வட ஈழ மறவர்மான்மியம்

வட ஈழ மறவர்மான்மியம்

ஈழமும் பாண்டியரும்


ஈழ நாட்டில் தமிழனின் குடியேற்றம் எப்போது ஏற்பட்டதென்பதைத் திட்டவட்டமாகக் கூற முடியாமலிருக்கிறது. எனினும் விஜயன் இலங்கைக்கு வருமுன் பன்னெடுங்காலமாகத் தமிழரே இத்தீவை ஆட்சி செய்தார்களென்று பழங்காலச் சரித்திரங்கள் கூறுகின்றன. சேர, சோழ, பாண்டிய நாட்டிலிருந்து தமிழ் மக்கள் குடியேறுமுன், நாகர் என்னும் சாதியார் இத்தீவை ஆண்டுள்ளார்கள். இவர்களின் குலப்பெயர்களை அடிப்படையாகக் கொண்டே நாகபட்டணம், நாகபுரம், நாககுன்று, நாகர்கோயில் முதலாம் இடப்பெயர்களும் வழங்கியுள்ளன. இலங்கையிலும் பண்டைக்காலந்தொட்டு வழங்கியுள்ள நாகவழிபாடும் அதன் ஆலயங்களுமிருப்பதை அறியலாம். நயினாதீவு, நாகபூஷணி அம்மன் ஆலயம் இதற்கோர் எடுத்துக் காட்டாகும்.


இவர்களுடன், இந்திய நாட்டிலிருந்து வந்த தமிழர்கள் போர்பொருதி இவர்களை வென்று ஈழநாட்டை அரசுசெய்தனர். இவர்கள் தங்கள் இராசதானியாக மாதோட்டத்தையும், திரிகோணமலையும் ஆக்கிக்கொண்டு மாதோட்டத்தில் திருக்கேதீச்சரத்தையும், திரிகோணமலையில் கோணேசர் ஆலயத்தையும் கட்டி எழுப்பினர்.

1848 – P. 73.

யாழ்ப்பாணச் சரித்திரம் பக். 3 (ஆ. முத்துத்தம்பி)


பண்டைக்காலத் தமிழர் காலத்தில் மாதோட்டம் மிகச் சிறந்த செல்வ நாடாய்த் திகழ்ந்தது. ரோமர், கிரேக்கர் முதலானோர் தம்மரக்கல்களோடு இங்கு வந்து, தந்தம் முத்து, தோகை, இலவங்கம், முதலாம் விலையுயர்ந்த திரவியங்கள் ஏற்றிச் சென்றிருக்கின்றனர். 


மாதோட்டத்தை ஆண்ட சிற்றரசர்களோடு பலமுறை சோழரும், பாண்டியரும் போர் பொருதியுள்ளனர். சிலகாலம் சோழரும் பாண்டியரும் இங்கு ஆணையுஞ் செலுத்தியுள்ளார் கள்.


"தென்னாடு முத்துடைத்து” என ஒளவையாரால் புகழ்ந்து பாடப் பெற்ற நாடே பாண்டி நாடாகும். பாண்டிய மன்னர்க்குரிய செல்வங்களுள் முத்தே பிரதானமானது. முத்தாரமார்பனாய் பாண்டிய மன்னன் விளங்கினானென்றும், பாண்டிமாதேவியின் சித்திரச் சிலம்பினுள்ளே முத்துக்களே பரலாய் விளங்கிய தென்றும் சிலப்பதிகாரம் கூறுகிறது. 


பாண்டி நாட்டிலுள்ள பிரசித்தம் வாய்ந்த துறைகளான குமரி, கொற்கை, பொருனை, பொதிகை முதலானவைகளிலே பெருந்தொகையான முத்துக்கள் அகப்படும். இதனைத் தென்பாண்டி நாட்டில் தோன்றிய பெரும் புலவரான குமரகுருபர அடிகள் ஒரு செய்யுளிலே வெகு அழகாகச் சொல்லியிருக்கின்றார். 


"கோடும் குவடும் பொருதரங்கக்

குமரித் துறையில் படுமுத்தும்

கொற்கைத் துறையில் துறைவாணர்

குளிக்கும் சலாபக் குவால் முத்தும்

ஆடும் பெருந்தண் துறைப் பொருனை

ஆற்றில் படுதெண் ணிலாமுத்தும்

அந்தண் பொதியத் தடஞ்சாரல்

அருவி சொரியும் குளிர் முத்தும்” 


மேலே சொல்லப்பட்ட செய்யுளால் பாண்டி நாட்டின் கடல்படுதிரவியமான முத்துச் சிறப்பு தெளிவாகிறது. 


ஆரியர் தென்னாட்டில் குடியேறுவதற்கு முன் சேர, சோழ, பாண்டிய இராச்சியங்கள் கி. மு. 1000 ஆண்டளவில் மிகவும் சிறப்புற்று விளங்கியது. பினிசியர் இவ்விராச்சியங் களோடு வாணிபஞ் செய்துள்ளார்கள். சலமோன் அரசனுக்குத் தென்னிந்தியாவினின்று மயில், குரங்கு, தந்தம், சந்தனக்கட்டை முதலாந் திரவியங்கள் கொண்டு செல்லப்பட்டன. முதலாம் நூற்றாண்டில் றோமாபுரியை ஆண்ட அகஸ்தஸ் என்ற மன்னனுக்கு பாண்டிய அரசன் தூது போக்கினனென்றும், அத்தூதுவனை யவன வேந்தன் வரவேற்று மிகவும் சங்கை செய்தானென்றும், பின் யவன மன்னனுக்கும், பாண்டிய அரசனுக்கும் நெருங்கிய உறவு ஏற்பட்டதென்றும் இந்திய சரித்திரங்கள் கூறுகின்றன. 


