உடையாளூரில் பள்ளிப்படையா?

உடையாளூரில் பள்ளிப்படையா?
இரா. கலைக்கோவன்
*******************************************************
தாராசுரத்திற்கும் கும்பகோணத்திற்கும் இடையிலுள்ள உடையாளூர் இன்றும் ஒரு சிற்றூராகவே வரலாற்று மணத்தோடு திகழ்கிறது. இவ்வூர்ப் பால்(ழ்?)குளத்தம்மன் கோயில் வாயிலமைப்பில் பழங்கட்டுமானத்தைச் சேர்ந்த தூணொன்று இடம் பிடித்துள்ளது. இந்தத்தூண் இவ்வூர்ப் பெருமாள் கோயிலில் இருந்து இங்குக் கொணரப்பட்டதாக உள்ளூர் முதியவர்கள் கூறுகின்றனர். இத்தூணிலுள்ள முதற்குலோத்துங்கரின் நாற்பத்திரண்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டைப் படித்த சிலர் அதன் பொருளைப் புரிந்து கொள்ளாமலேயே, உடையாளூரில் முதலாம் இராஜராஜரின் பள்ளிப்படை அமைந்திருந்ததாக எழுதி வைத்தனர். ஏறத்தாழப் பத்தாண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த இந்த தவறான பதிவை, இது தொடர்பான கட்டுரை வெளியான காலத்திலேயே, கள ஆய்வின் மூலம் கண்டறியப்பட்ட உண்மைகளை முன்னிறுத்தி மறுத்து, தகவல் தவறானது என்று டாக்டர். மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய ஆய்வர்கள் அழுந்த உரைத்துள்ளனர்.

எனினும், சில திங்கள்களுக்கு முன் மீண்டும் இந்தப் பள்ளிப்படைத் தகவல் தமிழ்ப் பல்கலைக்கழகக் கட்டடக்கலைத் துறைப் பேராசிரியர் முனைவர் கோ.தெய்வநாயகத்தின் பெயருடன் அறிக்கை என்ற வடிவில் தினமலர், தினத்தந்தி முதலிய நாளிதழ்களில் வெளியானது. இதைப் படித்த பொன்னியின் செல்வன் குழுவைச் சேர்ந்த நண்பர்கள் திரு.ச.கமலக்கண்ணன், திரு.ம.இராமச்சந்திரன் ஆகியோர் இது பற்றிய உண்மையறிய விழைந்து டாக்டர்.மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய ஆய்வர்களைத் தொடர்பு கொண்டனர். ஏற்கனவே இதுகுறித்து விரிவான அளவில் மறுமொழி அளிக்கப்பட்டிருந்த போதும், நேரடியாகக் களத்திற்கே சென்று பார்வையிடுவது ஆர்வமுள்ள அவ்விளைஞர்களின் வரலாற்றுப் பயணத்திற்குச் சரியான தடம் அமைத்துத் தருமென்ற எண்ணத்துடன் மீண்டும் ஒரு கள ஆய்விற்கு வரலாற்றாய்வு மையம் தயாரானது.

ஒரு ஞாயிறன்று காலை 9:00 மணியளவில் கமலக்கண்ணன், இராமச்சந்திரன் உடன்வர, உடையாளூர் அடைந்தோம். பொன்னியின் செல்வன் குழுவினருள் ஒருவரான திரு. சீதாராமன் கும்பகோணவாசி. அவர் இளங்காலையிலேயே உடையாளூர் சென்று சிவன் கோயில், பால்குளத்தம்மன் கோயில் இரண்டையும் நாங்கள் காண ஏற்பாடு செய்திருந்தார். முதலில் சிவன் கோயிலைப் பார்த்தோம். அருமையான சிற்பங்கள். ஏராளமான கல்வெட்டுக்கள். சில சிற்பங்களின் கீழ் அவற்றைச் செதுக்கக் காரணமானவர்களின் மிகச்சிறிய அளவிலான வடிவங்களும் இடம்பெற்றிருந்த அமைப்பை நண்பர்களுக்குச் சுட்டிக் காட்டினோம். அவ்வடிவங்களுள் ஒன்றைத்தான் பத்திரிக்கைச் செய்தி முதலாம் இராஜராஜர் என்று அடையாளப்படுத்தி இருந்தது, அந்தத் தகவல் எத்தனை பிழையானது என்பதை, அனைத்துச் சிற்பங்களையும் ஆய்வு செய்த நிலையில் நண்பர்கள் உணர்ந்தனர்.

