அரபியர்களை விரட்டியடித்த பரதவர் படை - கிறிஸ்தவர்களாக மாறிய வரலாறு..!

அரபியர்களை விரட்டியடித்த பரதவர் படை - கிறிஸ்தவர்களாக மாறிய வரலாறு..!


தமிழ் நாட்டு கீழ்க்கரை ஓரமாக பண்டுதொட்டு வாழ்ந்து வரும் மக்கள் பரதவ குலத்தினர். கடலை அடுத்து வாழ்ந்த இவர்கள் மீன் பிடித்தல், சங்கு, முத்துக்கள் எடுத்தல் முதலிய தொழில்களைச் செய்து வாழ்கிறார்கள். இத் தொழில்களைச் செய்யக் கட்டுமரங்கள், சிறு படகுகள் முதலியவற்றைச் செலுத்தும் திறமை பெற்றிருந்தனர். இந்தியக் கடற்கரை வியாபாரத்திலும் இவர்கள் நாவாய் செலுத்தி பங்கு பெற்றனர். தமிழ் நாட்டின் புராதன வாணிபத்திற்கும் இவர்களே காரணமாக இருந்திருக்க வேண்டும்.


மீன் ஓர் முக்கிய உணவுப் பொருள். அதனை கடலிலிருந்து எடுத்து அளிப்பவர்கள் வலிமை பெற்றவர்கள். முத்தும், சங்கும் வியாபாரப் பொருட்கள் ; இவை மிகுதியாகக் கிடைத்தால், அரசினருக்கு நல்ல வருமானம் கிடைக்கும். பழங்காலத்திலிருந்து தமிழ் நாட்டு மன்னர்கள் இத்தொழிலுக்குப் பாதுகாப்பு அளித்து வந்தனர். இத் தொழில்களைப் பாதுகாக்கவே கொற்கையில் ஓர் தலைநகரை நிறுவி அங்கு ஓர் காவற்படையையும் நிறுவியிருந்தனர். கடல் படு பொருட்களை வாங்குவதற்கு கொற்கையிலேயே ஒரு நாணய சாலையும் இருந்தது. இவையெல்லாம் பாண்டியர் பேரரசு நிலைத்திருந்த காலத்தில் நடைபெற்றது. பதினான்காம் நூற்றாண்டில் அராபியர்கள் வாணிபம் செய்வதற்காகத் தமிழ் நாட்டின் கீழ்க்கடற்கரைக்கு வந்தார்கள். தென்கடல் முத்தையும், தமிழ் நாட்டு துணி, மிளகு, அகில் முதலியனவற்றையும் ஏலம், கிராம்பு முதலிய வாசனைப் பொருள்களையும் அவர்கள் தங்கள் கப்பல்களில் ஏற்றி மேல் நாடுகளுக்குக் கொண்டு சென்றார்கள். கடல் வாணிபத்தில் பெருநிதி ஈட்டிய அராபியர்கள் காயல் பட்டணத்தில் பண்டகசாலைகள் அமைத்தனர். பாண்டிய அரசர்களுக்கு தங்கள் லாபத்தில் ஒரு பகுதியை வரியாகச் செலுத்திவிட்டு முத்து வாணிபத்திற்கு ஏகபோக உரிமை பெற்றனர். அது முதல் அவர்களுக்கும், கடலில் மூழ்கி முத்தெடுக்கும் பரதவருக்கும் இடையே முரண்பாடுகளும், சச்சரவுகளும் தோன்றின.


அராபியர்கள் கடற்கரை எந்த அரசின் ஆதிக்கத்திலிருந்ததோ, அவ்வரசர்களைச் சந்தித்து தங்களுடைய வாணிப உரிமையை நிலைநாட்டிக் கொள்ள முயன்றனர். கடற்கரை ஆதிக்கம் பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்து பதினேழாம் நூற்றாண்டுவரை நாயக்க மன்னர்கள், ராமநாதபுரம் சேதுபதிகள் ஆகிய மன்னர்களின் கைக்கு மாறி மாறி வந்தது. ஆயினும் அராபிய வியாபாரிகளுக்கும் கடற்கரை மக்களுக்கும் ஏற்பட்ட சச்சரவு தீர்ந்தபாடில்லை.


