பாண்டிய பேரரசு மதுரையே இழந்த வரலாறு - ஆய்வு நோக்கில் ஓர் வரலாற்று பார்வை..!

கி.பி. 1190  முதல் 1311 வரையுள்ள 120 ஆண்டுகளைத் தான் பாண்டியப் பேரரசுக்கு உரியதாகக் கொள்வார்கள். ஆனால் கி.பி. 1190க்கு முன்னே - (கி.பி. 1090இல்) சோழருடைய மேலாண்மையைப் பாண்டியர் ஏறக்குறைய உதறித் தள்ளினார்கள். மதுரையில் தனியரசு ஏற்படுத்திக் கொண்டார்கள். மதுரைப் பாண்டியர், பேரரசுத் தகுதியை 1190இல் அடைந்தார்கள். அதன் பின்பு 25 ஆண்டுகளில் வீறு கொண்டெழுந்தார்கள். கி.பி. 1216இல், சோழரைப் போரில் வென்றடிப்படுத்தினார்கள். "சோணாடு கொண்டருளி" என்ற பட்டத்தையும் பாண்டியர்கள் பெற்றார்கள். இதன் விளைவாகத் தமிழகம் முழுமைக்கும் உரிய மதுரைப் பேரரசை உருவாக்கினார்கள். 


கி.பி.1311இல் டெல்லியின் முகமதியப் படையெடுப்பின் போது மதுரைப் பேரரசின் மூலபலம் முரிந்தது. கி.பி. 1318, 1323ஆம் ஆண்டுகளில் அலையலையாக வந்த முகமதியப் படையெடுப்புகளினால் பாண்டியர்கள் மதுரையை விட்டு வெளியேறினார்கள். அவர்கள் மன்னர்களாக மதுரைக்குத் திரும்பி வரவேயில்லை.


இப்பேரரசின் மதுரைப் பீடத்தினுடைய கடைசி மன்னனாகிய சடையவர்மன் வீரபாண்டியன் தன் பங்குக்கு எனக் கிடைத்த திருச்சிப் பகுதி வீரதவளத்தைத் தலைநகராகக் கொண்டு கி.பி. 1343 வரை ஆட்சி நடத்தினான். ஆகவே இப்பாண்டியப் பேரரசின் உண்மையான வயது கி.பி. 1190இல் தொடங்கி 1343 வரையுள்ள 153 ஆண்டுகள் எனக் கொள்வது சரியானதாக அமையும். இதைக்கூட மாற்றிச் சொல்ல வருகின்ற வெளிப்படையான கணிப்பு ஒன்றுண்டு. அதனைப் பின்வருமாறு விளக்கலாம். 


கி.பி. 1311, 1318, 1323ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற முகமதியப் படையெடுப்புகளில் கடைசிப் படையெடுப்பின் விளைவாக டெல்லியின் இளவரசன் முகமதுபின் துக்ளக் மதுரையில் சுல்தானிய முசுலீம் ஆட்சியைக் கி.பி. 1323இல் ஏற்படுத்தினான். இதனை அகற்றி விட்டுத் தங்களுடைய ஆட்சியை நிலை நிறுத்துகின்ற போர் முயற்சியில் தோற்றுப் போன பாண்டியர், மதுரை வீழ்ந்த பின்னர்த் தமிழகமெங்கும் சிதறி நின்றனர். கி.பி. 1300 அளவில் நெல்லூர் முதல் கொல்லம் வரை விரிந்திருந்த பாண்டியப் பேரரசை மதுரையின் பெயரால் அரசாட்சி செய்வதற்காக ஏற்கனவே நியமனம் செய்யப்பட்டிருந்த இணையரசர்கள் (ஐவர் பாண்டியர் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள்) ஆங்காங்கே குமரி முதல் சென்னை வரை, மதுரையில்லாத பேரரசின் ஆட்சியைத் தொடர்ந்து நடத்தினார்கள். 


