தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சிறப்புத் தொழுகையுடன் இஸ்லாமியர்கள் நோன்பை தொடங்கினர்

14 April 2021

இந்த ஆண்டுக்கான ரமலான் மாத பிறை நேற்று முன் தினம் (திங்கட்கிழமை) தமிழகத்தில் தென்படவில்லை. எனவே இன்று (புதன்கிழமை) முதல் ரமலான் நோன்பு தொடங்கும் என இதற்கான அறிவிப்பை தமிழக அரசு தலைமை ஹாஜி சலாகுதீன் முகம்மது அய்யூப் வெளியிட்டார்.

அதன்படி, பல்வேறு இடங்களில் சிறப்புத் தொழுகையுடன் இஸ்லாமியர்கள் இன்று நோன்பை தொடங்கினர். புகழ்பெற்ற நாகூர் தர்காவில் கொரோனா விதிகளை பின்பற்றி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

நோன்பு காலங்களில் கூட்டம் அதிகரித்து காணப்படும் நாகூர் தர்காவில் குறைந்த அளவிலேயே தொழுகைக்கு வந்திருந்தனர். மதுரை மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் இரவு நேர சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். மகபூப்பாளையம், மேலூர், திருமங்கலம், திருப்பரங்குன்றம், சோழவந்தான், உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

இதே போன்று புதுச்சேரி மாநிலத்திலும் ரமலான் நோன்பு தொடங்கியது. பல்வேறு மசூதிகளில் 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டு தொழுகையை மேற்கொண்டனர்.