பாண்டிய நாட்டில் சீனத் தூதர்கள்..! அறியாத வரலாறு

பாண்டிய நாட்டில் சீனத் தூதர்கள்..! அறியாத வரலாறு


கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டுக்குள் தென்ஆசிய நாடுகளில் கடல் வாணிகம் பெருகத் தொடங்கியது. இந்த வாணிபப் பெருக்கத்தினால் இந்தியா மட்டுமன்றி வேறு பல நாடுகளும் பெரும் பயனடைந்தன. அவற்றுள் சீனாவும் சைலேந்திர வம்சத்தினர் ஆட்சியில் இருந்த ஸ்ரீவிஜயமும், அபாசித் கலீபாக்களின் ஆட்சியிலிருந்த பாக்தாதும் முக்கியமானவை. சோழ நாட்டிலிருந்து பல வணிகர் குழுக்கள் சீனாவிற்குச் சென்றன. அவர்கள் எடுத்துச் சென்ற பொருள்களில் முத்து, பருத்தி ஆடைகள், யானைத்தந்தம் போன்றவையும் இருந்தன. சோழ மண்டலக் கரைக்கும் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் சீரான வாணிகத் தொடர்பு நிலவியிருந்தது. பதின்மூன்றாம் நூற்றாண்டு இறுதியில், குப்ளாய்கான் சீனப் பேரரசனாய் இருந்தபோது தன்னுடைய அதிகாரத்தைப் பெருக்க எண்ணினான். அந்த நேரத்தில் பாண்டிய நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பமும் சீனாவுக்கும் தென் இந்திய ராஜ்யங்களுக்கும் இடையில் அடிக்கடி தூதர் பரிமாற்றம் நிகழ்வதற்குக் காரணமாய் இருந்தது. 


இந்தச் சுறுசுறுப்பான தொடர்புகள் கி.பி.1279 -க்கும் 1292 -ஆம் ஆண்டுகளுக்கிடையிலும் நடைபெற்றன. சீனர்கள் இலங்கையுடனும் மேற்குக்கடற்கரைத் துறைமுகங்களோடும் தான் நெருங்கிய வாணிகத் தொடர்பு வைத்திருந்தனர். இலங்கை யிலிருந்து புத்தருடைய புனிதச் சின்னங்களைக் காண வேண்டும் என்ற விருப்பமும் தூதுக்குழுவினரிடையே இருந்திருக்கும். அவ்வாறு வந்த தூதுக்குழுவைச் சேர்ந்த ஒருவன் மூலமாக கி.பி.1281 ஆம் ஆண்டில் குப்ளாய்கானுக்கு பாண்டிய மன்னன் (குலசேகரன்) இரகசியச் செய்தி அனுப்பினான். மாபார் நாட்டை (பாண்டிய நாட்டை) ஆள்வதற்கு அவனே சட்டப்படி உரிமை பெற்ற அரசன் என்றும் அவனுடைய சகோதரர்கள் ஐவர் ஒன்று சேர்ந்து அவனைக் கொல்ல முயல்கின்றனர் என்றும் சொல்லி அனுப்பினான். 


மேலும், அவன் சீனப் பேரரசருடைய மேலாண்மையை ஏற்றுக்கொள்வதற்கு விரும்புவதாகவும் சொல்லி அனுப்பினான். தனது நாட்டுச் செல்வத்தைப் பற்றிய உண்மைகளைத் தூதுவுன் மூலம் பின்வருமாறு சொல்லி அனுப்பினன். 'சீனப் பேரரசரின் தூதர்கள் இங்கு வந்திருப்பதையும் நான் (உங்கள்) பேரரசரின் மேலாண்மையை ஏற்றுக்கொள்வதற்கு அவர்கள் துணைபுரிவதையும் கேள்விப்பட்டு இந்த நாடு வலிமையற்ற நாடு என்று அவர்கள் (குலசேகரனின் சகோதரர்கள்) கூறிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் பொய் சொல்கிறார்கள். முஸ்லிம் நாடுகளிலுள்ள பொன், முத்து முதலிய மதிப்பு மிக்க பொருள்கள் எல்லாமே இந்த நாட்டிலிருந்து சென்றவை. இந்த நாட்டிற்குத்தான் முஸ்லிம் வணிகர் அனைவரும் வருகின்றனர். மாபார், பேரரசருடைய மேலாண்மையை ஏற்றுக்கொண்டது என்ற செய்தி தெரிந்தால் (தென்னிந்தி யாவிலுள்ள) இராஜ்யங்கள் எல்லாமே பேரரசருக்குப் பணிந்து விடும். இந்தச் செய்திகள் அனைத்தையும் மிகவும் பணிவாய் எடுத்துரைக்கின்ற ஒரு கடிதத்தை என்னுடைய தூதன் (ஜமாலு தீன்) முன்னரே தங்களிடம் தந்திருக்கிறான்'. 


பாண்டிய நாட்டிலுள்ள அரசியல் பூசல்கள் எவ்வளவு தூரம் பாண்டிய அரசனைச் சீன அரசனின் துணையை நாடிச் செல்லத் தூண்டின என்பது இதன் மூலம் விளங்குகிறது. அதே சமயத்தில், பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரி குறிப்பிட்டுள்ளபடி, பிற நாடுகள் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் அவற்றைப் பற்றிய செய்திகளை அறிந்துகொள்ள வேண்டும் என்ற துடிப்பும் ஆர்வமும் சீனப் பேரரசன் குப்லாய்கானுக்கு இருந்ததும் தெரிகின்றது. இவ்வாறு நிலவிய கடல் தொடர்புகளைப் பயன்படுத்தித்தான் மார்க்கபோலோ சீனா சென்று மீண்டும் பாரசீகம் வழியாகத் தமது நாடான வெனிஸ் நாட்டிற்கு திரும்பினார். 


குப்ளாய்கான் ஆட்சியின்போது தான் அவர் சீனா சென்றார். அங்கே பதினேழு ஆண்டுகள் தங்கியிருந்தார். அவ்வரசன் அவர் மீது பெருமதிப்பு வைத்திருந்தான். குப்ளாய்கானுடைய பரந்த பேரரசின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பார்த்தார். கி.பி.1292 ஆம் ஆண்டில் சீனாவிலிருந்து கிளம்பி 1296 ஆம் ஆண்டில் வெனிஸ் நகரை அடைந்தார். போகும் வழியில் தென்னிந்தியா விற்கு வந்து தங்கினார். பாண்டிய நாட்டைப் பற்றிப் பல அரிய செய்திகளை விட்டுச் சென்றுள்ளார். சீன அரசனின் தொடர்பு இருந்ததாலேயே இங்குள்ள அரசியல் விவகாரங்கள் அவர் நன்கு புரிந்து வைத்திருக்க அவருக்கு வாய்ப்பு இருந்தது என்று கருதலாம். அவரது பயணச் செய்திகள் சுவையாகவும் உண்மையாகவும் இருக்கின்றன.