ஆர்ப்பரித்து கொட்டும் திற்பரப்பு அருவி; குவியும் சுற்றுலா பயணிகள்

19 June 2022

கன்னியாகுமரி மாவட்டத்தில் குமரி குற்றாலம் என்றழைக்கப்படும் திற்பரப்பு அருவி சிறந்த சுற்றுலா மையமாக திகழ்கிறது. தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் வரும் சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வரும்போது திற்பரப்பு அருவியில் ஆனந்த குளியலிட்டே செல்கின்றனர்.

பள்ளிகள் திறக்கப்பட்டு முதல் வார விடுமுறை நாளான இன்று காலை முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

மேலிருந்து கீழே கொட்டும் தண்ணீரில் குளிப்பது மட்டுமல்லாமல் பக்கத்தில் உள்ள நீச்சல் குளத்திலும் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்து வருகின்றனர். இதுபோல அருவியின் மேல் பகுதியில் உள்ள சுற்றுலா படகு துறையிலும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்து படகு சவாரி செய்து வருகின்றனர்.

சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளதால் வியாபாரிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர்.