அண்ணாமலைச் செட்டியார், இராசா (1881 - 1948)

அண்ணாமலைச் செட்டியார், இராசா (1881 - 1948) 



இவர் இராமநாதபுரம் மாவட்டம் கானாடு காத்தான் என்னும் ஊரில் 30.9.1881 ஆம் ஆண்டு முத்தையாச் செட்டியாருக்கும், மீனாட்சி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். இவர் கரூரில் உள்ள பள்ளியில் சேர்ந்து ஆங்கிலமும் தமிழும் பயின்றார். 1901 முதல் 1910 வரை இந்தியா, பர்மா, இலங்கை, மலேசியா, கிழக்கிந்திய தீவுகள், சீயம் முதலிய நாடுகளில் அயராது பாடுபட்டுப் பெரும் பொருளீட்டினார். மிகவும் சுறுசுறுப்பும் , கண்டிப்பும் , காலமறிந்து எச்செயலையும் செய்யும் தன்மையுடையவராக விளங்கினார். 


1910 முதல் 1913ஆம் ஆண்டுவரை காரைக்குடி நகர சபையில் தலைவராகப் பணியாற்றினார். 1912இல் தில்லியில் நடந்த ஐந்தாம் மன்னரின் முடிசூட்டு விழாவிற்கு அழைக்கப்பட்டார். 1916 முதல் 1919வரை சென்னை சட்டசபையின் உறுப்பினராகவும் பதவி வகித்தார். 1917இல் நாட்டுக் கோட்டை நகரத்தார் சங்கத்தை சென்னையில் நிறுவினார். இவரது முயற்சியால் சென்னை சட்டசபையில் நகரத்தார்க்கு ஓர் இடம் அளிக்கப்பட்டது. பர்மா சட்ட சபையிலும் தனவந்தர் ஒருவருக்கு இடம் அளிக்கப்பட்டது.1920இல் இந்திய இம்பீரியல் வங்கியின் சென்னைக் கிளையில் ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1921 - 1935 ஆகிய காலத்தில் சென்னை அரசாங்க சபையில் உறுப்பினராக இருந்தார். 


இலண்டனில் ஐந்தாம் ஜோர்ஜின் முடிசூட்டு விழாவிற்குச் சென்ற சமயம் ஆக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகங்களைப் பார்வையிடும் சந்தர்ப்பமும் கிடைத்தது. இதனால் அவை போன்ற ஓர் உயர்கல்வி நிலையத்தை தமிழ்நாட்டிலும் ஏற்படுத்த வேண்டும் என அங்கேயே உறுதி பூண்டார். அதற்குத் தேவையான மூலதனத்தை ஒதுக்குவதிலும் பொருத்தமான இடத்தைத் தேர்ந்தெடுப்பதிலும் அடுத்து பத்து ஆண்டுகளைச் செலவிட்டார். சிதம்பரம் நகரிலேயே அண்ணாமலைச் செட்டியார் தம் தாயார் பெயரில் ஸ்ரீ மீனாட்சி கல்லூரியை நிறுவினார் (1920). 1922 இல் பி.ஏ. பட்டப்படிப்புத் தொடங்கப் பெற்றது . 1925 ஆம் ஆண்டளவில் தில்லையின் எல்லையில் உள்ள திருவேட்களத்தில் புதிய கட்டிடங்கள் கட்டப்பெற்று கல்லூரி அங்கு செயற்படத் தொடங்கியது. 1925 இல் மேலும் இரண்டு கல்லூரிகளை நிறுவினார். அவை மீனாட்சி தமிழ்க் கல்லூரி, மீனாட்சி வட மொழிக் கல்லூரி என்பவை. 


சாமிநாதய்யர், தண்டபாணி சாமி தீட்சதர், ஆங்கிலப் பேராசிரியர் கே.சாமிநாதன் போன்றோர் சிலராவர். 


1926இல் ஆந்திரப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. அதே போன்று தமிழுக்கும் ஒரு பல்கலைக்கழகம் தேவையென மக்கள் விரும்பினர். அதனால் அப்பணிக்கு இருபது இலட்சம் ரூபாயும் 700 ஏக்கர் நிலத்தையும் அளிக்க முன்வந்தார். அவர் வழங்கிய நன்கொடைகளை ஆதாரமாகக் கொண்டு பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. அது அவரின் பெயரால் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் என்று நாமகரணம் பெற்றது. துணைவேந்தர் பதவி அவருக்கும் அவருக்குப் பின் குடும்பத்தில் மாநில ஆளுனர் குறிப்பிடும் ஒருவருக்கும் வழங்கப்பட்டன. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை நிறுவிய பின் இராசா அண்ணாமலை இசைக் கல்லூரி என்ற பெயரிலேயே தனிக்கல்லூரியை நிறுவினார். அந்தக் கல்லூரி சில ஆண்டுகளுக்குப் பின் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது. 


அவர் தமிழிசை வளர்ச்சிக்குப் பெரும் பணி புரிந்தவர். 1941 ஆகஸ்ட் மாதத்திலே அண்ணாமலை நகரில் முதல் தமிழ் இசை மாநாடு நடக்க மூலகாரணராக விளங்கினார். 1943 இலே தமிழ்ச்சங்கம் நிறுவ உதவி புரிந்தார். 


அவர் தில்லைக் கோவிந்தராசப் பெருமாள் கோயில் இளையாற்றங்குடி சிவன் கோவில் ஆகியவற்றைப் புதுப்பிக்கவும் திருவண்ணாமலை சிவன் கோயில் முதலிய பல கோயில்களைப் பேணிப் பாதுகாக்கவும் பல நிதியுதவிகள் வழங்கினார். கானாடு கார்த்தானில் மகளிர் மருத்துவமனை நிறுவியும், சென்னையில் பெண்களுக்காக "வெலிங்டன் கிளப்பு” ஏற்படுத்தியும் தில்லையில் நகரப் பெருமக்களுக்காக நகர மன்றம், பூங்கா ஆகியவற்றையும் ஏற்படுத்தியும் பல சமூகப் பணிகள் புரிந்தார்.


செட்டியார் சமூகத்தில் ராஜா பட்டம் பெற்றவர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.