நகரத்தார் என்னும் நாட்டுக்கோட்டை செட்டி வரலாறு..!

நகரத்தார் என்னும் நாட்டுக்கோட்டை செட்டி வரலாறு..!


வாணிபத்துறையில் தலைசிறந்து விளங்கியவர்கள் நகரத்தார் என்னும் வகுப்பினர் ஆவர். சிறிய ஊர்களிலும் பெரிய நகரங்களிலும் இருந்துகொண்டு வாணிபத்தை நடத்திவந்தனர். இவர்கள் தம் வாணிகத் தொழிலைத் திறம்பட நடத்திக் கொண்டு, ஈட்டிய பொருளில் கோவில் திருப்பணிகள் போன்ற பொதுநலக் காரியங்கள் செய்வதில் சிறந்த தொண்டு புரிந்தனர். 


உக்கிரன் கோட்டையில் இராசசிங்கப் பேரங்காடி என்னுமிடத்தில் நகரத்தார்கள் பலர் வியாபாரம் செய்ததை ஒரு பழைய கல்வெட்டு தெரிவிக்கின்றது. அவ்வூரிலுள்ள வடவாயில் அமர்ந்தாள் கோவிலுக்கு ஐந்நூற்றுவர் குழுவைச் சேர்ந்த நகரத்தார் ஒருவர் கட்டிய திருச்சுற்றாலைக்கு 'நகரத்தார் திருச்சுற்றாலை' என்று பெயரிடப்பட்டதை 9 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு தெரிவிக்கிறது. இராமநாதபுரம் மாவட்டம் பிள்ளையார் பட்டியில் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் (13 ஆம் நூற்றாண்டு) கல்வெட்டொன்று பாண்டிய நாட்டில் பல ஊர்களில் குடியேறியுள்ள நகரத்தாரைப்பற்றிக் கூறுகிறது. எறுக்கன் குடியில் நகரத்தார் வசித்தவீதி ஐந்நூற்றுப் பெருந்தெரு என்று வழங்கப்பட்டது. 


பிள்ளையார் பட்டியில் இவர்களது திசையாயி ரத்தைந்நூற்றுவர் என்ற குழு இயங்கியது. சிவபுரியிலிலுள்ள கோயிலுக்கு ஆயிரத்தைந்நூற்றுவ ஈச்சரமுடையார் என்று பெயர் வழங்கப்பட்டது. அதற்கருகிலுள்ள அருவியூர் என்னும் ஊர் நானாதேசி உய்யவந்தான் பட்டணம் என்று வழங்கப்பட்டது. வாணிபக் குழுக்கள் பல கோவில்களைப் பராமரித்து  வந்தன. அவர்களுக்குச் சில விசேஷ இறை அல்லது கட்டணங்கள் வசூலிக்க அதிகாரம் இருந்தது. மாறவர்மன் முதலாம் குல சேகரன் காலத்தில் (14ஆம் நூற்றாண்டு) திசை ஆயிரத்தைந் நூற்றுவர் போன்ற பல வணிகக் குழுக்களின் பிரதிநிதிகள் ஒன்று கூடிக் கோவில் திருப்பணிகளுக்காக அவரவர் வியாபாரம் செய்த சரக்குகளின் தொகைக்கேற்பக் கட்டவேண்டிய தொகையை நிர்ணயித்தது. பல ஊர்களில் தங்கியிருந்த நகரத்தார்களின் பிரதிநிதிகள் கீரமங்கலத்தில் ஒன்றுகூடி சில பொது நலக்காரியங்களுக்காக ஒவ்வொருவரும் அவர்களது வியாபாரத் திற்கேற்ப ஒரு கட்டணம் செலுத்த வேண்டியதை நிர்ணயித்துக் கொண்டனர். இச்செய்தியை 13ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டொன்று குறிக்கிறது. 


இதுபோன்று மற்றொரு சமயம் இராம நாதபுரம் பகுதியிலுள்ள வணிகர் ஒன்றுகூடி அங்குள்ள ஒரு கோவிலைப் புதுப்பிக்கப் பல ஏற்பாடுகளைச் செய்தனர். அவர்களில் 'பதினெண் விஷயத்தார்' (பதினெட்டு நாட்டினர்), தென் இலங்கையைச் சார்ந்த வளஞ்சியர், அஞ்சுவண்ணத்தார், மணிக்கிராமத்தார் என்ற வணிகர் குழுவினர்கள் அடங்கியிருந்தனர் என்று குறிக்கப்பட்டுள்ளது. வேலங்குடி, கொடும்பாளூர் போன்ற ஊர்களிலும் மணிக்கிராமத்தார் இயங்கியதை அறிகிறோம். 


பாண்டியர் கல்வெட்டுகளில் நகரத்தார் பற்றி பல்வேறு தரவுகள் கிடைக்கிறது.