பால்குளத்தம்மன் கோயில் சென்றபோது கிராம நிர்வாக அலுவலரும் சேர்ந்து கொண்டார். அதுநாள் வரை வந்திருந்த பள்ளிப்படை பற்றிய செய்திகள் அனைத்தையும் எங்களிடம் காட்டிய அவர் எப்படியாயினும் உண்மையைக் கண்டறிந்து கூறுமாறு வேண்டிக்கொண்டார். ஏற்கனவே மைய ஆய்வர்களுடன் கல்வெட்டு வாசிப்பில் பங்கேற்ற அனுபவத்துடன் கமலக்கண்ணனும் இராமச்சந்திரனும் ஒவ்வோர் எழுத்தாக கவனத்துடன் படித்த பால்குளத்தம்மன் கல்வெட்டை மையக் கல்வெட்டாய்வர்கள் பேராசிரியர் மு.நளினியும் இரா.இலலிதாம்பாளும் படியெடுத்தனர். அங்குச் சூழ நின்றிருந்த மக்கள் அனைவருக்கும் கிராம நிர்வாக அலுவலர் உட்பட, அக்கல்வெட்டு வரிவரியாக வாசித்துக் காட்டப்பட்டது. கிராம அலுவலர் கல்வெட்டின் பொருள் அறிந்ததும் பள்ளிப்படை வதந்திக்காகப் பெரிதும் வருத்தப்பட்டார்.

பால்குளத்து அம்மன் கல்வெட்டுப் பாடம்

1 ஸ்வஸ்திஸ்ரீ ஸகலபுவந சக்கரவர்த்திகள் ஸ்ரீகு
2 லோத்துங்க சோழ தேவற்கு யாண்டு நாற்ப
3 த்திரண்டாவது ஸ்ரீசிவபாதசேகரமங்கலத்து
4 எழுந்தருளிநின்ற ஸ்ரீராஜராஜதேவரான ஸ்ரீ
5 சிவபாதசேகரதேவர் திருமாளிகை முன்பில்
6 பெரிய திருமண்டப முன்[பி¦]லடுப்பு ஜீர்
7 ந்நித்தமையில் இம்மண்டபம் எடுப்பி
8 த்தார் பிடவூர் (பிடவூர் வேளான்) வேளா
9 ன் அரிகேசவனாந கச்சிராஜற்காக இவ்வூர்
10 நாயகம் செய்து நின்ற ஜயசிங்ககுலகா
11 ல வளநாட்டு குளமங்கல நாட்டு சா
12 த்தமங்கலத்து சாத்தமங்கலமுடை
13 யான் நம்பிடாரன் நாடறிபுகழன் இ
14 வருடன் விரதங்கொண்டு செய்தார் இ
15 வ்வூர் பிடாரகளில் ராஜேந்த்ரசோழனு
16 தைய நாயகநான ஈசானசிவரும் தேவ
17 நபயமாந அறங்காட்டி பிச்சரும்

