நாடுமுழுவதும் போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை இன்று 8.70 கோடியை தாண்டியது

07 April 2021

இந்தியாவில் தற்போது தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1,15,736 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 80.70 சதவீதம் பேர் மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், கர்நாடகா, உத்தரப் பிரதேசம், டெல்லி, மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இதனிடயே இந்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி திட்டம் கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. 

இந்நிலையில் நாடுமுழுவதும் போடப்பட்ட மொத்த கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை இன்று 8.70 கோடியைக் கடந்தது. இன்று காலை 7 மணி வரை 8,70,77,474 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 33 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டன. 

இதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, உலகில் வேகமாக தடுப்பூசிகள் போடும் நாடுகளில், நாளொன்றுக்கு சராசரியாக 30,93,861 தடுப்பூசிகள் என்ற அளவுடன் இந்தியா அமெரிக்காவை மிஞ்சியது. அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 29,98,533 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் இந்த எண்ணிக்கை 30,93,861 ஆக உள்ளது. 3-வது இடத்தில் பிரேசிலில் 3,71,446 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.