கேள்விக்குறியில் லசட்சத்தீவு!

28 May 2021

லட்சத்தீவில் ஆளும் மத்திய அரசின் பிரதிநிதியான நிர்வாகி பிரஃபுல் கோடா படேலின் திட்டங்கள் மற்றும் யோசனைகள் உள்ளூர் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதால் அவர்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.


லட்சத்தீவின் நிர்வாகி பிரஃபுல் கோடா படேல், லட்சத்தீவு விலங்குகள் பராமரிப்பு ஒழுங்குமுறை விதியின்படி பசு, காளைகள், கன்றுகள் போன்றவற்றை கொல்வதற்கு தடை விதிக்கும் யோசனையை முன்மொழிந்துள்ளார்.

இது தவிர, லட்சத்தீவு மேம்பாட்டு ஆணைய ஒழுங்குமுறை விதியில் மாற்றம் செய்ய முன்மொழிந்துள்ள அவர், நில உரிமையாளர்கள் தொடர்பான விதியில் மாற்றம் செய்வதாக கூறியுள்ளார். அப்படி நடந்தால் அது லட்சத்தீவின் எந்த பகுதியிலும் கட்டுமானம், பொறியியல், சுரங்கம், கல் குவாரி போன்ற தொழில்களில் எவரும் ஈடுபடலாம்.

மேலும், விடுதிகள், தங்குமிடங்களில் மதுபானங்களை விற்கலாம். இந்த நடவடிக்கைகள் லட்சத்தீவின் சுற்றுலாவை மேம்படுத்தும் என்று அவர் கூறினார்.

ஏற்கெனவே லடச்ததீவு கடலோர ஒழுங்குமுறை மண்டலம் மற்றும் கடலோர காவல் படை சட்ட விதிகளை மீறியதாகக் கூறி கடலோர பகுதிகளில் மீனவர்கள் எழுப்பியிருந்த குடிசைகளை லட்சத்தீவு நிர்வாகம் அகற்றி விட்டது.

இவரது புதிய நிலச்சீர்திருத்த யோசனைப்படி, வீட்டு உரிமையாளர் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை உரிமத்தை புதிப்பிக்க வேண்டும். அப்படி செய்த் தவறினால், இரண்டு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதன் பிறகு ஒவ்வொரு நாளுக்கும் ரூபாய் பத்தாயிரம் அபராதம் வசூலிக்கப்படும்.

லட்சத்தீவில் 700 மீட்டர் தூரத்துக்கான மோதி தாமன் கலங்கரை விளக்கம் முதல் ஜாம்பூர் கடற்கரை வரையிலான பகுதி ஆதிவாசிகளுக்கானதாக பாரம்பரியாக அறியப்பட்டு வருகிறது. அங்கு பல தலைமுறைகளாக ஆதிவாசி மீனவ பழங்குடிகள் வாழ்ந்து வந்தனர். ஆனால், தீவின் நிர்வாகி உத்தரவின்பேரில் அவர்கள் வாழ்ந்த பகுதியில் இருந்து பலர் அகற்றப்பட்டுள்ளனர்.

மற்றொரு யோசனையாக சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை தடுத்து வைக்க குண்டர் சட்டம் கொண்டு வரப்படும் என்று பிரஃபுல் கோடா கூறியுள்ளார். ஆனால், இந்த நடவடிக்கை, எதிரணியினரை மிரட்டும் வகையில் பயன்படுத்தப்படும் என்று விமர்சனம் எழுந்துள்ளது.

மேலும் இதுநாள்வரை கேரளாவில் இருந்து லட்சத்தீவுக்கு சரக்கு போக்குவரத்து நடந்தது. இனி கேரளாவுக்கு பதிலாக மங்களூருக்கு சரக்குகள் போக்குவரத்து இருக்கும் என்று பிரஃபுல் கோடா படேல் கூறினார்.

