பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்த மக்களால் அமேசான் காட்டுக்கு பாதிப்பில்லை - ஆய்வாளர்கள்

10 June 2021

அமேசான் மழைக்காடு தொடர்பான வரலாற்றைக் குறித்த ஆய்வில், அங்கு பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்த மக்கள் அப்பகுதிக்கு எந்த வித சேதங்களையோ, அங்கு வாழ்ந்த உயிரினங்களுக்கு எந்த வித இழப்பையோ ஏற்படுத்தவில்லை என கண்டறியப்பட்டு இருக்கிறது.


பெருவில் பணிபுரியும் விஞ்ஞானிகள் மனித தாக்கத்தின் நுணுக்கமான புதைபடிம ஆதாரங்களுக்காக மண்ணின் அடுக்குகளைத் தேடினர்.

"காடுகள் அழிக்கப்படவில்லை, விவசாயம் மேற்கொள்ளப்படவில்லை, அல்லது வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் பெரிதாக காடுகள் மாற்றத்துக்கு உள்ளாகவில்லை" என அவர்கள் கண்டறிந்தனர்.

இந்த ஆய்வு ‘பிஎன்ஏஎஸ்’ என்கிற சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

"இந்த ஆராய்ச்சி நவீன பாதுகாப்பை மேம்படுத்த இந்த சான்றுகள் உதவக்கூடும். அமேசானில் நம்பமுடியாத அளவிற்கு அதிகமாக இருந்த பல்லுயிரியலுக்கு மத்தியில் மக்கள் எவ்வாறு வாழ முடியும் என்பதையும் இந்த ஆராய்ச்சி வெளிப்படுத்துகிறது" என அந்த ஆராய்ச்சியின் தலைவர் மற்றும் பனாமாவின் பால்போவாவில் உள்ள ஸ்மித்சோனியன் வெப்பமண்டல ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த முனைவர் டோலோரஸ் பைபர்னோ கூறுகிறார்.

அமேசானின் பரந்த, மாறுபட்ட நிலப்பரப்பை பழங்குடி மக்களால் எவ்வளவு உருவாக்கப்பட்டது என்பதையும் முனைவர் பைபர்னோவின் கண்டுபிடிப்புகள் வெளிப்படுத்துகின்றன.

தென் அமெரிக்காவில் ஐரோப்பியர்கள் வருவதற்கு முன்னர் பூர்வீக மக்களால் இந்த நிலப்பரப்பு தீவிரமாக வடிவமைக்கப்பட்டதாக சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இப்போது அமேசான் காட்டில் அதிகமாக வளர்ந்து ஆதிக்கம் செலுத்தும் மர இனங்கள், வரலாற்றுக்கு முந்தைய மனித மக்களால் நடப்பட்டவை என்பதை சமீபத்திய ஆய்வுகள் காட்டுகின்றன.

மழைக்காடுகளுக்கு எந்த வித பாதிப்பும் இல்லாத வகையில் நிலையாகவும், கடந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் எந்த வித உயிரின இழப்புகள் இல்லாமலும் பழங்குடி மக்கள் காடுகளைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதற்கு இந்த புதிய கண்டுபிடிப்பு ஆதாரங்களை வழங்குவதாக பிபிசியிடம் கூறியுள்ளார் முனைவர் பைபர்னோ.

இந்த மழைக்காடுகளின் வரலாற்றைக் கட்டமைக்க, மண்ணை அகழ்வாய்ந்து, அதன் படிமங்கள் எந்த காலத்தைச் சேர்ந்தவை என்பதைக் கண்டுபிடிக்கும் கால சோதனைக்கு உட்படுத்தும் ஆராய்ச்சிகளை அவரும், அவரது சகாக்களும் மேற்கொண்டனர். வடகிழக்கு பெருவின் தொலைதூர பகுதியில் உள்ள மூன்று இடங்களில் மண்ணை ஆய்வு செய்தனர்.

இவை மூன்றுமே "இன்டர்ஃப்ளூவல் சோன்" என்றழைக்கப்படும் நதிப் பாதைகள் மற்றும் வெள்ளப்பெருக்குப் பாதைகளிலிருந்து குறைந்தது ஒரு கிலோமீட்டர் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டன.