தமிழரின் பூர்வ சரித்திரமும் சமயமும் பக். 9 (வண. ளு. ஞானப்பிரகாசர்)

அலையும் கலையும் (டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை)


கி.மு ஆறாம் நூற்றாண்டில் சிங்கள மன்னனான விஜயன் பாண்டியன் புத்திரியை மனந்து இலங்கைக்கு வரும்போது, பாண்டி நாட்டிலிருந்து எழுநூறு மேன்குலச் சீடமாட்டிகளோடும், பதினெட்டுவரிசையான பரிவாரங்கனோடும், ஐந்து வரிசையான ஏவலர்களோடும் வந்துள்ளதாக மகாவம்சம் கூறுகிறது. 


மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்கள் நூற்றுப்பதினாறு பேர்களாவர். இந்நூற் றுப்பதினாறு மன்னர்களும் மொத்தம் 1740 ஆண்டுகள் ஆணை செலுத்தியுள்ளார்கள். ஈழ நாட்டுடனும் பாண்டிய மன்னர்கள் பலமுறை போர் பொருதி வெற்றிவாகை சூடினர். ஆனால் இவர்களின் ஆளுகை வெகு காலம் நீடிக்கவில்லை. எனினும் முதலாம் புவனேகபாகு என்னும் சிங்கள அரசன் காலத்தில் பாண்டி இராச்சியத்தை ஆண்ட ஐவர் சகோதரரும், பெரும் வலிமைபடைத்த தமது மந்திரியை ஒரு பெருஞ்சேனையுடன் இலங்கைக்கனுப்பி நாடுநகர்களையும், கோட்டை கொத்தளங்களையும் பாழாக்கிப் புத்தருடைய தந்ததாதுவையும் மற்றும் செல்வங்களையும் கொள்ளையடித்துப் பாண்டி நாட்டுக்கு மீண்டு குலசேகர மன்னனுக்கு தந்ததாதுவை அளித்தனா.; (மகாவம்சம்)


தமிழரின் பூர்வ சரித்திரமும் சமயமும் (வண. ளு. ஞானப்பிரகாசர்)

யாழ்ப்பாண வைபவவிமர்சனம் (வண. ளு. ஞானப்பிரகாசர்)


சடாவர்மன் முதலாம் சுந்தரபாண்டியன் (1251-1280) இலங்கை அரசனிடம் யானைத் திறை பெற்றுள்ளதாகவும் சிதம்பரக் கல்வெட்டு ஒன்று கூறுகிறது. அக்கல்வெட்டுவருமாறு.


கொங்க ருடல்கிழியக் குத்தியிரு கோட்டெடுத்து

வெங்க ணழலில் வெதுப்புமே – மங்கையர்கண்

சூழத்தா மம்புனையுஞ் சுந்தரத் தோள் மீனவனுக்

கீழத்தா னிட்ட இறை. 


இச் சுந்தர பாண்டியன் ஈழத்து வேந்தனொருவன் திறை கொடுக்காதொழிந்த காரணத்தால் காலில் சங்கிலிபூட்டி வருத்தியதாகவும், சடவர்மன் இரண்டாம் வீரபாண்டியனும் இவ்வண்ணமே இலங்கையரசர்களிலிருவருள் ஒருவனைக் கொண்று அவனுடைய சேனை இரதம், சிங்காசனம், முடி முதலான சகல பொக்கிஷங்களையும் கைப்பற்றி, கோணமலையிலும், திரிகூடகிரி மலையிலும் பாண்டிய துவசங்களை நாட்டி, மற்ற அரசனிடம் யானைத்திறை கொண்டதாகவும் சாசனங்கள் கூறுகின்றன. (1254-1257)

யாழ்ப்பாண வைபவவிமர்சனம் (வண. ளு. ஞானப்பிரகாசர்)


இவ்விதம் பலம் வாய்ந்த பாண்டிய இராச்சியம் பதினைந்தாம் நூற்றாண்டில் விஜய நகர் அதிர்பர்களால் போரில் தோற்கடிக்கப்பட்டது. இதனால் பாண்டியர்களால் சிலசில பகுதிகள் ஆளப்படலாயிற்று. கயத்தார் பாண்டிய மன்னனுக்குத் தூத்துக்குடி மாத்திரம் திறை செலுத்திக்கொண்டிருந்தது. வடக்கேயுள்ள சிறு சிறு நகரங்களுக்கு தும்பிச்சிநாயக்கர் அதிகாரியாயிருந்தார். கயத்தார் பாண்டியனும், தும்பிச்சி நாயக்கரும் விஜயசநகர் சக்கரவர்த்திக்கு திறை வெலுத்திச் சக்கரவர்த்திகளாயிருந்தனர். 


இவ்வண்ணம் பாண்டிய இராச்சியம், தலைசிறந்து விளங்கியதற்கும், பலபல போர்களிலே வெற்றி ஈட்டியமைக்கும், முத்துக்குளிப்புத்துறை சிறந்ததற்கும் மறவர்களின் போர்த்திறனே முக்கிய காரணம். மறவர்களே சகல பாண்டிய மன்னர்களுக்கும் நம்பிக்கையான படைவீரர்களுமாவர். 


சத்திய மறையின் ஆட்சி முத்துக்குளித்துறையின் மாட்சி. 

(ரெமிஜியஸ்பர்னாந்து டீ.யு.)


