ட்விட்டருக்கு இந்தியா அரசு கடைசி எச்சரிக்கை!

06 June 2021

இந்தியாவின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை உடனடியாக ஏற்று நடக்க டிவிட்டர் சமூக வலைத்தளத்துக்கு கடைசி வாய்ப்பு வழங்கப்படுவதாகவும், தவறினால் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் இந்திய அரசு தெரிவித்துள்ளது.


ஜூன் 5-ம் தேதி வெள்ளிக்கிழமை இந்திய அரசு டிவிட்டருக்கு வழங்கிய நோட்டீசில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை உடனடியாக ஏற்று நடக்கத் தவறினால், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் பொறுப்பேற்பதில் இருந்து டிவிட்டருக்கு வழங்கப்பட்ட விதிவிலக்கு நீக்கப்படும் என்று அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டிருப்பதாக பி.டி.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விதிகளைப் பின்பற்ற டிவிட்டர் மறுப்பது இந்திய மக்களுக்கு இந்தத் தளத்தில் பாதுகாப்பான அனுபவத்தை வழங்க போதிய அக்கறையோ, முயற்சியோ இல்லை என்பதைக் காட்டுவதாக இருக்கும் என்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அனுப்பிய அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"இந்தியாவில் 10 ஆண்டு காலத்துக்கு மேல் இயங்கிக் கொண்டிருந்தாலும், இந்திய மக்கள் இந்த தளத்தில் உள்ள பிரச்சனைகளை உரிய நேரத்தில், வெளிப்படையாக, நியாயமான வழிமுறைகளின் மூலம், இந்தியாவில் உள்ள தெளிவாக அடையாளம் காணக்கூடிய வளங்களின் மூலம் தீர்த்துக்கொள்ள ஒரு பொறியமைப்பை உருவாக்க டிவிட்டர் நிறுவனம் பிடிவாதமாக மறுக்கிறது என்பது நம்ப முடியாததாக இருக்கிறது" என ஐ.டி. அமைச்சகம் கூறியுள்ளது.

மே 26ம் தேதி முதல்கொண்டே பின்விளைவுகள் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தாலும், நல்லெண்ண நடவடிக்கையாக விதிகளைப் பின்பற்றுவதற்கு ஒரு கடைசி வாய்ப்பை அளிப்பதாக அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், எந்த தேதிக்குள் அந்த விதிகளை ஏற்கவேண்டும் என்பதற்கு எந்த கெடுவும் விதிக்கப்படவில்லை.

நீல டிக் சர்ச்சை
இதனிடையே, இந்திய துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடுவின் டிவிட்டர் கணக்கில் இருந்த நீல டிக் நீக்கப்பட்டு, மீண்டும் இணைக்கப்பட்டது.

டிவிட்டரில் நீலநிற டிக் என்பது அடையாளங்கள் உறுதி செய்யப்பட்ட கணக்கு என்பதற்கான அத்தாட்சியாகும். நீல டிக் பெற்ற டிவிட்டர் கணக்கு என்பது பெருமைக்குரியதாகவும் பலரால் பார்க்கப்படுகிறது.

2020 ஜூலை முதல் வெங்கையா நாயுடு டிவிட்டரில் செயல்படாமல் இருப்பதால் டிவிட்டர் அல்காரிதம் தானாகவே அவரது கணக்கில் இருந்த நீல டிக்கை நீக்கிவிட்டதாக டிவிட்டர் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கணக்கில் இருந்த நீல டிக்கும் நீக்கப்பட்டு மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.

டிவிட்டரில் 2019 மே மாதத்தில் இணைந்ததில் இருந்தே மோகன் பாகவத் ஒரு ட்வீட்கூட போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் தொழில்நுட்ப விதிகளைப் பின்பற்றும் விவகாரத்தில் இந்திய அரசுக்கும், டிவிட்டருக்கும் இடையில் உரசல் நடந்துவரும் நிலையில் இந்த நீல டிக் நீக்கம், அதற்கான டிவிட்டரின் பதிலடியோ என்ற சந்தேகம் எழுந்தது. மீண்டும் அந்தக் கணக்குகளில் நீல டிக் தோன்றியிருந்தாலும், அல்காரிதம் சிக்கலே இதற்குக் காரணம் என டிவிட்டர் கூறியிருந்தாலும், நிலைமையில் ஒரு பதற்றம் கூட, இதுவும் ஒரு காரணமாகியிருக்கிறது.