விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டத்தை திரும்பப் பெறுக - எஸ்டிபிஐ கட்சி பேரணி

26 January 2021

விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டத்தை திரும்பப் பெறுக - எஸ்டிபிஐ கட்சி பேரணி

இந்திய விவசாயிகளுக்கு விரோதமாக உள்ள மத்திய அரசின் வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி மதுரையில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக இன்று பேரணி நடைபெற்றது.

எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக நாடு முழுவதும் வேளாண்துறை சட்டங்களுக்கு எதிராக பேரணி நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக மதுரையில் இன்று முனிச்சாலையிலிருந்து தெப்பக்குளம் வரை டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் பேரணி நடைபெற்றது.

அக்கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் முஜிபுர் ரகுமான் கூறுகையில், தேசிய அளவில் விவசாயிகளுக்கு ஆதரவாக இந்த போராட்டத்தை எஸ்டிபிஐ கட்சி நடத்துகிறது. விவசாயிகள் நேரடியாக பயன்பெறும் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டுமே தவிர பெரு நிறுவனங்களுக்கு துணை போகக் கூடாது. ஆகையால் டெல்லியில் போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு வேளாண் திருத்தச் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம் என்றார்.

இந்த பேரணியில் ஆண்களும் பெண்களும் தேசியக் கொடியை ஏந்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.