2

மறவரின் போர்த் திறன்


மறவர்கள் பாலைநிலத்தைச் சார்ந்தவர்கள். "மறம்” என்பது வீரம் என்னும் கருத்துடையது. ஆகவே மறவர்கள் வீரஞ்செறிந்த மக்கள். தமிழ்நாட்டுப் போர்வீரர்கள். 


மறக்குடி மகளிர்களும் வீரப் பெண்மணிகளாவர். பாண்டிநாட்டிலே போர்ப்பறை கேட்டால் ஆடவரிலும் பார்க்கப் பெண்மணிகளே மிகவும் ஆனந்தமடைவார்கள். தாய்நாட்டு க்காகப் போர்புரியத் தங்கள் குடும்பத்திற்கு வாய்ப்பேற்பட்டதென எண்ணித் துள்ளிக் குதிப்பர். 


மறக்குடித் தாய்மார்களே தம் புத்திரர்களை வீரச் செயல்களுக்கும் போர்ப் பயிற்சிக்கும் ஊக்குவித்துள்ளார்கள். அவர்கள் தம் தாய், தந்தை, அரசன், மகன் முதலானோருக்குள்ள கடமைகள் யாதென்பதைக் கூறும் கருத்தைப் பொன்முடியார் என்னும் பெண் புலவி கீழ் வரும் செய்யுளால் விளக்குகின்றார்.


ஈன்று புறந்தருதல் என்றலைக்கடனே

சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே

வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லர்க்குக்கடனே

நன்னடை நல்கல் வேந்தர்க்குக் கடனே

ஒளிறுவாளருஞ் சமமுடுக்கிக்

களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே (புற 312)


அதாவது, பிள்ளைகளைப் பெற்று நாட்டுக்குத் தருதல் எங்கள் கடமை. அவர்களைச் சான்றோனாக்குதல் தந்தையர் கடமை. வேல், வாள் முதலிய போர்கருவிகளைத் தாயாரித்துக் கொடுத்தல் கொல்லர் கடமை. அவர்களுக்கு நல்ல நடையைக் கற்ப்பித்து, நாட்டுக்குகந்த குடிமக்களாக்குதல் அரசர் கடமை. போரில் யானைகளைக் கொன்று முன்னேறிப் போரிடல் அப்பிள்ளைகள் கடமையாகும். இதுவே மறக்குல வீரத்தாய்மார்கள் அடிக்கடி தம் பிள்ளைகளுக்குக் கூறும் நல்லுபதேசமாகும். இன்னுமொரு வீரத்தாய் கூறுவதை பூங்காணூத்திரை என்னும் பெண்புலவி கீழ்வருஞ் செய்யுளால் கூறுகிறார். 


மீனுண் கொக்கின் றூவியயன்ன

வானரைக் கூந்தல் முதியோன் சிறுவன்

களிறெறிந்து பட்டன னென்று முவகை

யீன்ற ஞான்றினும் பெரிதே கண்ணீர் 

நோன்கழைதுயல் வரும் வெதிரத்து

வான்பெயர்த்தூங்கிய சிதரினும் பலவே (புற 277)


அதாவது கொக்கின் இறகுபோல நரைத்த கூந்தலுடைய முதியவள், தன் புதல்வன் போரிலே யானையை வீழ்த்திக் கொன்று, தானும் மடிந்தானெனுஞ் செய்தி கேட்டு, தான் அவனைப் பெற்றபோது அடைந்த மகிழ்ச்சியிலும் அதிகம் மகிழ்ச்சியடைந் தாளென்பதாகும். 


பாண்டியருக்கும், சோழருக்கும் போர் மூண்டபோது அப்போரில் ஒரு குடும்பத்திலேயே தந்தை, கணவன் இரு சகோதரர்கள் போர்முனை சென்று ஆவி துறந்தனர். அவ்வீட்டில் எஞ்சியுள்ளோர் ஒரேஒரு மகளிரும் அவள் பெற்றெடுத்த ஏக மைந்தனுமேயாம். இவ்வீரமகளிர் தந்தைக்கு கல் நாட்டி மலர் தூவி வழிபட்டாள். கணவனும் இரு சகோதரர்களும் போரில் வேல் பட்டு இறந்ததை நினைந்து அகமகிழ்ந்தாள். இன்னும் போர் முடியவில்லை. ஈற்றில் தன் ஏக மைந்தனையும் போருக்கு அனுப்பினாள். அப்போரில் புதல்வனும் முள்ளம் பன்றி போல் தேகமெங்கும் அம்புகள் தைத்து ஆவி துறந்தான். மைந்தன் இறந்த செய்தியை வீரத்தாய் கேட்டுப் போர்க்களஞ் சென்று தன் மைந்தனின் சடலத்தைப் பார்த்தாள். தன் ஏகமைந்தன், தேகமெங்கும் அம்புகள் தைத்து இறந்துகிடப்பதைக் கண்டாள். இதைக் கண்ணுற்றதும் அவள் வாயிலிருந்து வெளிவந்த கருத்தின் செய்யுள் இதுவேயாம்.