இக்கல்வெட்டின் காலமும் பொருளும்

காலம் : கி.பி 1112

பொருள் : ஸ்ரீசிவபாதசேகரமங்கலம் என்னும் ஊரில் கட்டப்பட்டிருந்த ஸ்ரீஇராஜராஜதேவரான ஸ்ரீசிவபாதசேகரதேவர் திருமாளிகையின் முன்பிருந்த பெரிய திருமண்டபம் பழுதுபட்டதால் பிடவூர் வேளான் அரிகேசவனான காசிராஜன் அதைத் திருப்பணி செய்ய விழைந்தார். ஜெயசிங்ககுலகால வளநாட்டு சாத்தமங்கலத்து பிடாரன் நாடறிபுகழன் அவருக்காக இப்பணியை மேற்கொண்டார். ஸ்ரீசிவபாதசேகரமங்கலத்துப் பிடாரர்களில் இராஜேந்திர சோழன் உதைய நாகனான ஈசானசிவரும் தேவன் அபயமான அறங்காட்டிப் பிச்சரும் இப்பணிக்கு உறுதுணையாக அமைந்தனர்.

இந்தக் கல்வெட்டில் எந்த வரியிலாவது பள்ளிப்படை என்ற சொல்லாட்சியோ, முதலாம் இராஜராஜரின் மரணமோ குறிக்கப்பட்டிருக்கிறதா என்பதை இதைப் படிப்பவர் யாரும் நுணகிப் பார்க்கலாம். இராஜராஜதேவரான சிவபாதசேகரர் என்ற பெயரில் ஒரு திருமாளிகை இருந்த தகவல் தவிர முதலாம் இராஜராஜரைப் பற்றி வேறெந்தக் குறிப்பும் இக்கல்வெட்டில் இல்லை. இந்நிலையில் இது பள்ளிப்படையைக் குறிக்கிறது எனும் எள்ளளவும் உண்மையற்ற ஒரு தகவலை, கல்வெட்டைத் தவறாகப் புரிந்துகொண்ட ஒருவர் கட்டுரையாக்க, அந்தப் பொய்த்தகவல் அப்போதே மைய ஆய்வர்களால் மறுக்கப்பட்ட நிலையிலும், மீண்டும் மீண்டும் அதை ஊதிப் பெரிதாக்க நினைக்கும் 'பெருமக்களை' மக்கள்தான் அடையாளம் கண்டு ஒதுக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். கல்வெட்டில் இராஜராஜன் பள்ளிப்படை பற்றிய தகவல் இல்லை என்பது உறுதியானதும், அவர் பள்ளிப்படை இருக்குமிடமாகப் பத்திரிகைகள் சுட்டிய வயல்பகுதிக்குச் சென்றோம். தனியார் ஒருவருக்குச் சொந்தமான நிலப்பகுதியில் ஆவுடையாருடன் லிங்கமொன்று மணலில் புதைந்த நிலையில் காட்சியளித்தது. நிலத்துக்காரர் உதவியுடன் அந்த லிங்கத் திருமேனியைச் சூழ ஆராய்ந்தோம். பல ஊர்களில் பரவலாகக் கிடக்கும் கைவிடப்பட்ட லிங்கத் திருமேனிகள் போல அதுவும் இருந்ததே தவிர, அதன் கீழோ, சுற்றுப் பகுதியிலோ பத்தரிக்கைகள் குறிப்பிட்டிருந்தாற்போல் எத்தகு கட்டுமானமும் இல்லை. கமலக்கண்ணன் இந்த ஆய்வு முழுவதையும் படமெடுத்தார். இவ்வாய்வு, 'இங்குப் பள்ளிப்படை இல்லை' என்பதை ஊர்மக்களுக்குக் கண்ணெதிரில் காட்டியது. உண்மையறிந்த நிலச் சொந்தக்காரர் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.

தமிழ்நாட்டில் வரலாற்றை விட, வரலாற்றைப் போல் வழங்கும் கண், காது, மூக்கு வைத்த கதைகள்தான் பரபரப்பாகப் பேசப்படுகின்றன. நம்பப்படுகின்றன. இந்தப் பொய்களையெல்லாம் நேரடிக் கள ஆய்வுகளின் மூலம் அடையாளம் காட்டுவது நம் கடமை. 'போதுமே பொய்யுரைகள்' என்ற நம் நல்லுறவுப் பயணத்தில் இது முதற்படி