பிரஃபுல் கோடா படேலின் இந்த நடவடிக்கையால் உள்ளூர் மக்கள் பாதிக்கப்படுவது அதிகரித்து வருவதால் இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோதி உடனடியாக தலையிட வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோரும் லடசத்தீவில் நிர்வாகியின் செயல்பாடுகள் மகிழ்ச்சியளிக்கவில்லை என்று தங்களின் அதிருப்தியை பதிவு செய்தனர்.

இதேவேளை, லட்சத்தீவு ஆட்சியர் அஸ்கர் அலி வெள்ளிக்கிழமை மாலையில் செய்தியாளர்களிடம் போது, உள்ளூரில் நடக்கும் நிகழ்வுகளை வெளியே இருப்பவர்கள் தவறான தகவல்களால் வழிநடத்தப்பட்டு கருத்துகளை வெளியிடுவதாக தெரிவித்தார்.

தீவின் எதிர்காலத்தை மனதில் கொண்டே சீர்திருத்த நடவடிக்கைகளை நிர்வாகி செய்வதாகவும் அது செயல்வடிவம் பெறும்போது மாலத்தீவுக்கு இணையாக லட்சத்தீவு திகழும் என்று அவர் தெரிவித்தார்.

தென் மாநிலமான கேரளாவில் இருந்து லட்சத்தீவு 524 கி.மீ தூரத்தில் அரபிக் கடல் பகுதியில் உள்ளது. இந்த் தீவுக்கு செல்ல கடல் மற்றும் விமான போக்குவரத்தையே சார்ந்திருக்க வேண்டும். இங்கு பெரும்பாலானவர்கள் மலையாளம், ஆங்கிலம், ஜெசேரி, திவேஹி ஆகிய மொழிகளை பேசுகிறார்கள். 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கின்படி இங்கு 64 ஆயிரத்து 473 பேர் வாழ்கிறார்கள். இந்த தீவின் மொத்த பரப்பரளவு 32.63 கி.மீ சதுர மீட்டர்.

மக்கள்தொகையில் பெரும்பகுதியினர் முஸ்லிம்கள். இவர்கள் உணவுக்காக மாட்டிறைச்சியை பயன்படுத்தும் வேளையில், மத்திய அரசின் பிரதிநிதியாக பிரஃபுல் கோடா வந்த பிறகு அவர் எடுக்கும் நடவடிக்கைகள் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு சார்பானவையாக உள்ளன என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில், சமீபத்தில் சீர்திருத்தம் என்ற பெயரில் அவர் அறிவித்துள்ள திட்டங்கள் உள்ளூர் மக்களை கோபத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இதனால், கடந்த இரண்டு தினங்களாக அங்கு மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இது பற்றிய தகவல் இணையத்தில் வெள்ளிக்கிழமை பரவலாக பகிரப்பட்டது. இதன் பிறகு #SaveLakshadweep என்ற பெயரில் லட்சத்தீவை காப்பாற்றுங்கள் என்ற ஹேஷ்டேக்குடன் இந்த விவகாரம் வைரலாகி தேசிய கவனத்தை ஈர்த்தது.

2020ஆம் ஆண்டில் லட்சத்தீவில் ஒரு கொரோனா பாதிப்பு கூட பதிவாகவில்லை. ஆனால், இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 6,611 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

இந்த நிலையில், லட்சத்தீவு நிர்வாகி பிரஃபுல் கோடா படேலை நீக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி மாநிலங்களவை உறுப்பினர் எலமாறன் கரீம் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் எழுதியிருக்கிறார். லட்சத்தீவு மக்களின் கலாசாரம், பாரம்பரியத்தை அழிக்கும் வகையில் பிரஃபுல் கோடா படேலின் செயல் இருப்பதாக அந்த கடிதத்தில் அவர் குற்றம்சாட்யுள்ளார்.