கன்னின்றா னெந்தை கணவன் களப்பட்டான்

முன்னின்று மொய்யவிந்தா ரென்னையர் - பின்னிக்று

கைபோய்க கணையுதைப்பக் காவலன் மேலோடி

எய்போற் கிடந்தானென் ஏறு (822)


இதுமட்டுமல்ல, வீரத்தாய்மார்கள் தன் மைந்தனைப் போர்முனைக் கனுப்பியபின், அப்போர்முனையில் வீரழிழந்து மனஞ் சோர்வடையக்கூடிய இழிசெயலைப் புரிந்ததாகக் கேள்விப்படின், அம்மைந்தனை மிகமிகக் கடிந்து பேசிச்சினப்பாள். ஒரு தாயானவள் தன் மகன் பகைக்களிற்றின் மேலே யெறிந்து கூரிய வேலைத்திரும்பிக் கையேந்திப் பெறக்கூடிய ஆற்றல் இல்லாமையால் அவ்வேலிழந்து வெறுங்கையனாய் புறங்கொடுத்தது கண்டு,


வாதுவல் வயிறே வாதுவல் வயிறே

சோகேன் அத்தை நின்னீன்றனனே

பொருந்தா மன்னர் அருஞ்சம முருக்கி

அக்களத் தொழிதல் செல்லாய் மிக்க

புகர்முகக் குஞ்சர மெறிந்த எஃகம்

அதன்முகத் தொழிய நீபோந்தனையே

அதனால் எம்மில் செய்யாப் பெரும்பழி செய்த

கல்லாக் காளையை ஈன்ற வயிறே


எனக் கூறி மிகவும் மனம் வருந்தி வெறுப்பாள். இவ்வாறே மறவர் குலத்து மகளிர்கள் வீரஞ்செறிந்த பெண்மணிகளாகத் திகழ்ந்துள்ளனர். 


இம்மறவர் குலத்தவர் உயர்குடி மக்கள். இவர்களைத் தமிழகம் மிகவும் கௌரவமாகமதித்தது. தமிழர்களின் வீரத்துக்கு வித்திட்டவர்கள் இக்குலத்தவர்களே யாவர். இவர்களை மாறன், சேர்ப்பன், தேவன், மறவன், அகம்படியார், கள்ளர் செயங்கொண்டார், தென்கொண்டார், தொண்டைமண்டலத்தார், படையாட்சியார், வண்டையார் முதலாம் சிறப்புப் பெயர் கொண்டழைப்பர். 


போர்க்களத்தில் முன் வைத்த காலை பின் வைக்காத குலத்தவர்கள். மாற்றானின் படைக்கலம் வரும்போது விழித்த கண் இமைத்தல் தங்குலத்திற்கு இழுக்கெனக் கூறுவர். 


"விழித்தகண் வேல்கொண்டு எறிய அழித்

திழைப்பின் ஒட்டன்றோ வன்கணவர்க்கு”

என்றார் திருவள்ளுவர்


வட்டுடை அணிந்து போருக்குச் செல்லும் போது, போர்க்களத்தில் வீரவெறியூட்டும் இசைக் கருவிகளான பறை, பம்பை, திட்டை, தடாலி, முழவு, முருடு, கரடிகை, திண்டி முதலானவைகள் ஒலிக்கும்போது இவ்வீரமறவர்களின் தலைகள் கறங்கி ஆடும். நரம்புகள் யாவும் முறுக்கேறி வீரம் பிறக்கும். இத்தகைய லெட்சணங்களைப் பெற்றவர்களே மறவராவர். 


3

நெடுந்தீவின் பழங்காலச் சிறப்பு


வீரஞ் செறிந்த மறக்குடி மக்கள் இலங்கையிலும் பூர்வகாலந் தொட்டு நிலத்தரசர்களாய், குடிபதிகளாய் வாழ்ந்துள்ளனர். இவர்கள் பாண்டிய மன்னர்களுக்குப் போர்ப்பணி புரிந்தவர்கள் மாத்திரமல்ல, இம்மன்னர்களின் முத்துக் குளிப்புத் துறைகளுக்கும் காவலாளிகளாகவும் கடமை செய்துள்ளார். பாண்டியர்களின் தொடர்பு விஜயன் காலத்திற்கு முன்பிருந்தே இலங்கைக்கேற்பட்டுள்ளதென முன் அத்தியாயத்தில் கூறியுள்ளோம். மாதோட்டத்தில் ஆணைசெலுத்திய தமிழ் சிற்றரசர்கள் பாண்டியருக்கும் சோழருக்கும் திறை செலுத்தியும் வந்துள்ளார்கள். சிலகாலம் சோழரும் பாண்டியரும் நேரடியாகவும் மாதோட்டத்தை ஆண்டுமுள்ளனர்.


விஜயன் இலங்கை அரசனான பிற்பாடும் பாண்டியரும் பலமுறை படையெடுத்து இலங்கையைக் கைப்பற்றினர். இவர்களின் படையெழுச்சிக் காலத்தில் மறவர்களே சேனா வீரர்களாகக் கடமையாற்றினர். போர் முடிந்த பிற்பாடு ஒரு சில போர்வீரர்கள் தம் தாயகந் திரும்பாமல் யாழ்ப்பாணத்திலே தங்குவதற்கு விருப்பங் கொண்டனர். வேறுசிலர் வெற்றியீட் டிய சந்தோஷத்திற்காக மன்னர்களிடம் சன்மானமாக நிலங்களைப் பெற்றுங் குடிபுகுந்தனர். இன்னும் சில மறவர்களை யாழ்ப்பாண மன்னர்கள் தமக்குச் சேவகம் புரிவதற்காக இந்தியாவிலிருந்து நேரடியாகத் தருவித்துமுள்ளனர். 