இம் முரண்பாடுகள் பெரும் போராட்டமாக மாறிற்று. அவர்களிடையே நடந்த மிகப் பெரும்போர் ஒன்றைப் பற்றி ‘ஜான் நியூ காவ்’ என்னும் டச்சு வியாபாரி கீழ்வருமாறு எழுதியுள்ளார்


‘அராபிய வியாபாரிகள் பரதவரது மூக்கையும், காதையும் வெட்டியெறிந்துவிட்டனர். பரதவர்கள், பெரும் கோபமுற்று படை திரட்டி பழிதீர்க்கக் கிளம்பினார்கள். முதல் போரில் அராபிய வியாபாரிகள் சிலர் சிறைப்பட்டனர். அவர்களது மூக்குகளையும் காதுகளையும் அரிந்துவிட்டு அவர்களை விடுதலை செய்து அனுப்பிவிட்டனர். இந்த அவமானத்தைப் பொறுக்கமாட்டாத அராபியர்கள் முப்பதினாயிரம் வீரர்கள் கொண்ட படை ஒன்றைத் திரட்டி தூத்துக்குடிக்கருகில் பாடியிறங்கினர். ஐயாயிரம் பரதவர்கள் ஆயுதம் தாங்கி அராபியரின் படையைத் தாக்கி ஏழாயிரம் படை வீரர்களைக் கொன்றுகுவித்தனர். அவர்களுடைய படை சிதறி ஓடிற்று. இந்த வெற்றிக்குப் பின்னர் பரதவர்கள் கடற்கரை ஓரமாக இருந்த பகுதிகள் அனைத்திலும் அரசியல் ஆதிக்கம் பெற்றனர். அராபிய வியாபாரிகள் செலுத்திய வரியைத் தாங்களே விசுவனாத நாயக்கருக்குச் செலுத்துவதாக ஒப்புக் கொண்டனர்.


ஆனால் கப்பல் வலிமை அவர்களுக்கு இல்லாததால் முத்தையும் சங்கையும் எடுத்தாலும் அது விலையாகும் இடங்களுக்குக் கொண்டு சென்று விற்க அவர்களுக்கு வழியில்லை. நாயக்க மன்னர்களுக்கு வரிசெலுத்த அவர்களால் முடியவில்லை. வரி பாக்கிக்காக அரசர் உத்தரவினால் பல பரதவத் தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். சிலர் அடிமைகளாக விற்கப்பட்டார்கள்.


மேற்குத் கடற்கரையில் 1540 ஆண்டு முதலாக போர்த்துக்கீசியர்கள் கடற்கரை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்ததை பரதவர்கள் அறிவார்கள். படகோட்டிகள் சிலருக்கு அவர்களோடு வாணிபத் தொடர்பு உண்டு. போர்த்துக்கீசியரிடம் பெரிய கப்பல்கள் இருப்பதையும் அவர்கள் அறிந்திருந்தார்கள். எனவே அவர்களோடு ஒப்பந்தம் செய்து கொண்டால், தங்களுடைய பொருள்களை அவர்களுக்கு விற்று அவர்களுடைய உதவியால் தங்களது கஷ்டங்களிலிருந்து தப்பலாம் என்று எண்ணினார்கள். சில தலைவர்கள் கோவாவிற்குச் சென்று போர்த்துக்கீசிய அதிகாரிகளையும், கத்தோலிக்கச் சாமியார்களையும் அழைத்து வந்தனர். 1533-ம் ஆண்டில் போர்த்துக்கீசியர் கப்பல் படையோடு வந்து கிழக்கு கடற்கரையிலுள்ள துறைமுகப் பட்டினங்களைக் கைப்பற்றிக் கொண்டனர். பரதவர்கள் அனைவரும் ஒரே நாளில் ஞானஸ்நானம் பெற்றனர். பூனைக்குத் தப்பியோடி புலிவாயில் மாட்டிக் கொண்டது போல பரதவர் நிலையும் ஆயிற்று. போர்த்துக்கீசியர் அராபியர்களை விட மோசமாகப் பரதவர்களைக் கொள்ளையடிக்க ஆரம்பித்தனர். ஒரே மதத்தைச் சேர்ந்தோராயினும், போர்த்துக்கீசியர்கள் கொள்ளைக்காரர்தான் என்பதை பரதவர்கள் தெரிந்து கொண்டார்கள். இருவருக்குமிடையே பெரும் போராட்டம் மூள்வதற்கு முன்பாக போர்த்துக்கீசியர் அவர்களோடு ஒரு உடன்படிக்கைக்கு வந்தார்கள். இதன்படி மணப்பாறை, ஆலந்துலா, வீரபாண்டியன் பட்டணம், புன்னைக்காயல், தூத்துக்குடி, வைப்பாறு, வேம்பாறு என்ற ஏழு துறைமுகங்களிலும் ஏற்றுமதி செய்யும் உரிமையைப் போர்த்துக்கீசியர் பெற்றனர். ஆண்டுதோறும் அவர்கள் ஒரு தொகையும், தங்கள் வாணிபத்தைப் பாதுகாப்பதற்காகக் கப்பமாகச் செலுத்தினர். கடற்கரைத் தலைவர்கள் சங்கு குளிப்பையும் முத்துச் சலாபத்தையும் தங்கள் தகுதிக்கு ஏற்ற முறையில் நடத்திக் கொள்ள வேண்டும்.