அமேசானின் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் இந்த காடுகள் 90% க்கும் அதிகமானவை, எனவே அவை குறித்து ஆராய்வது, பூர்வகுடிகளின் தாக்கத்தைப் புரிந்துகொள்வதற்கு அவசியமாகிறது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக காட்டில் என்ன மாதிரியான தாவரங்கள் வளர்ந்தன என்பது பற்றிய சிறிய பதிவுகளை பைட்டோலித்ஸ் எனப்படும் நுண்ணிய தாவர புதைபடிவங்கள் கொண்டிருக்கும். அதை ஒவ்வொரு வண்டல் அடுக்கிளும் அவர்கள் தேடினர். "5,000 ஆண்டுகளில் மனித மாற்றத்திற்கான மிகக் குறைந்த அறிகுறிகளையே நாங்கள் கண்டறிந்தோம்" என முனைவர் பைபர்னோ கூறினார்.

"ஆகவே, நதிக்கு வெளியே உள்ள காடுகளில் குறைந்த அளவிலேயே மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள், குறைந்த அளவிலேயே மாற்றங்களுக்கு உள்ளாகி இருக்கிறது என்பதற்கு இப்போது எங்களுக்கு நல்ல சான்றுகள் உள்ளன என்று நான் நினைக்கிறேன்."

பெர்கன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர் சுசெட் ஃப்ளாண்டுவா, ஹியுமன்ஸ் ஆன் பிளானட் எர்த் (ஹோப்) என்கிற திட்டத்தில் ஒரு ஆராய்ச்சியாளராவார். அமேசானின் பல்லுயிர் பெருக்கம் மீதான மனித தாக்கத்தின் வரலாற்றை உருவாக்குவதில் இது ஒரு முக்கியமான ஆய்வென அவர் கூறினார்.

"ஆனால் ஒரு புதிரை அபத்தமாக ஒன்று சேர்ப்பது போன்றது. இதுபோன்ற ஆய்வுகள் மெதுவாக, ஆயிரக்கணக்கான ஆண்டு கால மனித நிர்வாகத்திற்குப் பிறகு இன்றைய அமசோனியா காடுகள் உருவானது என்கிற கோட்பாட்டை ஆதரிக்கிற அல்லது எதிர்க்கிற வகையிலான ஆதாரங்களை மெதுவாக உருவாக்குகின்றன," என்று அவர் கூறினார். "எந்த பக்கம் மிகவும் உறுதியான ஆதாரங்கள் இருக்கின்றன என்பதைக் காண அருமையாக இருக்கும்."

தங்கள் கண்டுபிடிப்புகள் அமேசானில் உள்ள பல்லுயிரியலைப் பாதுகாக்க உதவுவதில் உள்நாட்டு அறிவின் மதிப்பை சுட்டிக்காட்டுகின்றன, உதாரணத்துக்கு மறு நடவு மற்றும் மறுசீரமைப்பிற்கான சிறந்த உயிரினங்களைத் தேர்ந்தெடுப்பதற்கு வழிகாட்டுவதன் மூலம் சுட்டிக்காட்டுகின்றன என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

"பழங்குடி மக்களுக்கு அவர்களின் காடு மற்றும் சுற்றுச்சூழல் குறித்த பிரமாதமான ஞானம் இருந்திருக்கிறது" என முனைவர் பைபர்னோ கூறினார், "அது எங்கள் பாதுகாப்பு திட்டங்களில் சேர்க்கப்பட வேண்டும்".

முனைவர் ஃபிளான்டுவா அட்தை ஒப்புக் கொண்டார். "நாம் எவ்வளவு காத்திருக்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு அறிவை இழக்க நேரிடும் வாய்ப்புகள் அதிகம். இப்போது அறிவையும் ஆதாரங்களையும் ஒருங்கிணைத்து, அமேசானியாவிற்கான ஒரு நிலையான மேலாண்மை திட்டத்தை நிறுவுவதற்கான நேரம் வந்து விட்டது. அத்துடன் வரலாற்றுக்கு முந்தைய மனித இருப்பையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்." என்கிறார் முனைவர் ஃபிளான்டுவா.