யாழ்ப்பாண குணவீரசிங்கையாரியச் சக்கரவர்த்தி மதுரையரசனுக்குப் படைத்துணை யனுப்பிய சந்தோஷத்திற்காகப் பெருந்தொகைத் திரவியமும் கன்னடர் சிலரையும், சிவிகையார் சிலரையும், வில்லியர் சிலரையும் வேடர் சிலரையும் இத்துடன் மறவர் சிலரையும் அனுப்பிவைத்தாகவும், மறவரை மறவழன்புலவிலிருத்தினரெனவும் யாழ்ப்பாணச் சரித்திரங் கூறுகிறது.


சங்கிலி அரசன் காலத்தில் இராமநாதபுரத்திலிருந்து வந்த மறவர்கள் ஆதியில் மறவன் புலத்தில் குடியேறி, பின்பு பன்றியந்தாழ்வில் போய் தங்கியிருந்ததாகவும் யாழ்ப்பாண வைபமாலை கூறுகிறது. 


இன்னும் "1048ம் ஆண்டு நல்லூரை ஆண்ட கூழங்கைச் சிங்கை ஆரியனுக்கு மறவர்களே படைவீரர்களாக இருந்தனர். இவர்களும் இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்டவர் களேயாவர் இவர்கள் மறவகுலச் சத்திரியராவர். போரில்லாக்காலங்களில் கமஞ்செய்வதே இவர்களின் பிரதான தொழில். இவர்களின் குலரப்பெயர்களை அடிப்படையாகக்கொண்டே மறவராட்சியென அழைக்கப்பட்டு, மராட்சியெனத்திரிந்து, பின் வடமராட்சி, தென்மராட்சியென வழங்கப்படுவதாயிற்று. இவர்கள் வழிபடும் தெய்வம் ஐயை அல்லது துர்க்கை. சண்டைக்குத் தலைமைபூண்ட இப்பெண்தெய்வத்தையே மறவர் மாத்திரமன்றி தமிழ் அரசர்களும் வணங்கி வந்தனர். இதன் காரணமாகவே நல்லூரரசன் வீரமாகாளியம்மை கோயிலைத் தன் இராசதானியில் கட்டுவித்து வணங்கி வந்தான். மறவர் குடியேறிய பாகங்களிலெல்லாம் துர்க்கை கோவில்கள் ஸ்தாபிதமாயின. பருத்தித் துறை சாமுண்டியம்மை, வல்வை முத்துமாரியம்மை, இடைக்காடு மாதகல், அராலி, நயினாதீவு, நெடுந்தீவு முதலிய இடங்களிலுள்ள அம்மன் கோயில்களெல்லாம் இந்நோக்கமாகவே உண்டாயின.”


மேலே கூறிய செய்தி 7-2-67ல் தினகரனில் வெளிவந்த கட்டுரைச் செய்தியாகும். இதனை இங்கு பிரசுரிக்கவேண்டிய பிரதான நோக்கம், கோயில்களைப் பற்றியல்ல மறவர் களின் குடியேற்றத்தைச் சுட்டிக்காட்டவேயாகும். 


இவ்வித ஏதுக்களைக்கொண்டு மறவர்கள் யாழ்ப்பாணத்தில் பலபாகங்களிலும் குடியேறியுள்ளது நிச்சயமென்பதை முடிவுகட்டலாம். இவர்கள் குடியேறிய ஒரு சிலஇடங்களில் தற்போது இக்குலத்தவர்கள் இல்லாவிடினும் இவர்களின் குலப்பெயர் களைக் கொண்ட கிரமங்களான மறவன்புலம், மறவன்காடு, மறவனோடை, மறவன்பிட்டி இன்றும் இருப்பதை நாம் அறியலாம். 


இவர்களின் குடியேற்றம் மாதோட்டத்திலுமுண்டு. மாதோட்டப் பகுதியில் மறவர்களின் நாமத்தோடு அநேகம் காணிகளும், கிராமங்களும் இருக்கின்றன. அடம்பனுக்கருகில் மறத்திகன்னாட்டி என்னும் ஓர் கிராமம் இருப்பதையும், அங்கு ஏராள மான மறவர்கள் இன்றும் நிலத்தரசர்களாயிருந்து வருவது இதற்கோர் எடுத்துக்காட்டாகும். பூநகரியிலும் இக்குலத்தவர்கள் சீவிக்கின்றார்கள். 


மறவர்கள் உயர்வான சத்திரியகுலத்தவர்களான படியால் மேன் குடிமக்கள் எவ்வித அச்ச ஆசவமின்றி சம்பந்தம் செய்ததினால் காலகதியில் இவர்களின் குலம் கருகிப் போயிருக்கலாமெனவும் யூகிக்க இடமுண்டு. 


மாதோட்டத்திலும், யாழ்ப்பாணப் பகுதியிலும் மறவர்களின் நாமங்களைக் கொண்ட காணிகள், தோட்டங்கள், வயல்கள் விளங்குமாப்போன்று நெடுந்தீவு, புங்குடுதீவு, அனலைதீவு, நயினாதீவு, லைடன்தீவு முதலாந் தீவுகளிலும் பலபல இடங்கள் செறிந்து விளங்குவதினால் இங்கும் இவர்களின் குடியேற்றம் இருந்திருப்பது உண்மையேயாகும். அதிலும் விசேஷமாக நெடுந்தீவில் இவர்கள் நிச்சயம் குடிபுகுந்திருப்பதற்குப் பலபல காரணங்களுமுண்டு. 


