திருவாவடுதுறை ஆதீனத்தில் இன்று சைவ குல எத்திராஜர் குருபூஜை விழா நடைபெற்றது

17 June 2020

திருவாவடுதுறை ஆதீனத்தில் இன்று சைவ குல எத்திராஜர் குருபூஜை விழா நடைபெற்றது  மயிலாடுதுறை ஆன்மீக பேரவை தகவல்

 மயிலாடுதுறை ஆன்மிகப்  பேரவையின் நிறுவனர் வழக்கறிஞர் டாக்டர் ராம. சேயோன்  வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

சைவ குல எதிராஜர் என்று போற்றப்படும் திருக்கைலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீன பன்னிரண்டாவது குருமகாசன்னிதானம் ஸ்ரீ திருச்சிற்றம்பல தேசிக  மூர்த்திகள் குருபூஜை விழா திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ 24ஆவது குருமகாசன்னிதானம் அவர்களின் அருளாணைவண்ணம் இன்று 17 .06 . 2020 புதன்கிழமை காலை 10 மணி அளவில் திருவாவடுதுறை ஸ்ரீ மறைஞான தேசிகர் தபோவனத்தில் உள்ள திருவாவடுதுறை ஆதின 12-ஆவது குருமகாசன்னிதானம் குருமூர்த்த திருக்கோயிலில் ஸ்ரீ திருச்சிற்றம்பல தேசிக மூர்த்திகள் குருபூஜை விழா சிறப்பாக நடைபெற்றது. 
சித்தாந்த சைவ அருட் பாலினத்தை சீரும் சிறப்புமாக நடத்திய திருவாவடுதுறை ஆதீன பன்னிரண்டாவது குருமகாசன்னிதானம் குருபூஜை விழா திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் அவர்களின் அருளாணைவண்ணம் ஸ்ரீமத் திருச்சிற்றம்பல தம்பிரான் சுவாமிகளால் குருபூஜை விழா நடத்தப்பட்டது. விழாவில் திருமுறை பாராயணம் ,ஆதீன குரு மூர்த்திகள் தோத்திரப் பாடல்கள் இசைக்கப்பட்டது.  ஸ்ரீ திருச்சிற்றம்பல தேசிக  மூர்த்திகள் அருள் மாட்சியில் பல சிறப்புகள் நடைபெற்றது. குருமகாசன்னிதானம் அவர்கள் ராமநாதபுரத்தில் எழுந்தருளியிருந்த பொழுது , அங்கு இருந்த அரசர் அவர்கள் ராமநாதபுரத்தில் மழை பொழிவு இல்லை , பயிர்கள் எல்லாம் வாடி இருக்கிறது, மழை பெய்யச் செய்து வளம் கொழிக்க குருமா சன்னிதானத்தில் வேண்டிக்கொண்டார். குருமகாசன்னிதானம் அவர்களும் ஆதீன புலவர்களையும் ஓதுவார்களையும் அழைத்து  மேகராகக்குறிஞ்சி பண்ணிசையில் தேவார மழை பதிகங்களை இசைக்க செய்தார்கள். அதிசயம் என்னவென்றால் மழை பொழிவு ராமநாதபுரத்தில் சிறப்பாக இருந்தது. குருமகாசந்நிதானம் அவர்களுடைய இறை அருளையும் இறைமாட்சியையும் நன்கு உணர்ந்த ராமநாதபுரம் மன்னன் ஆதீன சீடராக விளங்கி, ஆதீனத்திற்கு பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை தானமாக வழங்கினார். குருமகாசந்நிதானம் அவர்கள் சிவாகமங்களில் இரண்டு லட்சம் ஸ்லோகங்களை பொருளுணர்ந்து படித்து அருளினார்கள். 
சிவ ஆகம புலமை பெற்றவர். அதுமட்டுமல்ல பதினான்கு மெய்கண்ட சாத்திரங்கள் பதினான்கு  பண்டார சாத்திரங்கள் ஆகியவற்றை நன்கு படித்தவர்.
 மாபாடியம் கண்ட மாதவ சிவஞான யோகிகள் 12 மாணவர்களில் 12-ஆவது குருமகாசன்னிதானமும்  ஒருவர் .
 இவரது அருள் ஆட்சியிலே கச்சியப்ப முனிவர், தொட்டிகலை சுப்பிரமணிய முனிவர்,  சாத்திரம் சாமிநாத முனிவர் போன்ற முனிவர்கள் எல்லாம் ஆதீன தமிழ் மண்டபத்தை அலங்கரித்தார்கள்.
குருமகாசந்நிதானத்தின்  ஆட்சி காலத்தில் சாத்திரம் சாமிநாதன் முனிவரால் திருவாவடுதுறை புராணம் இயற்றப்பட்டு அரங்கேற்றப்பட்டது. அதுமட்டுமல்ல 12ஆவது குருமகாசந்நிதானம் அவர்கள்,  இளைய குருமகா சன்னிதானமாக இருந்தபொழுது, மாதவ சிவஞான யோகிகள், மாதவ சிவஞான போதம் அரங்கேற்றப்பட்டது. இவரது ஆட்சிக்காலத்தில் திருவாவடுதுறை ஆதீனம் பூலோக கைலாயமாக விளங்கியது. கச்சியப்ப முனிவரால் இயற்றப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க விநாயக புராணம் இவரது அருளாட்சியில்  அரங்கேற்றப்பட்டது.  ஆதீன குரு முதல்வர் நமச்சிவாய மூர்த்திகளின் திருக்கோயில் குருமகாசன்னிதானத்தின் அருள் ஆட்சிகாலத்தில் கருங்கல் திருப்பணி செய்யப்பட்டது. திருவாவடுதுறை ஆதினத்தின் ஸ்ரீ பஞ்சாக்கர தேசிகர் அந்தாதி குருமா சன்னிதானத்தின் அருளாட்சியில் இயற்றப்பட்டது. இவ்வளவு சிறப்புகளை பெற்ற பன்னிரண்டாவது குருமகாசன்னிதானம் ஸ திருச்சிற்றம்பல தேசிக மூர்த்திகளின் குருபூஜை விழா இன்று காலை திருவாவடுதுறை ஆதீன ஸ்ரீ மறைஞான தேசிகர் தபோவனத்தில் சிறப்பாக நடைபெற்றதாக தெரிவித்தார்.