தேவரடியார் குளம்

தேவரடியார் குளம்நம்ம குழு சனிக்கிழமையன்று தேடல் மேற்கொண்டபோது ஒரு குழு முன்னே சென்றது , வீராகவன் அய்யாவும் நானும் சற்று பின் தங்கினோம். தொலைவில் ஓர் கல்தொட்டி தெரிய அங்கு சென்று விசாரித்த போது..
    தோ...அங்க பாருங்க ஒரு தேவுடியா புள்ளையார் கோயில் இருக்கும் அதுக்கு பக்கத்தில் ஒரு தேவுடியா கொளம் இருக்கும் அங்க ஒரு பெரிய கல் தொட்டி இருக்குன்னு சொன்னாங்க..அருகே போய் பார்த்தோம்

ஒரு தேவரடியார் பிள்ளையார் கோயிலும் பாழடைந்த நிலையில் ஓர் குளமும் இருந்தது. இது வரலாற்றின் எச்சம். சோழர்கள் காலத்தில் இந்த தேவரடியார்கள் பெரும் மதிப்புடன் இருந்தனர். பல திருப்பணிகளும் குளங்களும் வெட்டிக்கொடுத்துள்ளனர். பிற்காலத்தில்தான் இவர்கள் நிலை தாழ்ந்தது.

சோழர் காலத்தில் ஆடலும் பாடலும் ஓங்கியிருந்தன.ஆடல் மகளிர் பிறரைக் கவரும் வகையில் திகழ்ந்தனர். பரதத்திலும் இசையிலும் நல்ல தேர்ச்சி பெற்று, திருக்கோயில்களில் தொண்டு புரிந்தாள். தான் விரும்பியவரை மணம் புரிந்து கொண்டாள். இவ்ர்களுக்குச் சமூகத்தில் மிகவும் மரியாதையும் சிறப்பும் வழங்கப்பட்டது. கோவில் நடனமாடும் கலை வளர்ச்சிக்குத் தங்கள் உயிர்களை அர்ப்பணித்த அக்காலத்திய தேவரடியார்கள், கிரேக்க நாட்டு ஆடற் பெண்டிர் போன்ற பண்புநலன் உள்ளவர்களாயும் கலையுணர்வு உடையவர்களாயும் திகழ்ந்தனர். கலை நுணுக்கங்களில் ஈடுபாடு உள்ளவர்களுக்குக் கண்ணுக்கும் செவிக்கும் நல் விருந்தளித்தனர். திருக்கோயில்களில் இறைத் தொண்டிற்காகவே பலர், தங்கள் வாழ்நாளையெல்லாம் அர்ப்பணித்துக் கொண்டனர். அவர்களது வருவாயில் பெரும்பங்கு கோயில் வழிபாடு முதலிவற்றிற்காகவே செலவிடப்பட்டது என்று பின்னே வந்த முகமதிய எழுத்தாளர்கள் வியப்புடன் தெரிவிப்பதில் அறியலாம்.

சோழர் காலத்தில் தேவரடியார்கள் மதிப்பான இடம் பெற்றிருந்தனர் என்பது, சோழர் அவர்களுக்கு வழங்கியுள்ள ஏராளமான கொடைகளைப் பற்றிய கல்வெட்டுக்களைப் பார்த்தால் விளங்கும். இவர்கள் மணவாழ்க்கையிலும் ஈடுபட்டிருந்தனர். சதுரன் சதுரி என்னும் ஒரு தேவரடியாள் நாகன் பெருங்காடான் என்பவரின் மனைவி(அகமுடையாள்) என்று திருவொற்றியூர்க் கல்வெட்டு, கி.பி. 1049-ம் ஆண்டில் கூறுகிறது. அவ்வாறே தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு கோயிலில் பணிபுரிந்த தேவரடியாள் மணமானவள் என்பதை மூன்றாம் குலோத்துங்கன் கல்வெட்டு தெரிவிக்கிறது.

இந்த கல்தொட்டியில் உள்ள கல்வெட்டுகள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளன

ஆறகழூர் வெங்கடேசன் பொன்