கி.பி. 1335 அளவில் எட்டுப் பாண்டிய மன்னர்கள் சோழ மண்டலம், கொங்கு மண்டலம், தொண்டை மண்டலம் போன்ற பகுதிகளில் தொடர்ந்து இவ்வாறு ஆண்டார்கள் என்பதற்கு ஆதாரமாக மேற்படி மண்டலங்களின் பற்பல ஊர்களில் ஏராளமான பாண்டியர் கல்வெட்டுகள் கிடைக்கின்றன. சான்றாகத் திருப்பத்தூர்க் கோயில் கல்வெட்டு (119, 120/1908) கூறுவது போல, திருப்பத்தூர்க் கோயிலிருந்து கி.பி.1342 இல் முகமதியரைச் சடையவர்மன் வீரபாண்டியன் விரட்டினான். வட ஆர்க்காடு திருவல்லம் கல்வெட்டு அறிவிப்பது போல, மாறவர்மன் வீரபாண்டியன் என்ற பாண்டிய மன்னன் கி.பி.1357இல் தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டபோது காஞ்சிபுரத்தைக் கடந்து அவனுடைய அதிகாரம் நிலைத்திருந்தது. அச்சமயம் திருவல்லத்தில் பாண்டியரின் படைப்பற்று (பாசறை) இருந்தது. இராமாதபுரத்து திருக்காளக்குடிக் கல்வெட்டு (64/1916) கி.பி. 1365இல் (இதே பாண்டியன் காலத்து) கூறுவது போல, விசயநகரத்து வீர கம்பனாவின் படை முகமதியரை மதுரையிலிருந்து அகற்றியது. இதைக் கி.பி. 1380 வரை ஆண்ட தஞ்சை வீர பாண்டியர் தமிழகமெங்கும் அமைந்திருந்த ஆட்சி அமைப்புகளைத் தற்காத்து நின்றார்கள்



அனைத்து மண்டலங்களிலும் பாண்டியர் ஆட்சியைத் தொடர்ந்து நடத்தி வந்த நாட்களில் - அதாவது கி.பி. 1325 அளவில் - தொண்டை மண்டலத்து வட ஆர்க்காட்டுப் பகுதியில் சம்புவராயன் என்ற மன்னன் தனக்கென ஓர் அரசை அமைத்துக் கொண்டான். 


இந்த வேளையில் தமிழகத்தை மீட்க வந்தான் விசயநகரத்து இளவல் குமாரகம்பன் என்பவன் கி.பி. 1361 அளவில் இந்த இளவல் மேற்படி சம்புவராயரை வென்றான். பின்பு மதுரை நோக்கி வந்தான். கி.பி. 1371 அளவில் முகமதியரை அவன் வென்றான். தமிழகமெங்கும் சிதறி கிடந்த ஏனைய பாண்டிய மன்னர்கள், கருநாடகப் போசளப் பேரரசன் மூன்றாம் வல்லாளனுக்கு வேண்டிய உதவியைச் செய்து வந்தார்கள். மதுரையை நோக்கி வல்லாளன் தனது படைகளை அனுப்பி வைக்கத் தக்க துணையாகவும் அவர்கள் நின்றார்கள். இந்தப் போசள அரசன் வல்லாளனை மதுரைச் சுல்தான் சிறைபிடித்துக் கொன்றான். பிறகு பாண்டிய மன்னர்கள் ஆங்காங்கே 'அஞ்சினான் புகலிடம்' என்ற பாதுகாப்பு இடங்களை உருவாக்கிப் படைகளையும், ஆயுதங்களையும் சேகரித்து வைத்தார்கள் எனக் கி.பி. 1342இல் அமைக்கப்பட்ட பாண்டியரின் இடப்பாறைக் கல்வெட்டும் (141/1941-42), கி.பி. 1358இல் அமைக்கப்பட்ட பாண்டியரின் போளூர்க் கல்வெட்டும் (201/1932-33) விரிவாகக் கூறுகின்றன. 


குமாரகம்பணன் இறந்த பின்னர் அவனுடைய மகன் சமுண்ணா உடையார் கி.பி. 1378 அளவில் மதுரை நகரை முழுமையாக மீட்டான். பின்பு விசய நகரத்துப் படைத் தளபதிகளிடம் மதுரையையும், அதன் சுற்றுப் பகுதிகளையும் அவன் ஒப்படைத்து ஆளச் செய்தான். சென்னை வரை சிதறி நின்ற பாண்டிய மன்னர்களின் ஆட்சி பெரும்பாலான இடங்களில் கி.பி. 1378 அளவில் ஒரு முடிவுக்கு வந்தது. அப்போது விசய நகர மீட்பாளர்கள் தமிழகமெங்கும் படைமறவர் ஆட்சியை நிலைநாட்டினார்கள்.


