"மறவ நாயக்கர்" {தலைவன்கோட்டை சரித்திரம் பாகம் :2}

"மறவ நாயக்கர்" 
☆•~•☆•~•☆•~•☆

{தலைவன்கோட்டை சரித்திரம் பாகம் :2}

மறத்தேவர்களுக்கு நாயக்கர் எனும் பட்டம் இருந்ததை அறிந்தபோது உண்மையில் நான் மிகவும் வியப்பிற்கே ஆளானேன். இந்த நாயக்கர் பட்டமானது கொடுந்தமிழ்வடுகர்களுக்கே அதிகமாக வழங்கியிருப்பினும், அசல் தமிழ் குலத்தார்களுக்கும் வழங்கியவைகளுக்கு பல்வேறு சான்றுகள் கொண்டு அறியமுடிகிறது.மறக்குலக்கள்ளராகிய  புதுக்கோட்டை தொண்டைமான் "நாயக்க" பட்டம் கொண்டதற்கு சான்றிருக்கிறது. மறக்குல அகம்படியருக்கும் "நாயக்க" பட்டம் இருந்ததற்கு சான்றிருக்கிறது. ஆனால் மறக்குலத்தேவராகிய தலைவன்கோட்டை உறவினருள் ஒருவராகிய தலைவனார் ஒருவர் "நாயக்க" பட்டம் கொண்டதை "முள்ளிக்குளம் செப்பேட்டு நகலில்" கண்டறிந்தபோது மிகவும் ஆச்சரியம் அடைந்தேன்.

சூரசங்கு "நாயக்கராகிய" தலைவனார் 
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
 
இலஞ்சியைச்சேர்ந்த திரு. ஆ.நீலகண்டன் அவர்கள் இந்த செப்பேட்டு நகலை எடுத்து ஆவணம் இதழில் வெளியீட்டுள்ளார்.  ஆவணம் எனும் இதழ் தமிழகதொல்லியல்கழக வெளியீடாகும்.  அந்த செப்பேட்டு நகலில் "சூரசங்கு தலைவனார் " எனும் மறவர் குறிப்பிடப்படுகிறார்.  இதே சூரசங்கு தலைவனார் வழியினர்தான் தாருகாபுரம் செப்பேட்டில் "பொக்கிஷம் சூரசங்கு நாயக்கர்" எனும் பெயரோடு குறிப்பிடப்படுகிறார். இந்திரத்தலைவனார் எனும் பெயர் எவ்வாறு வழிவழியாகவே தலைவன்கோட்டை அரசற்கு  வழங்கிவந்ததோ, அதே போலவே அவர்களின் உறவினராகிய சூரசங்கு தலைவனார்களுக்கும் இந்த "சூரசங்கு" எனும் பெயர் விளங்கியிருத்தல் வேண்டும் என்பது நிச்சயம். தாருகாபுரம் செப்பேட்டில் "பொக்குஷம் சூரசங்கு நாயக்கர் என அறியப்படுபவராகிய இவரது வழிவந்தோர் முள்ளிக்குளம் செப்பேட்டு நகலில் சூரசங்கு தலைவனார் எனக் குறிக்கப்படுகிறார்கள். 

தாருகாபுரம் செப்பேடு வாசகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
" யிப்படிக்கு சம்மதித்து சாதனப்பட்டை
  யம் எழுதிக் குடுத்தோம் சீவிலி மகாரா
  சா அவர்களோம் யிந்திரத் தலவனு
  க்கு மிதுக்கு சாட்சி பொக்குஷம் சூரசங்
  கு னாயக்கர் கடம்பூர் தடியத் தலவன் 
  வடகரை முடிபொறுத்த செம்புலித் தே
  வன் யிந்த சாதனப்பட்டையம் எழுதினே"....

                       - என தொடரும் தாருகாபுரம் செப்பேட்டின் வரிகளில், "பொக்குஷம்சூரசங்கு னாயக்கர்" என வருவதைக் காணலாம். 

முள்ளிக்குளம் செப்பேட்டு நகல் வாசகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
"சாலிவாகன சகாத்தம் 1687க்கு மேல் செல்லா நின்ற கொல்லம் 939 க்கு ஆவணி மாதம் 11•••..சுக்கிரவாரமும் திருவோண நட்சத்திரமும் பூருவபட்சத்துத் திசமியும் கூடிய ஷ சுபதினத்தில் திருமலைபுரம் இந்திரத்தலைவனார் திருமாந்தத்தலைவனாரவர்களும்  சூரசங்குத் தலைவனாரவர்களும் முள்ளிக்குளம் நாட்டுக்கணக்கு சீவலப்பிள்ளை குமாரன் நமச்சிவாயம் பிள்ளைக்கு எழுதிக்கொடுத்த தாம்பூர சாதனம்."..... 

           - என தொடர்ந்து வரும் வரிகளில் "சூரசங்கு தலைவனாரவர்களும்" எனும் பட்டயத்தொடரைக்காணலாம். இந்த முள்ளிக்குளம் எனும் பேரூரானது தலைவன்கோட்டை சமஸ்தானத்திற்குட்பட்ட முக்கியமான மையம் ஆகும். இது தலைவன்கோட்டைக்குட்பட்ட புளியங்குடி எனும் இன்றைய நகராட்சிக்கு அடுத்த நிலையில் இயங்கும் முக்கிய கேந்திரமாக விளங்குகிறது. இங்கு இடையர்கள் மிகுதியாக வாழ்கிறார்கள். அவர்களில் முக்கியஸ்தர்கள் "பாண்டியக்கோனார்" வகையறாக்கள் ஆவர்.இவர் பெயரில் அங்கே பாண்டிக்கோனார் பள்ளி ஒன்றும் இயங்கிவருவது சிறப்பிற்குரிய செய்தியாகும். இந்த செப்பேடும் அக்குடும்பத்தாரிடமே இருக்கிறது. தவிர சங்கரநயினார்கோயிலின் வாசலின் மிக அருகிலேயே கோயில் திருமண மண்டபத்திற்கு அடுத்து தெற்கு நோக்கிய பழமையான மண்டபம் "சங்குத்தேவர்" வகையறாக்களுக்குரிய மண்டகப்படியாகும். அந்த மண்டகப்படி புகைப்படத்தை அடுத்த பதிவில் பதிவிடுகிறேன். 

ஆக பொக்குஷம்சூரசங்கு நாயக்கர்  -சூரசங்கு தலைவனார் ஆகிய இருவரும் ஒருவழியினரே என விளங்குகிறது அல்லவா? மேலும் "தலைவனார்" எனும் பட்டமும், சொல்லும், மறக்குலத்தேவர்களையே வரலாற்றில் குறித்து நிற்குமேயன்றி வேறெந்த இனத்தவரையும் குறிப்பதில்லை என்பது தெளிவான விடயமாகும். 
                ~•~•~•~•~•~•~•~•~•~•~
அடுத்த பதிவில் முள்ளிக்குளம் பாளையம் செப்பேடு நகல் பற்றியும் அது சொல்லும் செய்திகளையும் விவரிப்போம். -நன்றி! 

☆அன்பன் :

கி.ச.முனிராஜ் வாணாதிராயன்☆