இப்பொன் இருனூற் . . . இவன் அடைப்பித்த அழியா விரதங் கொண்டாந் குளம் நீங்கலாக இடுகையில் இவனுக்கு நாம் குடுத்த தானத்தார் மன்றாட்டு ஒன்று இம்மன்றாட்டு ஒன்றும் முன்பு நடந்து போதும் தானத்தார் ஐந்தும் ஆகத் தானத்தார் மன்றாட்டு ஆறும் கூட நடந்து கோயிலும் கேட்டு ஊருங் கால்பாடும் மன்றாட்டும் ஆண்டு ஊருங் 


3. கால்பாடும் நாற்பாற் கொல்லைக்குட் பட்ட நஞ்செய் புன் செய் மே னோக்கின மரங் கீணோக்கின் கிணறு . . . எழுவனமுளைப்பன . . . மற்றும் எப் பெறப்பட்டவர் பிராப்திகளும் ஆறு மன்றாட்டிலே வகையிட்டு ஆறிலொன்று இவன் மக்கள் சந்திராதித்த வரை அனுபவித்து வருவாராக வும் இது செம்பிலுஞ்சிலையிலும் வெட்டிக் கொள்வதாக நம்மோலை குடுத்தோம் 


இக்கல்வெட்டு மன்றாட்டின் உண்மைப் பொருளை விளங்கிக்கொள்ள உதவுகின்றது. மன்றாட்டு பொன் விலைக்குரியதாக விளங்கியது என்பது இவன் 200 பொன் செலவழித்தற்குப் பிரதிபலனாக ஒரு மன்றாட்டினை அண்ணாமயைானுக்கும் அவன் வழியினருக்கும் அரசன் அளித்துள்ளான். மேலும் மன்றாட்டுக்குரியவர் ஊர் வருவாயில் உரிய பங்கினைப் பெறுவதற்குரியவர் என்பது எழுவன் முளைப்பன மற்றுமொப்பெற்பட்ட பிராப்திகளும் ஆறுமன்றாட்டிலே வகையிட்டு (கூறு) ஒரு கூறினை அண்ணாமலையானும் அவன் வழியினரும் பெறவேண்டும் என்று கூறுவதிலிருந்து மன்றாட்டு வழி வருமானமும் இருந்தது என்பது புலப்படும். 


மேலும் மன்றாட்டிற்குரிய மன்றாடி மன்றாட்டுக்காணி, மன்றாட்டுச் செய், மன்றாட்டு நிலம், மன்றாட்டுப் பேறு ஆகியவற்றையும் அவற்றின் மூலம் கிடைக்கும் வருவாயினையும் பெறத்தகுதியுடையவர் என்பது மற்றொரு கல்வெட்டு குறிப்பிடுகின்றது. திருமுருகன்பூண்டிக் கல்வெட்டு தானத்தார் மன்றாட்டு என்று ஒரு வகை மன்றாட்டினைக் குறிக்கின்றதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். 


மன்றாடி 


கொங்கு நாட்டுக்கல்வெட்டுகளில் பயின்று வரும் மன்றாடி என்ற சொல் மன்றாட்டினை ஆள்பவன் என்ற பொருளில் வழங்கியது. பிறபகுதி கல்வெட்டுகளில் மன்றாடி என்ற சொல் கோயில் கால்நடைகளைத் தன் பொறுப்பில் வைத்துக் கொண்டு கோயிலுக்கு நெய்யளப்பவன் என்ற பொருளில் வழங்கியது. மேலும் ஊரில் நடைபெற்ற நீதி மன்றத்தில் வழக்காடுபவன் என்ற பொருளிலும் வழங்கியது. இது இலக்கிய வழக்கு. ஆனால் கொங்கு நாட்டில் தேவதான ஊர்களில் உருவாக்கப்பெற்ற மன்றாட்டுக்களை நிருவகிப்பவன் என்ற பொருளில் வழங்கியது. 
                  
                                                                                                                            தொடரும் ...

கொங்கு நாட்டில் கோயில் பொருளாதாரமும் வேளாண்வளர்ச்சியும் இணைந்து நின்றபோது கால்நடை வளர்ப்பில் உருவான மன்றாட்டு என்ற அமைப்பு கால்நடை வளர்ப்பிலிருந்து வேளாண்மைக்கு மாறிய பின்பும் வேளாண்மைக்குரிய சொல்லாக மாறிவிட்டது என்பது கோவை மாவட்டத்துக் கல்வெட்டுகளால் உறுதிப்படும். 


மன்றாடி காலப்போக்கில் ஊர் மன்றாடி, நாட்டு மன்றாடி ஆகிய பொறுப்புகளை வகிப்பதில் சென்று முடிந்தது. கொங்கு நாட்டில் 24 நாட்டு நாட்டு மன்றாடிகள் இருந்துள்ளனர் என்பது பிற்காலப் பட்டயங்களால் உறுதிப்படுகின்றது.