பாஜ.வில் இணைந்த பத்தே நாட்களில், இணை அமைச்சர் அந்தஸ்திலான பதவி

22 October 2020

முத்தலாக் புகழ் ஷயரா பானு பாஜ.வில் இணைந்த பத்தே நாட்களில், இணை அமைச்சர் அந்தஸ்திலான பதவி வழங்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களின் தனி சட்டமான முத்தலாக் வழக்கத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முதன் முறையாக வழக்கு தொடுத்ததால் புகழ் பெற்றவர் உத்தரகாண்டை சேர்ந்த ஷயரா பானு. 

இவர் மாநில பாஜ தலைவர் பன்சிதார் பகத் முன்னிலையில் கடந்த 12ம் தேதி பாஜ.வில் இணைந்தார். அவர் பாஜ.வில் சேர்ந்து 10 நாட்களாகும் நிலையில், நேற்று அவருக்கு இணை அமைச்சர் அந்தஸ்திலான பதவி அளிக்கப்பட்டது.

இது குறித்து முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்தின் ஊடக ஒருங்கிணைப்பாளர் தர்ஷன் சிங் ராவத் கூறுகையில், ஷயரா பானுவுக்கு மாநில பெண்கள் ஆணையத்தின் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இது இணை அமைச்சர் பதவிக்கு இணையான பொறுப்பாகும். 

மேலும், ஜோதி ஷா, புஷ்பா பஸ்வான் ஆகியோரும் மாநில பெண்கள் ஆணையத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், பெண்கள் ஆணையத்தில் நீண்ட காலமாக காலியாக இருந்த 3 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இது முதல்வர் அவர்களுக்கு அளித்த நவராத்திரி பண்டிகை பரிசாகும்,'' என்று கூறினார்.