வத்திராயிருப்பு மூவரையத்தேவன்

வத்திராயிருப்பு மூவரையத்தேவன்
~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள வத்திராயிருப்பு-கோட்டையூர் பகுதிகளை காலங்காலமாக மறவரினத்தில் "மூவரையர்" எனும் பட்டத்தை கொண்ட சிற்றரசர் ஆண்டுவந்தனர். இவர்கள் சிறுதாலிக்கட்டி மறவர் பிரிவினராவர்.இவர்களே முருக்கநாட்டு மூவராயர் எனும் பெயர் பெற்ற 72பாளையக்காரருள் ஒருவருமாவர். இவர்கள்பற்றிய குறிப்பை இலந்தைக்குளம் செப்பேடும்,மூவரையன் விறலிவிடு தூதும்,மூவரையன் வண்ணம் எனும் நூலும் தெரிவிக்கிறது. 

இலந்தைக்குளம் செப்பேடு
- - - - - - - - - - - - - - - - - - - - - - - -
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் - இலந்தைக்குளம்.

வட்டம் - வத்திராயிருப்பு
மாவட்டம் - விருதுநகர்
மொழியும் எழுத்தும் - தமிழ்-தமிழ்
அரசு / ஆட்சியாளர் - நாயக்கர் / திருமலை நாயக்கர்
வரலாற்று ஆண்டு - 23.7.1654

விளக்கம்
- - - - - - - - -
திருமலை நாயக்கர் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் நாச்சியாரை வணங்கச் சென்று கொண்டிருந்த வழியில் குலையப்பாறை பருவத தடாகம் என்ற இடத்தில் ஒரு பெண்ணும் அவளது குழந்தைகளும் தலைவிரிகோலமாக அழுது புலம்பிப் பெருத்த ஆரவாரம் செய்து கொண்டிருந்ததைக் கண்டு தனது இராச்சியத்தில் தனது விசயத்தின் போது ஏன் இப்படி ஒரு அவலம் என்று சினந்து அப்பகுதி வெள்ளிக்குறிச்சி  பாளையக்காரர் சீரங்க நாயக்கரை அழைத்துக் காரணத்தை வினவினார். பாளையக்காரர் அப்பெண்ணிடம் காரணத்தை வினவ, அப்பெண்ணின் கணவன் புலியால் கொல்லப்பட்டான் என்பதை அறிந்து திருமலை மன்னரிடம் தெரிவிக்க, மன்னர் அப்புலியைக் கொள்வதற்கு ஆணையிட்டார். அப்புலியைக் கொல்ல மூவரையத் தேவன் என்னும் வீரன் முன்வந்தான். அவனும் அவனது உறவினர் ஆறுபேரும் சீரங்கநாயக்கனுடன் சென்று புலியைத் தேடிக் கொன்றார்கள். அவனுக்குத் "திருமலை மூவரையத்தேவன்" என்று திருமலை நாயக்கர் பட்டமளிதார். வத்திராயிருப்பை ஒட்டிய கிராமத்தைத் தந்து செப்புப் பட்டயம் வழங்கினார்.

மூவரையன் சிறப்புப்பெயர்கள் 
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
திருமலை மூவரையத்தேவனின் சிறப்புப்பெயர்களாக மூவரையன் விறலிவிடு தூது சிலபெயர்களை நம்மிடம் பகிர்கிறது. அவையாவன,..
வினைதீர்த்தான் -அடைந்தாரைக்காப்பான்  (அடைக்கலம் காத்தார்) -பஞ்சந்தாங்கி -குடிதாங்கி -படி தாங்கி -வளந்தாங்கி- பூபதி . ...முதலிய பட்டங்களுடையவன் மூவரையன். 

மூவரையன் விறலிவிடு தூது!
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
மூவரையனைப் பாட்டுடைத்தலைவனாகக்கொண்டு மிதிலைப்பட்டி சிற்றம்பலக்கவிராயரெனும் புலவர், "மூவரையன் விறலிவிடு தூது" எனும்  செய்யுளை இயற்றியுள்ளார். அக்காலத்தில் மன்னர்கள் -குறுநில அரசர்கள் -பெருஞ்செல்வச்சீமான்களைப் புலவர்கள் புகழ்ந்து பாடி இத்தகைய விறலிவிடு தூது - கோவை-முதலான பாடல்களைப் பாடி அந்தப் பாடலில் வரும் தலைவனைத் தாமாக எண்ணி பாடி அவர்களை மகிழ்விப்பர். அரசர் பெருமக்களும் இதன் பொருளுணர்ந்து அப்புலவர்கள் வாழ பரிசளிப்பதும் பெருவழக்காயிருந்தது. மூவரையனாகிய வீரைத் திருவேங்கட நாதன் எனும் பெயர் தாங்கிய இச்சிற்றரசனின் பூர்வீகம் வீரை என வழங்கும் வீரவநல்லூராகும். இவ்வூர் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்திற்கும்-சேரன்மகாதேவிக்கும் இடையில் உள்ளது. 