லட்சத்தீவு என்பது யூனியன் பிரதேசமாகும். எனினும் பிற யூனியன் பிரதேசங்கள் போல இங்கு சட்டப்பேரவை கிடையாது. இங்கு மத்திய அரசின் நேரடி பிரதிநிதியாக நிர்வாகி என்ற பதவியில் இருப்பவர்தான் இந்த குட்டித்தீவை கட்டுப்படுத்துகிறார்.கடந்த டிசம்பர் மாதம் இங்கு நிர்வாகி ஆக இருந்த தினேஷ்வர் சர்மா காலமானதையடுத்து, அந்த பதவியை கவனித்துக்குக் கொள்ளும் கூடுதல் பொறுப்பை, தாத்ரா நகர் ஹவேலி மற்றும் தாமன் தையூ நிர்வாகி ஆக இருந்த பிரஃபுல் கோடா படேலிடம் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

ஆனால், பதவிக்கு வந்த நாள் முதல் இவர் எடுக்கும் முடிவுகள், உள்ளூர்வாசிகளை கோபப்படத் தூண்டி வருகிறது. கொரோனா பரவல் நிலையை தனக்கு சாதகமாக்கிக்கொண்டு அவர் பல்வேறு கட்டுபாடுகளை நகரில் விதிப்பதாக இங்குள்ளவர்கள் கருதுகிறார்கள்.

லட்சத்தீவு காங்கிரஸ் முன்னாள் எம்பி ஆன எம்.எச் சயீத், எந்தவொரு நபரிடம் இருந்தும் அவருக்குரிய நிலத்தை பறிக்கும் வகையில் நிர்வாகியின் சீர்திருத்த யோசனைகள் உள்ளதாக குற்றம்சாட்டினார்.


வழக்கமாக இந்த தீவுக்கு நிர்வாகியாக நியமிக்கப்படுபவர், மத்திய அரசின் உயர் பதவிகளில் செயலாளர் அல்லது உளவு அமைப்புகளின் தலைவர்களாக இருந்தவர்களே நியமிக்கப்படுவர். ஆனால், 2014ஆம் ஆண்டு முதல் நிர்வாகி பதவிக்கு வருபவர் அரசியல் பின்புலம் கொண்டவர்களாக உள்ளனர்.

இந்த பிரஃபுல் படேலின் அரசியல் வாழ்க்கை 2007ஆம் ஆண்டில், குஜராத்தின் ஹிமத் நகர் தொகுதியில் வென்றபோது உச்சம் பெற்றது. ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்ட இவர், அப்போது முதல்வராக இருந்த நரேந்திர மோதியுடன் நெருங்கிப் பழகினார். 2010ஆம் ஆண்டில் இவர் மாநிலத்தின் உள்துறை துணை அமைச்சராக்கப்பட்டார். ஷொராபுதின் என்கவுன்ட்டர் வழக்கில் அமித்ஷா சிறைக்கு செல்ல நேர்ந்தபோது, அவர் வகித்த உள்துறை அமைச்சர் பதவியை பிரஃபுல் கோடா படேலிடமே மோதி ஒப்படைத்தார்.

2012ஆம் ஆண்டில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பிரஃபுல் தோல்வி அடைந்தார். அதன் பிறகு 2014இல் நடந்த மக்களவை தேர்தலில் நரேந்திர மோதி இந்திய பிரதமரானதும் தாமன் தையு நிர்வாகியாக பிரஃபுல் கோடா நியமிக்கப்பட்டார். பிறகு தாத்ரா நகர் ஹவேலி நிர்வாகியாகவும் அவர் நியமிக்கப்பட்டார். அதுநாள்வரை அந்த யூனியன் பிரதேசங்களில் ஐஏஎஸ் உயரதிகாரிகளே நியமிக்கப்பட்டு வந்தனர். 2020இல் தாத்ரா நகர் ஹ வேலியும் தாமன் தையுவும் ஒன்றாக இணைக்கப்பட்ட பிறகு அதன் நிர்வாகி ஆன பிரஃபுல் படேலுக்கு, கடந்த ஆண்டு டிசம்பரில் லட்சத்தீவு நிர்வாகியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.