புதிய சர்ச்சையை கிளப்பும் வாரணாசி மசூதி வழக்கு...முழு பின்னணி

13 May 2022

உத்தரப் பிரதேசம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு அருகே ஞானவாபி மசூதி அமைந்துள்ளது.


இந்த மசூதியின் மேற்கு சுவருக்கு பின்னால் அமைந்துள்ள இந்து கோயிலுக்கு செல்ல ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. இதனிடையே, ஆண்டு முழுவதும் சென்று தரிசனம் செய்ய அனுமதிக்கக் கோரி சில பெண்கள் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.


அதேபோல, பழைய கோயில் வளாகத்தில் 'கண்ணுக்கு தெரிந்த மற்றும் தெரியாத கடவுள்களை' வழிபட அனுமதிக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கோயிலில் ஆய்வு மேற்கொள்ள கடந்த மாதம் உத்தரவிட்டது. ஆனால், ஆய்வு மேற்கொள்ளும் அலுவலர்கள் ஒரு சார்பாக நடந்து கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, ஆய்வு பணிகள் நிறுத்திவைக்கப்பட்டன.


மசூதியின் வரலாறு


கடந்த 1669ஆம் ஆண்டு, முகலாய பேரரசு ஒளரங்கசீப் காலத்தில், அவரது உத்தரவின் பேரில் அங்கிருந்த விஸ்வேஸ்வர் ஆலயம் இடிக்கப்பட்டு அங்கு ஞானவாபி மசூதி கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. கடந்த 1937ஆம் ஆண்டு வெளியான 'பனாரஸின் வரலாறு: ஆரம்ப காலம் முதல் 1937 வரை' என்ற புத்தகத்தில் இதுகுறித்து தகவல்கள் இடம்பெற்றுள்ளன. பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் பண்டைய இந்திய வரலாறு மற்றும் கலாச்சாரத் துறையின் தலைவரான அல்டேகர் என்பவர்தான் இந்த புத்தகத்தை எழுதியுள்ளார்.


கோயிலின் வரலாறு


மசூதி கட்டப்பட்டு 100 ஆண்டுகளுக்கு பிறகும், அந்த பகுதியில் எந்த கோயிலும் கட்டப்படவில்லை. தற்போதுள்ள காசி விஸ்வநாதர் ஆலயமானது, 18ஆம் நூற்றாண்டில் இந்தூர் ராணி அகில்யாபாய் ஹோல்கரால் கட்டப்பட்டது. இது மசூதிக்கு பக்கத்திலேயே கட்டப்பட்டது. கால போக்கில், இது இந்து மதத்தின் முக்கிய கோயில்களில் ஒன்றாக உருவெடுத்தது.


ஒளரங்கசீப் படை எடுக்கும்போது, அங்கு இருந்ததாக கருதப்படும் விஸ்வேஸ்வர் ஆலயத்தின் உண்மையான சிவ லிங்கத்தை ஞானவாபி கிணற்றுக்குள்ளே கோயிலின் மதகுருமார்கள் மறைத்து வைத்ததாக சில இந்துக்கள் நம்புகின்றனர். இதன் காரணமாகவே, தற்போது மசூதி அமைந்துள்ள பகுதியில் பூஜை நடத்த இந்துக்கள் விரும்புகின்றனர்.


பிரச்னைக்கு காரணம்


பல காலமாகவே, இந்துக்கள் வழிபடும் புனிதமான பகுதியில் மசூதி அமைந்திருப்பதாக சிலர் கூறுவருகின்றனர். குறிப்பாக, அயோத்தி பாபர் மசூதி பகுதியில் ராமர் பிறந்ததாக கருதப்படும் இடம் மட்டுமல்லாமல் ஞானவாபி மசூதியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தையும் மதுராவில் கிருஷ்ணர் பிறந்ததாக கருதப்படும் இடத்தையும் மீட்டெடுக்கப்போவதாக விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு கூறிவருகிறது.


சட்டம் சொல்வது என்ன?


வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம், 1991இன் படி, அயோத்தியை தவிர்த்து மற்ற வழிபாட்டு தலங்கள் அனைத்தும் 1947 ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் எப்படி இருந்துவருகிறதோ அதேபோல பராமரிக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட அந்த தேதிக்கு முன்பு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாகக் கூறி நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்க இந்த சட்டம் அனுமதி மறுக்கிறது. இது வாரணாசி வழக்கிலும் பொருந்தும். அயோத்தியை பொறுத்தவரை இந்த சட்டம் நிறைவேற்றும்போது பாபர் மசூதி வழக்கு நிலுவையில் இருந்ததால் இந்த சட்டம் அதற்கு பொருந்தாது.


ஆனால், இந்த சட்டத்திற்கு நேர் எதிராக காசி விஸ்வநாதர் ஆலயம், ஞானவாபி மசூதி வளாகத்தில் விரிவான தொல்லியல் ஆய்வு மேற்கொள்ள இந்திய தொல்லியல் துறைக்கு கடந்த 2021ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி அசுதோஷ் திவாரி உத்தரவிட்டார்.


வேறேதேனும் மத கட்டிடத்தின் மேலே கூடுதலாகவோ அல்லது அதற்கு பதிலாகவோ அல்லது அது இடிக்கப்பட்டு தற்போதுள்ள வழிபாட்டு தலம் கட்டப்பட்டதா என்பதை ஆராய உத்தரவிட்டார். இதுகுறித்து அறிக்கை மே 10ஆம் தேதிக்குள் சமர்பிக்கவும் உத்தரவிடப்பட்டார்.


மசூதியில் ஆய்வு மேற்கொள்ள சென்ற அலுவலர்கள் விடியோ எடுக்க முயற்சிக்க, இதற்கு மசூதி தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. நீதிமன்றம் விடியோ எடுப்பது குறித்து உத்தரவில் கூறவில்லை என்றும் அவர்கள் முறையிட்டனர். ஆனால், விடியோ எடுக்க நீதிமன்றம் அனுமதித்திருப்பதாக மனுதாரர்கள் தரப்பு கூறியுள்ளனர்.


இது தொடர்பாக நேற்று விளக்கம் அளித்த நீதிமன்றம், "மனுதாரர்கள் கேட்டபடி அனைத்து இடங்களிலும் விடியோ எடுக்க அனுமதிக்க வேண்டும். ஆய்வை மே 17ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும்" என தெரிவித்துள்ளது. ஆய்வு குழுவை மேற்பார்வையிடும் ஆணையரை மாற்ற மசூதி தரப்பு கோரிக்கை விடுத்தது. ஆனால், இதனை நீதிமன்றம் மறுத்துவிட்டது.


மசூதி வளாகத்தில் ஆய்வு மேற்கொள்ள அனுமதிக்க கூடாது எனக் கூறி மசூதி தரப்பு தாக்கல் செய்த மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து மசூதி தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது. இச்சூழலில், நாளை முதல் விடியோ மூலம் ஆய்வு மேற்கொள்ளப்படும் என மாவட்ட நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.