வேலூர் கலகம் - மக்களின் முதல் சுதந்திர புரட்சி..!

வேலூர் கலகம் - மக்களின் முதல் சுதந்திர புரட்சி..!

வேலூர்க் கலகம் எனப்படும் வேலூர்ப் புரட்சி ‘வீழ்ந்து பட்டோம்' நாம் என்றுணர்ந்த தென்னிந்திய மக்கள் விழித்தெழுந்த வீரக் கதையாகும். 

மாவீரன் திப்புவின் வீழ்ச்சிக்குப் பின், அவரது குடும்பத்தினர் கைதிகளாய் வேலூர்க் கோட்டையுள் அடைக்கப்பட்டனர். அவர்களை 1500 இந்திய 379 வெள்ளைச் சிப்பாய்கள் காவல் புரிந்தனர். 


1806ல் ஆங்கிலப் படையின் முதல் ரெஜிமெண்டின் முதல் பட்டாலியனின் ஆறு கம்பெனிகளும், நான்காவது ரெஜிமெண்டின் இரண்டாவது பட்டாலியனும் பணியில் இருந்தன. ஏப்ரல், மே மாதம் வாக்கில் சிப்பாய்களுக்குப் புதிய சீருடை அமுலாக்கப்பட்டது. புதிய தலைப்பாகை, தோலால் ஆன குல்லாய்ச் செண்டு, புதிய காலுறைகள் வழங்கப்பட்டு அணியு மாறு வற்புறுத்தப்பட்டது. ஆனால் வேலூர்ச் சிப்பாய்களுக்கு அதனை ஏற்க மனமில்லை. 


வாலாஜாபாத்திலும் அப்படியே. தம் ஆணை செயல்படாமற் போனதற்காக அவமானமுற்ற வெள்ளை அதிகாரிகள், சுதேசி சிப்பாய்களை பட்டினி போட்டனர். முன் நின்றவர்களுக்கு தலா 900சவுக்கடி தண்டனை அளித்தனர் . ஒரு சிப்பாயின் மாதச் சம்பளம் 7 ரூபாய் மட்டுமே. அதை விட்டெறிந்து விட்டு வேலையிலிருந்து வெளியேற வேண்டும் என ஆபாச அடைமொழியோடு அவர்கள் வெள்ளையரை வைத்தனர். 


சிப்பாய்களின் மனத்தில் எதிர்ப்புணர்வென்னும் நெருப்பு - திப்புவின் நினைவு எரிநெய் ஆயிற்று. 


திப்புவின் புதல்வர்கள், வேலூர்ப் பட்டாளத் தின் சுதேசித் தலைவர்கள், சிப்பாய்களின் எண்ணம் செயலாக ஊக்கம் கொடுத்தனர். மதுரைக் கலவரம் (1804), சித்தூர் கலவரம் 
(1804 - 5), மலபார் புரட்சி (1802 - 5) திருவாங்கூர் புரட்சி (1804 - 5) முதலானவையம் அவர்களது உணர்ச்சிகளைக் கூடுதலாக்கிற்று. 


புரட்சியாளர்கள், வேலூருக்கு அப்பால், நெல்லூர், காளஸ்திரி பகுதிகளோடு ரகசியத்தொடர்பு கொண்டார்கள். இந்து முஸ்லீம் மக்களை, சிப்பாய்களை வெள்ளையர்க்கு எதிராக ஒன்றிணைக்க முயன்றார்கள் - தமக்கெதிராக வதந்தி பரப்புவோர் இராணுவ நடவடிக்கைக்கு உள்ளாவர் என்று மிரட்டி யது கும்பினி ஆட்சி. 


