மோடி அமித் ஷா மீது திரிணாமுல் காங்கிரஸ் புகார்- தேர்தல் பரப்புரை செய்ய தடை விதிக்க வலியுறுத்தல்!

15 April 2021

மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மீதமுள்ள 4 கட்டங்களிலும் பரப்புரை செய்ய பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் தடை விதிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திடம் திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் டெரீக் ஓ பிரையன், குணால் கோஷ் உள்ளிட்டோர் டெல்லியில் தேர்தல் ஆணையத்திடம் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் நடுநிலையுடன் செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையம் இந்த தேர்தலில் ஒருதரப்பினருக்கு சாதகமாக செயல்படுகிறது என்றும் குறிப்பாக பாஜகவுக்கு ஆதரவாக அதன் கட்டளையின்படியே செயல்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் மோடி இருவரும் தேர்தல் நடத்தை விதிமுறைகளையும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தையும் மீறுகிறார்கள் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மதரீதியான, சமூக ரீதியில் பேசும் மோடி மற்றும் அமித்ஷாவுக்கு மேற்கு வங்கத்தில் அடுத்து நடக்க இருக்கும் 4 கட்டத் தேர்தலிலும் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.