ரூபாய் 5,000 லஞ்சம் வாங்கிய போக்குவரத்து உதவி ஆய்வாளர்

20 February 2021

வாகன தணிக்கையின் போது ரூபாய் 5,000 லஞ்சம் வாங்கிய போக்குவரத்து உதவி ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்


சென்னை குரோம்பேட்டை போக்குவரத்து காவல்துறையினர் நேற்று தாம்பரம் டி,பி மருத்துவமனை  அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அசோக் நகரைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் சுற்றுலா வாகனத்தை தாம்பரத்திலிருந்து குரோம்பேட்டை நோக்கி ஓட்டி வந்தார்.

அப்போது டி,பி மருத்துவமனைஅருகே இருந்த U வளைவில் திரும்பும் போது பணியில் இருந்த போக்குவரத்து காவல்துறையினர் உதவி ஆய்வாளர் கிருஷ்ணகுமார், மற்றும் சிவகுமார் ஆகியோர் சுற்றுலா வாகனத்தை மடக்கிப் பிடித்துள்ளனர்.

அப்போது போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் கிருஷ்ணகுமார் ஓட்டுனர் உரிமத்தையும் வாகன சாவியும் பிடிங்கி 1200 ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என கூறி உள்ளார்.அதற்கு நான் மது அருந்தவில்லை எதற்கு ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும் என ஓட்டுநர் உதவியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதையடுத்து போக்குவரத்து உதவி ஆய்வாளர் கிருஷ்ணகுமார் 10,000 ரூபாய் செலுத்த வேண்டும் இல்லை என்றால் வாகனத்தை கொடுக்க முடியாது.டிடி வழக்கில் உன்னை உள்ளே தள்ளி விடுவேன் என மிரட்டியுள்ளார். ஆனால் ஏழுமலை பணம் தர மறுத்துள்ளார்.

ஓட்டுனர் மது அருந்தாதுதால் கடைசியில் ரூபாய் 5000 கொடுக்க வேண்டுமென உதவி ஆய்வாளர் கிருஷ்ணகுமார் கேட்டுள்ளார். இதையடுத்து ஏழுமலை இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

பின்னர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்  கொடுத்த அறிவுரையின்படி மை தடவிய ரூபாய் 5000 பணத்தை உதவி ஆய்வாளர் கிருஷ்ணகுமார் இடம் கொடுக்கும் போது டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இதையடுத்து அவரை குரோம்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.பின்னர் கிருஷ்ணகுமார் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் உடன் பணியில் இருந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் சிவகுமார் என்பவரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

குரோம்பேட்டை பகுதியில் வாகனத்தை வழிமறித்து  5000 லஞ்சம் வாங்கிய போக்குவரத்து உதவி ஆய்வாளர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் சக போலீசாரிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பல்லாவரம் தொகுதி செய்தியாளர் ராஜ்கமல்