நெடுந்தீவு இந்தியாவுக்கு வெகு சமீபமாயிருப்பதாலும், அதிலும் பாண்டி நாட்டின் கிராமங்களான, இராமநாதபுரம், திருநெல்வேலி, தஞ்சாவூர், கோடிக்கரை, தனுஷ்கோடி, அக்காமடம், தங்கச்சிமடம், வல்லை முதலான கிராமங்கள் இருபது மைல் தூர வித்தியாசத்திலே அமைந்துள்ளதாலும், வல்வை ஓர் பிரசித்தம் வாய்ந்த கடற்றுறையாக விளங்கியதினாலும், வல்லையிலும் மேற்கூறிய கிராமங்களிலும் பெருந்தொகையான மறவர்கள் வாழ்ந்தமையாலும், மறவர்கள் வெகு இலகுவாக நெடுந்தீவில் வந்து தங்குவதற்கும், குடிபதியாய் வாழ்வதற்கும், வாய்ப்பிருக்கிறது. 


அன்றியும் சிங்கள அரசன் காலத்திலும், யாழ்ப்பாணத் தமிழரசர் காலத்திலும், இத்தீவு சகல சீர்சிறப்புகளுடன் தலைநிமிர்ந்து விளங்கியதுமல்லாமல் ஆதியில் இலங்கைக்குப் படையெடுத்து வந்த பாண்டிய சோழ மன்னர்களுக்கும், பிறநாட்டு வணிகர்களுக்கும் தகுதிவாய்ந்த ஓர் கேந்திர ஸ்தானமாகவும் அமைந்துள்ளது. மார்த்தாண்ட சிங்கை ஆரியன் தனது முத்துக்குளிப்புத் துறைகளையெல்லாம் காவல்காக்க நெடுந்தீவிலே ஒரு கப்பல் படையை வைத்துள்ளதாகவும் சரித்திரங் கூறுகிறது. (யா. ச. ஆ. மு.)


கண்ணகியின் காற்சிலம்பு செய்ய இரத்தினம் கொண்டுவருவதற்காகக் கரிகால் சோழன் அனுமதியோடு வந்த மீகாமனின் கப்பல் படையோடு, வெடியரசனுக்குச் சார்பாக திருவடி நிலையில் காவல்செய்த வீரசாராயணனும், கீரிமலையிலிருந்த ஏலேலங்குருவனும், ஒரு பெருங் கடற்போர் நடத்திய துறையும் நெடுந்தீவென்பதையும் சரித்திரம் சொல்லாம லில்லை. 


குணவீரசிங்கை ஆரியன் காலத்தில் இராமேஸ்வரக் கற்பக்கிரகத்தைக் கட்டுவதற்கு திரிகோணமலையிலிருந்து கொண்டவரப்பட்ட கற்களும் நெடுந்தீவு மார்க்கமாகவே கொண்டு செல்லப்பட்டது. 


யாழ்ப்பாணச் சரித்திரம் (ஆ. மு. பி)


யாழ்ப்பாணத்தரசனான சங்கிலி மன்னன் போர்த்துக்கேய தளபதி மாநாட்டின் அல்போன்சா சூசாவோடு 5000 பர்தா நாணயமும், இரு கொம்பன் யானைகளும் வருடக் கப்பமாகத் தருவதாகவும், முன் திறையாக இருவருடக் கப்பத்தையும் ஒருங்கே செலுத்தி சமாதான உடன்படிக்கை செய்துகொண்டதும் நெடுந்தீவிலேயாம்.


இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மணிபல்லவம், நாவலந்தீவு முதலாம் பெயர்கள் நெடுந்திவையே குறிப்பதாக அறிஞர்கள் கருதுகிறார்கள். பால்தீவு, தயித்தீவு, அபிஷேகத்தீவு எனவும் நெடுந்தீவு அழைக்கப்பட்டதாம். 


சிங்களமக்கள் வடபகுதிகளில் பரவியிருந்த காலத்தில் நெடுந்தீவிலிருந்து அநேக மருந்து மூலிகைகளைப் பெற்றுள்ளார்கள். இதனால் அவர்கள் இத்தீவை "அவசத லோகய’ வென அமைத்தனர். வைத்தியத் தொழிலில் பெரும் புகழ் வாய்ந்து "வைத்திய ராஜசிங்கன்” என்னும் பட்டஞ் சூட்டப் பெற்ற யாழ்ப்பாண அரசனான செகராசசேகரன் நெடுந்தீவை "மருத்துமா மலைவனம்” எனப் பெயர் கொண்டழைத்துள்ளான். (யாழ்ப்பாண வைபவமாலை) 


"நெடுந்தீவு” என்னும் தலையங்கத்துடனும் "ஈழத்தின் காவல்தளம்” என்னும் உபதலையங்கத்துடனும் தினகரன் வாரமஞ்சரியில் திரு. எஸ். கே. பரமேஸ்வரன் பி. ஏ (ஆனர்ஸ்) அவர்களால் எழுதப்பெற்று 1969ம் ஆண்டு வைகாசி மாசம் 23ந் திகதி கட்டுரையில் நெடுந்தீவின் பண்டைக்காலச் சிறப்பு தெளிவான ஆராய்வுத் திறனோடு எழுதப்பட்டிருக்கிறபடியால் அதன் ஒரு பகுதியை அப்படியே கீழே குறிப்பிடுவது மிகவும் பொருத்தமானதாகும். 