இத்தகைய படைமறவர் ஆட்சி கி.பி. 1450 வரை தொடர்ந்தது. பின்னர்ப் பாண்டியர் என்று சொல்லிக் கொண்ட வாணாதிராயன் என்ற வாணர்குலத்துவனுக்கு விசய நகரத்தாரால் மதுரை ஆட்சிப் பொறுப்பு கி.பி. 1497 வரை கொடுக்கப்பட்டிருந்தது. பின்பு மதுரையும் விசயநகரத்துராயரின் நேரடி ஆட்சிக்குரியதாயிற்று. ஆகவே ஆய்வுரையின்படிக் கூறினால் இரண்டாம் பாண்டியப் பேரரசுக்குரிய உண்மையான ஆயுட்காலம் (அது தொடங்கிய) கி.பி. 1190 முதல் கம்பனா திசை வெற்றி (திக் விஜயம்) முடிவடைந்த கி.பி. 1378 வரையுள்ள 188 ஆண்டுகள் எனச் சொல்லலாம். இதில்கூட ஒரு திருத்தம் உள்ளது. தொண்டை மண்டலத்துப் பல்லவ மன்னனை வென்றதால் சோழ அரசைச் சோழப் பேரரசு என அழைக்கிறோம். திருவாங்கூர் மன்னனை வென்று பேரரசுப் பாணியில் மதுரை அரசு கி.பி. 1070 அளவில் கப்பம் வாங்கியது (கல்வெட்டு ஆண்டறிக்கை - 1896). அப்படியானால் சோழ அரசைப் போலவே பாண்டிய அரசும் அதன் தொடக்கக் காலம் உட்பட்ட ஆயுளைக் கொண்டிருந்ததாகக் கணிக்கப்பெறும். 


இந்தச் சிந்தனையின்படிக் கணித்தால் கி.பி. 1090 முதல் 1378 வரையுள்ள 288 ஆண்டுகள் இந்தப் பாண்டியப் பேரரசுக்கு உரிமையாகும். சோழரைப் போலப் பாண்டியருக்கும் பேரரசு ஆக ஆவல் உண்டு. அந்தச் சோழர் தொண்டை மண்டலத்தை ஆக்கிரமித்தும், பாண்டிய நாட்டில் நேரடி ஆட்சியைத் கட்டினார்கள். இதன் விளைவாகக் கி.பி. 1216இல் பாண்டியர் சோழ நாட்டின் மேல் படையெடுத்துச் சென்று சோழரை வென்று சோழ நாட்டைத் தங்களுடைய மேலாண்மைக்கு உட்படுத்தினார்கள். 


பின்பு போசள-சோழர் கூட்டணியை உடைக்கவும் காகதியரின் செல்வாக்கு நெல்லூர்-காஞ்சிபுரம் விட்டு அகற்றவும் கி.பி. 1256 அளவில் திசை வெற்றி (திக் விஜயம்) என்ற பெரிய படைத்திட்டம் தயாராகியது. சடையவர்மன் சுந்தரபாண்டியன் தலைமையில் இப்பாண்டியர் இதைத் தயாரித்தனர். இதனை நடைமுறைப்படுத்திக் கொல்லம், மங்களூர், நெல்லூர், கொங்கு நாடு, இலங்கை ஆகியவை கொண்ட பெரியதொரு பேரரசை இப்பாண்டியர் உருவாக்கினர். ஆட்சிமுறை நிலைநாட்டப்பட்டது. 


மதுரையிலிருந்து சென்ற அரச கட்டளைகள் மேற் சொன்ன இடங்களில் பாண்டியப் பேரரசின் சட்டமாயிற்று. சுமார் 130 ஆண்டுகள் (1216 - 1343) விரிவான பேரரசு பாண்டியருக்கு வாய்த்திருந்தது.


ஆதார நூல்: பாண்டிய பெருவேந்தர் காலம்