பாண்டியர் போர் படைகள் பற்றி அறியாத தகவல்கள்..! (பகுதி1)

பாண்டியர் போர் படைகள் பற்றி அறியாத தகவல்கள்..! (பகுதி1) History of Pandiya kingdom army

பாண்டிய வேந்தர்கள் பிற வேந்தருடனும் குறுநில மன்னருடனும் நிகழ்த்திய போர்களை நோக்கின், தம் படை வலிமை, ஆதிக்கம், செல்வாக்கு முதலியவற்றை யாவரும் ஒப்புக் கொண்டு தம் ஆட்சிக்கு உட்பட்டிருக்க, தாம் மன்னர் மன்னனாகத் திகழ வேண்டும் என்ற உள்நோக்கமே அவற்றிற்கு முக்கியக் காரணமாக இருந்தது தெளிவு. ஏகாதிபத்ய நோக்கினை நிறை வேற்றுவதற்காக இம்மன்னர்கள், திக்விஜயம், அசுவமேதயாகம் போன்ற செயல்களில் நம்பிக்கை வைத்திருந்ததை அறியலாம். 


சங்க காலத்தில் நெடுஞ்செழியன் தலையாலங்கானத்துப் போரில், சேரர், சோழர், வேளிர் ஐவர் ஆகியோருடைய படைகளை முறியடித்துப் பெற்ற பெரும் வெற்றியானது மிகவும் முக்கியமானது. அந்த காலத்தில் பாண்டியரிடம் தேர்ப்படை இருந்தது குறிப்பிடப்பட்டுள்ளது. 


கடுங்கோன் வழிவந்த பாண்டியர் ஆட்சிபுரிந்த காலத்தில், சுமார் இருநூற்றைம்பது வருடகாலம், (சுமார் கி.பி.600 முதல் 850 வரை) வடக்கே பல்லவர்களுடன் அடிக்கடி போர்கள் நடந்தன. ஒன்பதாம் நூற்றாண்டில் பல்லவர் வீழ்ச்சிக்குப் பிறகு, சோழர்களுடன் தொடர்ந்து பாண்டியர்கள் அடிக்கடி போர் புரிய நேரிட்டது. சோழர் ஆதிக்கத்திலிருந்து பாண்டிய நாட்டை மீட்கவும், நிலையான ஆதிக்கத்தைப் பாண்டிய நாட்டில் ஏற்படுத்தவும் போரிட வேண்டியதாயிற்று. இவற்றைத் தவிரக் கங்கர், சேரர், ஈழத்தவர், மாரத்தர், பரதவர், ஆய்வேளிர் போன்றாரோடும் பாண்டியர் நடத்திய போர்களைப் பற்றியும் பல விவரங்களை ஏற்கெனவே நாம் கண்டோம். இவர்கள் ஈடுபட்ட பல்வேறு போர்களையும் அடைந்த பல வெற்றிகளையும் நோக்கும்போது அவர்கள் சிறந்த போர்ப் படையைப் பெற்றிருந்தனர் என்பது நன்கு விளங்கும். இப்படை சதுரங்கம் என்ற நான்கு அங்கங்களைக் கொண்டு விளங்கியதாகத் தெரிகிறது. 


'கருங்கடலுடுத்த பெருங்கண் ஞாலத்து நாற்பெரும் படையும் பாற்படப் பரப்பி ' என்று வேள்விக்குடிச் செப்பேடு குறிக்கின்றது. இந்நாற்பெரும் படையின் அங்கங்கள் தேர் படை, யானை படை, குதிரை படை, காலாட்படைகள் என்பவையே. 


சற்றுப் பிற்பட்ட காலத்திய சின்னமனூர்ச் (பெரிய) சாசனத்தில் இப்படை 'மூவகைப்படை' என்று அழைக்கப்பட்டுள்ளது. எனவே பிற்காலத்தில் 'முப்படை' முக்கியத்துவம் பெற்றிருந்தது எனலாம். 


தேர் படை


படைப்பிரிவில் தேர்ப்படை ஆரம்பத்தில் சிறப்பிடம் பெற்றதாகத் தெரிகிறது. தலையாலங்கானப் போரில் நெடுஞ்செழியன் தேர்ப்படையைச் செலுத்தினான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 'மாந்தேர் மாறன்' என்ற அடைமொழியில் பாண்டியர் குதிரை பூட்டிய தேர் ஓட்டுவதில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தனர் என்று விளங்கும். நெடுஞ்சடையப் பராந்தகன் அதியனைப் போரில் தோற்கடித்து அவனது தேர்களையும் குதிரைகளையும் கைப்பற்றினான். "தேர்மிகுமாக்கடற்றானைத் தென்னனவர் கோன் " என்று தளவாய்புரச் செப்பேடு பாண்டியனைப் புகழ்ந்துள்ளது. பிற்காலத்தில் தேர்ப்படையின் சிறப்பு மறைந்து குதிரைகள் இவ்விடத்தைப் பெற்றுக்கொண்டனபோலும். பிற்காலத்தில் அரபு நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட குதிரைகள் பாண்டிய நாட்டுக் குதிரைப் படையில் அணிவகுத்தன. 


13ஆம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டிற்கு வந்த மார்க்க போலோ அங்கு இறக்குமதி செய்யப்படும் குதிரைகள் சரியாக வளர்க்கப்படவில்லை என்பதை ஏளனமாகக் குறித்துள்ளார். ஆதலால், ஆண்டுதோறும் சுமார் 2000 குதிரைகளைப் பாண்டியர் இறக்குமதி செய்கிறார்கள் என்றும் குறிப்பிடுகிறார். இக்கூற்றை வசாபும் மெய்ப்பித்துள்ளார். பாண்டியரது படையில் யானைப் படை முக்கிய அங்கமாகும். பாரதப் போரில் பஞ்சபாண்டவர்க்குத் துணை நின்று யானைப்படையைச் செலுத்தினர் என்று, அவர்களது செப்பேட்டில் பெருமையுடன் கூறிக்கொள்கிறார்கள் .


'கொல்யானை பலவோட்டி கூடா மன்னர் குழாந்தவிர்த்த' என்று பல்யாக முதுகுடுமி பெருவழுதி என்னும் பாண்டியன் புகழப்படுகிறான். பல போர்களில் பாண்டியர் கைப்பற்றிய யானைகளையும் குதிரைகளையும் பற்றிக் குறிப்புகள் காணப்படுகின்றன. முதலாம் இராசசிம்ம பாண்டியன் பல்லவர்களைக் குழம்பூர் என்னுமிடத்தில் தோற்கடித்து அவர்களது யானைகளையும் குதிரைகளையும் கைப்பற்றினான்.  'குன்றமன்ன கொலைக் களிறுங் கூந்தன் மாவும் குலதனமு நன்னாடு மவை கொண்டும்' என்பன போன்ற பல குறிப்புகளும் உள்ளன. 1310 -ல் மாலிக்காபூர் பாண்டிய நாட்டைத் தாக்கித் திரும்பும்போது பல யானைகளைக் கைப்பற்றிச் சென்றான். யானைப் படைக்குத் தலைமை வகித்தவன் 'கஜா தியாக்ஷன்' என்றும், 'ஆனை ஒழுக்கு' என்றும் அழைக்கப்பட்டான். 


பாண்டியர் கடற்படையே பற்றி பகுதி 2ல் காண்போம்.