"வரலாற்றுக் காலத்தில் நெடுந்தீவு பெரும் புகழ்பெற்றதும், மதிப்பு வாய்ந்ததுமான ஒரு தீவாக இருந்திருக்கின்றது. காரணம் இந்தியாவிலிருந்து யாழ்பாணத்தை நோக்கி வரும் படையெடுப்பை முக்கிய முதல்வாயிலாகவுள்ள நெடுந்தீவிலிருந்து கண்காணிக்க முடிந்தது. அக்காலத்தில் படையெடுப்பு அயல்நாடான பாரதத்திலிருந்தே அடிக்கடி ஏற்ப்பட்டது. எனவே நெடுந்தீவு சிங்களமன்னர் காலத்திலுஞ் சரி, யாழ்ப்பாண மன்னர் காலத்திருஞ் சரி இலங்கை இராச்சியங்களுக்கு ஒரு காவற்றளமாகவும், சிறந்த போர்முகமாகவும் அமைந்திருந்தது. இதனால் முதன் முதல் போர்வீரரே இங்கு சென்று குடியிருக்கவேண்டும். பாடிவீடு அமைத்து வாழ்ந்த போர்வீரர் காலப்போக்கில் தம் குடும்ப வாழ்க்கைக்கேற்ப நாட்டை வளமாக்கி வாழ்ந்து வரலானார்கள்.” 


மேலே சுட்டிக்காட்டிய ஒரு சில சரித்திரக்குறிப்புக்களும், கட்டுரைகளும் நெடுந்தீவில் மறவர்கள் வாழ்ந்தனர் என்ற உண்மையையும் இந்தீவின் பண்டைக்காலப் பெருமையையும் தெளிவாக்கிறது. 


4

குடியேற்றம்


தமிழ் நாட்டிலே தொழிலின் காரணமாகவே சாதிப்பிரிவுகளேற்பட்டதென்பது சகலரும் ஒரே வாய்ப்பட ஒப்புக்கொள்ளப்பட்டதொன்றாகும். பலபல தொழில்களைப் புரியும் சகல சாதியரும் நாட்டுக்குத் தேவைப்பட்டபடியால் எல்லாக் குலத்தவர்களும் ஈழநாட்டில் குடியேற்றப்பட்டனர். இன்னும் இராசபவனிக்கும், அரசாங்க சேவைக்கும் தேவைப்பட்ட சிவிகை காவுவோர், கோல் கொண்டொழுகுவோர், முரசடிப்போர், பறைசாற்றுவோர் முதலா னோர்களும் யாழ்ப்பாணத்திற்கு வரவழைக்கப்பட்டனர். 


இவர்களைப் போலவே அரசனையும் நாட்டையுங், காப்பதற்கும், பயமின்றி வாழ்வதற்கும், பகைவரை அழித்தொழிப்பதற்கும் தம் சொந்தக் குலத் தொழிலாய்க் கொண்ட மறவர்களையும் தம் நாற்படைகளிலும் பணிபுரிவதற்கும் வரவழைத்து அமர்த்திக் கொண்டனர். 


குடியேற்றப்பட்ட சாதியார்கள் அனைவரும் வேளாண் முதலிமார்களின் துணைகொண்டே, தருவிக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால் மறவர்கள் படைவீரர்களா கவும் மன்னர்களின் மெய்க்காப்பாளர்களாகவும் இலங்கைக்கு வந்தார்களேயொழிய ஏனைய சாதியர்களைப் போல் வேளாண் பிரபுக்களால் குடியேற்றப்பட்டார்களென நம்ப இடமில்லை. 


குடியேற்றப்பட்ட சாதியருள் ஒருசல சாதிமக்களுக்கு அரசாங்கம் சில பல ஒழுக்கங்களை வகுத்து, அதனைக் கட்டாயச் சட்டமுமாக்கி அதன் பயனாய் நாட்டுக்கு வருமானத்தையும் ஊழியத்தையும் தேடிக்கொண்டது. உதாரணமாக வேளாளர், செட்டிகள் முதலாம் சாதியருள் தாம் தாம் ஒழுதுண்டு வாழ்பவரைத் தவிர உழவர், பள்ளர் முதலாம் பண்ணையாட்களைக் கொண்டு கமஞ்செய்து உண்பவரெல்லாம் தமக்கு வேலைசெய்யும் அத்தனை வேலையாட்களையும் கொண்டு வருஷமொருமுறை பதினைந்து நாட்களுக்கு இராச ஊழியஞ்செய்ய அனுப்புதல் வேண்டும். விளைவில் ஆறிலொரு பங்கும் கொடுக்க வேண்டும். சிவியார் எனப்பட்டோர் அரசாங்க சிவிகையாட்களாகவும், சிவிகை முன் செல்லும் கூறியராகவும், அரன்மனை வாயிலாளராகவும், ஒவ்வொரு குழுவினராக மாதந் தோறும் முறைப்படி இராசசேவை செய்யவேண்டும். இத்தொண்டிற்காக அரசாங்கத்தால் நிலங்கள் அவர்களுக்கு உபகரிக்கப்பட்டன. ஆண்டிகளானோர் விடியற்காலம் ஐந்து மணிக்கு எழுந்து ஊர்கள் தோறும், கிராமங்கள் தோறும் சென்று சங்குகள் ஊதி மக்களைத் துயிலெழுப்ப வேண்டும். கோயில்களிலும் அரண்மனைகளிலும் செய்யும் சேவைகளை ஒழித்த மற்றக்காலங்களில் ஊர்தோறும் சென்று யாசகம் பண்ணுவதோடு மாரியம்மன் கோயில், பிடாரி கோயில்களுக்குப் பூசகராயும் வலைஞர் முதலிய சாதியாருக்கு குருக்கள் மாராகவும் பணியாற்றவேண்டும். முக்கியர், கரையார், பரவர், திமிலர் முதலானவர்களில் அரசாங்க கடற் சேவையிலிருப்பவரைத் தவிர, மற்றவர்கள் முத்துக்குளிப்புக் காலத்தில் வருடத்தில் பதினைந்து நாளைக்கு அரசாங்க கடமையாற்றக் கடமைப்பட்டவராவர். இவர்களுக்கு மீன் வரியில்லை. வலையர் அரசன் வேட்டைக்குச் செல்லும் போது உடன் செல்லவேண்டும். கடைஞர் சுண்ணம் நீற்றுக் கொடுத்தல் வேண்டும். கம்மாளர், கொல்லர், தச்சர் முதலான விஸ்வகர்ம குலத்தவர்கள் கிராம மக்களுக்கு தேவைப்பட்ட கலப்பை, கொழு, அரிவாள் முதலியவைகள் கூலியின்றிச் செய்து கொடுத்தும், வருடத்தில் எட்டு நாளைக்கு இராசகாரியமுஞ் செய்தல் வேண்டும். இவர்களுக்குக் கிராமங்கள் தோறும் வரியின்றி நிலங்கள் வழங்கப்பட்டன. ஈழத்திரும்பென நெடுங்காலம் பெயர்படைத்த இரும்பு யாழ்ப்பாணத்தில் செய்யப்பட்ட இரும்பேயாம். கன்னார், தட்டார், கற்சிற்பியர் இராச அரண்மனையிலும் கோயிலிலும் வருடத்தி;ல் பதினைந்து நாள் வேலைசெய்யுங் கடமைப்பட்டவராவர். மேலே கூறப்பட்ட சாதியரைப் போலவே மறவரும் பதினாறு முதல் இருபத்துநான்கு வயது வரையும் போர்ப்பயிற்சி கற்றுப் பின்பு கிராமக் காவலராகி அரவரால் தத்தமக்கு விடப்பட்ட நிலத்தில் பயிர்செய்து வாழ்ந்து படைத்தொழிலுக்கு வேண்டிய காலத்தில் தொண்டாற்றவும் கடமைப்பட்ட வராயினர். 


