ஜூன் 14 முதல் டாஸ்மாக் கடைக்கு அனுமதி? - ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு என தகவல்!

10 June 2021

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்தாலும், உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாகவும், கூடுதல் தளர்வுகள் வழங்கப்படுவது தொடர்பாகவும் தமிழக அரசின் முக்கிய அதிகாரிகளுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.


சென்னை தலைமை செயலகத்தில் நடைப்பெற்ற இந்த ஆலோசனையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், வருவாய் துறை செயலாளர் குமார் ஜெயந்த், டிஜிபி திரிபாதி, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.

தமிழகம் முழுவதும் அதிகரித்து வந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10 ஆம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் பலர் ஊரடங்கில் தேவையின்றி சுற்றியதால் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் மே 24ம் தேதி முதல் தளர்வுகளின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ஜூன் 7ம் தேதி வரை நடைமுறையில் இருந்தது.

பின்னர் பொதுமக்களின் நலன் கருதி ஜூன் 7ம் தேதிக்கு பின் பல்வேறு தளர்வுகள் தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.

தமிழ்நாட்டில் மேலும் ஒரு வாரம் (ஜூன் 21 வரை) ஊரடங்கை நீட்டிக்க உயர் அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர். தொற்று அதிகமுள்ள மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க வாய்ப்புள்ளதாக தகவல். மேலும் புதிய தளர்வுகள் குறித்து நாளை அறிவிப்பு வெளியாகும் என தகவல்.