மூவரையன் விறலிவிடு தூது மூவரையத்தேவனை வள்ளல் என புகழ்ந்து பாடுகிறது. இவனின் கொடைத்திறமறிந்து திருமலை மன்னர் இவனுக்கு பொன்காளாஞ்சி -மீன் உருவம் பொறித்த தங்கப்பல்லக்கு -முத்திரை மோதிரம் -கையணியான கடகம் -தாமரைமுடி-ஆலவட்டம் -கொற்றக்குடை-காதணியான கட்டாணிமுத்து ஆபரணம் போன்ற சிறப்புகளை வழங்கியதையும் அது தெரிவிக்கிறது. 

மூவரையன் படைச்சிறப்பு
- - - - - - - - - - - - - - - - - - - - - - - -
மூவரையன் காலாட்படை, தேர்ப்படை, யானைப்படை ,குதிரைப்படை என சதுரங்கப்படையுடையவனாயிருந்தான் என்பதையும் அவனிடம் கேடயம் தாங்கிய வீரர்கள் நிறைந்திருந்தனர். இவன் "கருடக்கொடி"யை உடையவன் என்பதை...

"சுற்று மாய்த்து கைப்பலகையெல்லாம் புகப்போய் பற்றுங் கருடக்கொடி பதாகையினான்" -எனும் அடிகளால் உணரமுடிகிறது. 

இவன் தம்மிடம் பொருளிறைஞ்சி வந்த வாசுதேவன் எனும் அந்தணனுக்கு மண்-பொன் மற்றும் அணிகலன்கள் வழங்கி சிறப்பித்தமையை தூது சிற்றிலக்கியம் செப்புகிறது. 

"தீட்டும் பலனா ளினியவளங் கொண்டகண்ட
நாட்டிலொரு சாந்தை நன்னகரில் – வேட்டுறைவோன்
காலமொரு மூன்றுணருங் காசிப கோத்திரத்திள்
சீல மறைவாசு தேவன்பான் – ஞாலம்
மரபிலபி ராமியெனு மாதை வரைந்து
கரவிலின்ப மோகவல்லிக் கைக்தே – மருவிப்
பழகப் பழகப் பலரறிந்து பின்வேட்
டழகுக் ககமு மிரண்டாக்கி – விளைவொக்க
வாழுமந்த னாளிலின்ப வல்லி முறையினரை
சூழஞ் சயனத் துணரனைக்கே – யேழையேழ்
–    மூவரையன் விறலி விடுதூது

மூவரையன் திருப்பணிகள்.
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
திருமலை நாயக்கரிடம் அதிகாரியாக இருந்தபோது திருவேங்கடநாதனாகிய மூவரையன் காஞ்சியில் பெருந்தெரு ஒன்றையும்,மணிமண்டபமும்,திருவேங்கடநாதருக்கு கோபுரமும் எடுத்தமையை விறலிவிடுதூதின் கண்ணிகள் எடுத்தியம்புகின்றன. மேலும் சதுரகிரி மஹாலிங்கம் கோயிலை எழுப்பித்தவனும் இவனேயாவான். 
 மூவரையன் வண்ணம் எனும் நூல் இவனைப்பற்றி சொல்லும் செய்திகளை நாம் அடுத்த பதிவில் அலசுவோம் 

       -தொடரும்.

நன்றி! 

துணை செய்தவைகள்.

1.செப்பேடு மின்னுருவாக்கப்பட்ட / சேகரிக்கப்பட்ட நிறுவனத்தின் பெயர் / நபர் - தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை
குறிப்புதவிகள் - திருமலை நாயக்கர் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 1

2.விறலிவிடு தூது. 

அன்பன்.

கி.ச.முனிராஜ் வாணாதிராயன்