வரலாற்றில் சூரியக்கிரகணம்!

வரலாற்றில் சூரியக்கிரகணம்

சூரிய கிரகணம் ..

ஒரு வானியல் நிகழ்வு.
பாம்பு சூரியனை விழுங்குவதாக ஒரு புராணம். உலக்கையை நிறுத்தி கிரகண காலத்தைக் கணிக்கும் கிராமத்து கணக்கீடு..

இவை எல்லாவற்றையும் தாண்டி,  கிரகணம் நடைபெறும் நாள் வரலாற்றில் மிக மிக முக்கியமான பங்கு வகிக்கிறது..

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த வரலாற்று நிகழ்வுகளின் காலத்தை கணிப்பதற்கு  சூரியகிரகணம் நடந்த நாள்தான்  அவசியமான
ஒன்றாகிறது.

பொதுவாக வரலாற்று காலத்தைக் கணிப்பதற்கு சகம், கலி, போன்ற ஆண்டுக்குறிப்புகள் அவசியம். ஆண்டுக்குறிப்புகள் இல்லாத கல்வெட்டுகளின் காலத்தைக் கணிப்பது மிகக் கடினம்.

அவ்வாறான சமயங்களில் கிரகணநாட்களை வைத்து  ஆண்டுகளை கணக்கீடு செய்யலாம்.

எந்தெந்த வருடம் சூரியகிரகணம் நடந்தது என்னும் குறிப்பைக் கொண்டு ஒரு அரசனின் ஆட்சியாண்டை முடிவு செய்யலாம்.

இதோ......
தற்போது நடைபெறும் 
ஆனி மாத சூர்யகிரகணம். 
இன்று அமாவாசை..   
இனிமேல் சந்திரன் வளரும் நாள்.. அதாவது வளர்பிறையின் முதல் நாள். இதை தலைப்பிறை எனலாம்..
ஆனி மாத தலைப்பிறையில் இன்றைய சூரிய கிரகணம் நடைபெறுகிறது. ( 21.06.2020) ..

இதேபோல் .. 1126 ஆண்டுகளுக்கு முன்பு ஆனிமாத தலைப்பிறையில் ஒரு சூர்யகிரகணம் நடைபெற்றது.. இந்நாள்.. வரலற்று நிகழ்வுகளில் மிக மிக முக்கியமான நாளாகும்.

இந்நாளைக் கொண்டுத்தான், பிற்கால சோழர்களின் காலம் தீர்மானிக்கப்பட்டது.

சோழத்தை நிலை நிறுத்திய முதலாம் ஆதித்தன், எந்த ஆண்டு பதவியேற்றார் எனும் காலத்தை, இந்த சூரியகிரகணத்தைக் கொண்டுதான் முடிவு செய்தார்கள்.

தக்கோலத்தில் உள்ள இராசகேசரி வர்மனின் 24 ஆம் ஆண்டு கல்வெட்டு..

" ஸ்வஸ்திஸ்ரீ கோவிராசகே
சரி பன்மற்க்கு யாண்டு
இருபத்து நாலாவது ஆ
னித்தலைப்பிறையால்
தீண்டின (ஸூர்யக்3ரஹணத்)
தி நான்று திருவூறல் மாதேவ
ர்க்கு மாரமரையர் மகனார்
பிரிதிபதியார் குடுத்த வெ
ள்ளிக்கெண்டி நிரை முன்நூ
ற்று ஒருபத்தேழு கழஞ்சு
இது பன்மாஹேச்வரர் ரக்‌ஷை "

இராசகேசரிவர்மனின் 24 ஆட்சியாண்டில்..

ஆனிப்பிறைத்தலை தீண்டின சூர்யக்கிரகணத்து -
ஆனி மாத வளர்பிறை முதல் நாளில் தீண்டின ( பாம்பு விழுங்குதல்) சூரியகிரகண நாளான்று..

கங்கமன்னன் பிரித்வீ திருவூறல் (தக்கோலம்)
மகாதேவருக்கு வெள்ளிக்கெண்டி ஒன்றைத் தானமாக வழங்குகிறார்..

இந்த ஆனி மாத சூரியகிரகணம் நடைபெற்ற நாள் எது..

பல்வேறு கணிப்புகளுக்குப்பிறகு இந்நாள் கி.பி.895 என்று முடிவு செய்யப்படுகிறது.

கி.பி. 895 என்பது இராசகேசரிவர்மனின் 24 ம் ஆட்சியாண்டு. அதாவது அவர் பதவியேற்ற முதல் வருடம் 895 - 24 = 871

அதாவது இராசகேசரி வர்மனான முதலாம் ஆதித்தன் பதவிக்கு வரும் வருடம் .. 
கி.பி.871.

894, ஆனி மாதத்திலும் சூரியகிரகணம் நடந்தது.

ஆகவே.

முதலாம் ஆதித்தன் ஆட்சிக்கு வந்தது.
கி.பி. 870 - 871.

இவ்வருடம் முதலே சோழர் வரலாற்றின் காலம் ஆரம்பம் ஆகிறது.

இன்று நடக்கும் ஆனிமாத சூரியகிரகணம்தான் ..
சோழ வரலாற்றில் மிக மிக முக்கியமான ஒரு ஆண்டுக் குறிப்பாகும்.. 

- Marirajan Rajan .