மதுரை நாயக்கர்கள் கப்பற்படை பலமில்லாததால் போர்த்துக்கீசியர் நடவடிக்கைகளை எதிர்த்து எதுவும் செய்ய முடியாமல் இருந்தது. அதன் பின்னர், டச்சுக்காரருடைய போட்டி ஏற்பட்டதற்குப் பிறகு நிலைமை மாறியது. போத்த்துக்கீசியரின் உரிமைகளை டச்சுக்காரர்கள் கொண்டாடத் தொடங்கினர். ஆனால் அவர்களுக்குக் கப்பல் வலிமை மட்டும்தான் இருந்தது. முதலில் அவர்கள் பரதவர் எதிர்ப்பைச் சமாளிக்க நேர்ந்தது. பரதவர்கள் கத்தோலிக்கர்கள் ; டச்சுக்காரர்கள் பிராட்டஸ்டெண்டுகள். காலம் செல்லச் செல்ல வெளிநாட்டு வியாபாரத்திற்கு டச்சுக் கம்பெனிகளே சாதனமாக இருந்தபடியால் அவர்களோடு வாணிபத் தொடர்பு கொள்ள வேண்டிய அவசியம் பரதவர்களுக்கு ஏற்பட்டது.


தென்னிந்திய அரசியல் அரங்கத்தில் ஆங்கிலேயர் ஆதிக்கம் ஓங்கியபோது டச்சுக்காரர்கள் ஆங்கிலேயரோடு வியாபாரப் போட்டியில் தோல்வியுற்றுக் கடற்கரைப் பட்டினங்களிலிருந்து வெளியேறினர்.


தமிழ் நாட்டுப் பரதவர் வீரம் மிகுந்தவர்கள். திறமை மிக்கவர்கள். தமிழ் நாட்டின் வரலாற்றில் பல இன்னல்களை அனுபவித்தவர்கள்.


அவர்களது வாழ்க்கை பெரும்பாலும் கடலில் கழியும். இன்னும் அவர்கள் மீன்பிடித்தல், சங்கு குளித்தல், முத்துக் குளித்தல் முதலிய தொழில்களையே பெரும்பான்மையாகச் செய்து வருகின்றனர். 1533 க்கு முன்பாக அவர்கள் கடலன்னை என்னும் கடல் தெய்வத்தையும், வருணண், இந்திரன் போன்ற புராண தெய்வங்களையும், முருகன் என்ற தமிழ் தெய்வத்தையும் வணங்கி வந்திருக்கிறார்கள். கடலன்னை தற்பொழுது கன்னி மேரியாகி விட்டாள். பழங்காலத்தில் கடல் பயணத்தில் இந்துக்களும் முஸ்லீம்களும் கலந்துகொண்டார்கள் என்பதற்கறிகுறியாக அவரது பாடல்களில் வேலனும், அல்லாவும் வணக்கத்திற்குரிய தெய்வங்களாகச் சொல்லப்படுகிறது. 


Source book : அம்பாப் பாட்டு