இவ்விதிகளுக்கமையவே பண்டைக் காலத்தில் சகலசாதியரும் வருடத்தில் சில நாட்களுக்கு இராசபணிகள் செய்து வந்தனர். இவ்வழக்கம் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் காலம் வரைக்கும் நீடித்திருந்து பின்பு 1810ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. 

(யாழ்ப்பாணச் சரித்திரம் ஆ. மு. பி.)


கைலாயமாலைப் பாடலிலும் யாழ்ப்பாண வைபவமாலையிலும் கூறப்பட்ட தனிநாயகமுதலியும் அவன் பரிவாரங்களும் நெடுந்தீவில் குடியேறுவதற்கு முன்னும், முஸ்லிம்கள் சங்கு குளிப்பதற்கு இங்கு வந்து தங்குவதற்கு முன்னும், படைவீரர்களே ஆதியில் நெடுந்தீவில் குடியேறினர் என்பதில் யாதொரு சந்தேகமுமில்லை. இவர்கள் தமிழ் நாடான பாண்டி நாட்டிலிருந்தே வந்தவர்களாவர். பாண்டிநாட்டில் போர்வீரர்கள் யாவரும் மறவர் குலத்தார் என்பது சங்க இலக்கியங்களாலும் மற்றும் இந்தியநாட்டுச் சரித்திரங்களாலும் சந்தேகமறத்தெளிந்த உண்மையாகும். இவ்வுண்மையின் படியும், முன் அத்தியாயங்களில் கூறிய சரித்திர ஆதாரங்களின் படியும் நெடுந்தீவின் பூர்வ குடிகள் மறவரே மறவரென்பது யாவரும் ஒப்புக்கொள்ளக்கூடிய தொன்றாகும். நெடுந்தீவில் இவர்கள் குடியேறிய காலத்தில் தாம் இந்தியாவில் வசித்த கிராமத்தின் பெயரான வல்லையை இங்குஞ் சூட்டியுள்ளார்கள். தற்போது வல்லையெனப்பட்ட பெயரால் வெல்லையாக மாறப்பட்டு வந்துள்ளது. யுத்தத்தில் பணிபுரியாத மறவர்கள் வெல்லையில் குடியேறியிருக்கலாம். போர்வீரர்கள் மாத்திரம் துறைமுகத்துக் கருகாமையில் பாடி அமைத்து வாழ்ந்து பின்பு குடும்பமாய் வாழ்வதற்கும் இவ்விடத்தையே வளமாக்கிக் கொண்டிருக்கலாம். காலகதியில் தமிழ் மன்னர்களின் செல்வாக்கும், யுத்தங்களும் குறைந்து குறைந்து போக, யுத்தத் தொழிலையே நம்பியிருந்த மறவர்கள் தம் சீவனத்திற்காக வௌ;வேறு தொழில்களைப் புரியவுந் தலைப்பட்டனர். வெல்லையில் குடியிருந்தோரும் மெல்ல மெல்லத் துறைமுகத்தை நாடிவரலாயினர். துறைமுகத்தில் போர் வீரராகக் கடமையாற்றியோரும், வெல்லையிலிருந்து மெல்ல மெல்ல வந்தோருமான இக்குலத்தவர்கள் தம் தாயகமான இந்தியாவை நாடாமல், நெடுந்தீவு நடுக்குறிஞ்சியையே தம் சொந்த நடாக்கிக் கொண்டு வாழலானார்கள். இவர்களின் குலப்பெயர்களைக் கொண்ட மறவன்புலம் என்னும் ஒரு பரந்த வெளியும், மறவனோடையும் நெடுந்தீவிலிருப்பது கண்கூடு. 


 - தொடரும்!