ஜூலை 4 - ம் நாள் புரட்சி தினமாய்க் குறிக்கப்பட்டது. ஆனால் அது 8 -ம் தேதி என மாறி மீண்டும் 9 -ம் தேதி ஆயிற்று. அன்று மாலையும் இரவும், பல்வேறு காரணங்கள் காட்டி சிப்பாய்களில் பல பேர் கோட்டைக்குள்ளேயே தங்கினர். வெள்ளை அதிகாரிகள் உறங்கிக் கொண்டிருந்தனர். 10 -ம் தேதி விடிந்து கொண்டிருந்தது. இரவு இரண்டு மூன்று மணி. சிப்பாய்கள் சிறு பீரங்கிகளை சப்தமேதுமற்று நகர்த்திச் சென்று வெள்ளைக் குடியிருப்புகளுக்கு எதிரே நிலை நிறுத்தினர். சைகை கிடைத்ததும் துப்பாக்கி, பீரங்கிகள் முழங்கின. 


கர்னல் பான்கோர்ட் முதல் பலி. அடுத்து கர்னல் மெக்சிராஸ். மெக்சிராஸின் சடலத்தின்மீது சிப்பாய் கள் காறி உமிழ்ந்து, எட்டி உதைத்து இகழ்ந்தனர். அவர்தான் புதுத்தொப்பி அணியக் கட்டாயப்படுத்தியவர். அரண்மனைப் பணியாளர் கேப்டன் வில்லி சனை சுட்டு வீழ்த்தினர். சார்ஜெண்ட் ஜான் ஈலே துரத்திச் சென்று வளைந்த கொடுவாளால் வெட்டப்பட்டார். திப்புவின் இளவரசர்கள து பணியாட்கள் புரட்சி நடத்திய சிப்பாய்களுக்கு முழு உற்சாகத்துடன் உதவி செய்தனர். எதற்கோ, கோட்டையிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்த மேஜர் ஆம்ஸ்ட்ராங் என்ன கலவரம் இது என்றறிய பல்லக்கு விட்டிறங்கினார். கனன்ற குண்டுகளே அவரது கேள்விக்கு பதிலுரைத்தன. 


ஐநூறு இந்திய சிப்பாய்கள் ஒன்று திரண்டு வெள்ளைக் குடியிருப்புகளின் மீது குண்டுமழை பொழிந்தனர். 69 -ம் ரெஜிமெண்டின் வெள்ளை வீரர் அநேகம் பேர் மாண்டு வீழ்ந்தனர். சார்ஜெண்ட் காஸ்கிரேவ் ஊனப்பட்டு வீழ்ந்தார்.


ஒன்றரை மணி நேரம், தாக்குதல் தீவிரமாக நீடித்தது. பின் இளவரசர் முஸ் - உத் - தீன் ஆணைப் படி கோட்டையில் வெற்றி முழக்கத்தோடு பச்சை வர்ணப் பின்னணியில் கர்ஜித்து நிற்கும் வரிப் புலிக் கொடியொன்று ஏற்றப்பட்டது. அந்த நேரம் கோட்டை முழுவதும் புரட்சியாளர்கள் வசத்தில் இருந்தது. 


காலை 9 - 30 மணி அளவில் வெளியிலிருந்து வெள்ளைப்படை உதவிக்கு வந்தது. மைசூர் இளவரசரும் தான் தான் தலைவர் என்று அறிவித்து முன் வரவில்லை. புரட்சியின் நோக்கத்தை மறந்து போன இந்திய சிப்பாய்கள் கொள்ளையடிப்பதில் தீவிரம் காட்டினர். அதனால் பெருங்குழப்பம் விளைந்தது. காலை 10  மணி அளவில் வெள்ளையர் கை ஓங்கிற்று. இந்தியச் சிப்பாய்கள் துருவித் துருவித் தேடப்பட்டு கொல்லப்பட்டனர். ஆங்கிலேயர்க்கெதிரான இந்தியாவின் முதலாவது இராணுவக்கிளர்ச்சி இப்படித் தோல்வியுற்றது.


Source book : ஆவணமலர் 1994