மீண்டும் உயிர் பெறுமா பிச்சைகாரர்கள் மறுவாழ்வு திட்டம் ?

11 December 2021

பிச்சை எடுப்பதை யாரும் விரும்புவதில்லை,ஆனால் அவர்களின் இயலாமை காரணமாக வேறு வழியின்றி பிச்சை எடுக்கின்றனர். தற்போது அதன் தாக்கம் அதிகரித்துள்ளது. கனடிய மருத்துவ அமைப்பின் ஆய்வின் படி 70 சதவீத பிச்சைக்கார்கள் குறைந்த பட்ச ஊதியத்தொகை கிடைக்கும் பட்சத்தில் அதனை விரும்பாமல் தான் பிச்சை எடுகின்றனர்.


தமிழ்நாட்டில் 1945 ம் ஆண்டு பிச்சையெடுப்பதை தடை செய்யும் சட்டம் இயற்றப்பட்டது. குற்றவியல் நடைமுறை சட்ட திருத்தம் 2013 கீழ் பிச்சையெடுப்பவரை பிடியாணை இல்லாமல் கைது செய்து விசாரணையின்றி சிறை அல்லது முகாம்களில் அடைக்கும் வகையில் சட்டங்கள் கடுமையாக்கபட்டன.

இந்நிலையில் 1972 ம் ஆண்டு அன்றைய திமுக அரசு பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு திட்டம் கொண்டு வந்தது. இந்த திட்டம் மூலம் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் , சிக்னலில் பிச்சை எடுப்பவர்களை மறுவாழ்வு அளிக்கும் வகையில் அவரவர் தகுதிக்கேற்ப சுய தொழில் தொடங்குவது போன்ற திட்டங்களை அரசு ஏற்படுத்தி கொடுத்தது.

ஆனால் நாளடைவில் இந்த திட்டம் ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் கண்ணில் படாமல் இருந்தது. தற்போது இதனை அதிகாரிகள்கண்டு கொள்ளவில்லை நீதிமன்றம் தான் இந்த திட்டம் இன்றளவும் எப்படி உயிர்ப்புடன் இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி உள்ளது.


சென்னை உயர்நீதி நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு வழக்கு விசாரணைக்கு வருகிறது. திருச்சியை சேர்ந்த பாண்டியன் என்பவர் மூன்று வயது குழந்தையை கடத்தி வந்து பிச்சை எடுத்த வழக்கில் திருச்சி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தை நாடிய போது தான் சில முக்கிய தகவல்கள் வெளி வந்தன. இந்த வழக்கை விசாரித்து நீதிபதி புகழேந்தி உத்தரவிட்ட உத்தரவில் இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளாகியும் இன்னும் பிச்சை எடுப்பதை ஏன் தடுக்க முடியவில்லை என்று கேள்வி எழுப்பினார்.


ஒவ்வொருவருக்கும் உணவு கிடைக்காமல் இருப்பதை தவிர்த்திட அரசுகள் பல திட்டங்களுக்கு ஏராளமான நிதியை செலவிடுகின்றன. அன்னயோஜனா திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரேஷன்கார்டுக்கு 35 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. இதற்காக மாதம் 57 ஆயிரத்து 437 மெட்ரிக் டன் அரிசி வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு கடந்த 2011ம் ஆண்டு முதல் மாதம் 20 கிலோ அரிசி வழங்குவதன் மூலம்  மாதத்திற்கு ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 783 மெட்ரிக் டன் வழங்கப்படுகிறது.

மாதாந்திர உதவித் தொகை மற்றும் ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் தினசரி ரூ.256ம்  வழங்கப்படுகிறது. ஆனாலும், பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை மட்டும் அதிகரித்துக் கொண்டே போகிறது. முன்னாள் முதல்வர் கலைஞர் ஆட்சியில் இருந்தபோது பிச்சைக்காரர்களின் மறுவாழ்விற்கான திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். இதற்காக மாநில முழுவதும் 6 இடங்களில் மறுவாழ்வு இல்லங்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்த இல்லங்கள் தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் மோசமாக உள்ளன. 

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், "ஸ்மைல் எனப்படும் விளிம்பு நிலையில் உள்ள தனிநபர்களின் வாழ்வாதாரம் மற்றும் தொழிலுக்கு ஆதரவு எனும் திட்டத்தின் துணை திட்டமாக பிச்சை எடுப்பதில் ஈடுபட்டுள்ளவர்களின் மறுவாழ்வுக்கான விரிவான மத்திய துறை திட்டம் செயல்படுத்தப்படுகிறது” என்று தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தின்படி, அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.182 கோடி நிதி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.


பிச்சைக்காரர்களின் தொழில் திறன்கள் மேம்பாட்டுக்காக ரூ.1.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 514 பேருக்கு இதுவரை தொழில் மேம்பாட்டு திறன் பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாகவும் ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இந்த திட்டங்கள் இருப்பது மாநில அரசுகளுக்கு தெரியுமா?, இதனை மக்களிடையே கொண்டு சேர்க்க என்ன நடவடிக்கை அரசு எடுத்துள்ளது என்ற கேள்வியும் எழுகிறது.

கடந்த 2016க்கு பிறகு கிட்ட தட்ட 5 ஆண்டுகளில் பிச்சை எடுத்ததாக யாரும் கைது செய்யப்பட்டு இங்கு  மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்படவில்லை. இங்கு பிச்சை எடுப்பவர்கள் கணவன் மனைவியாக இருந்தால் அவர்களது உடல் பிரச்சனையை காரணம் காட்டி தள்ளு வண்டியில் அமர்ந்து கொண்டு பிச்சை எடுகின்றனர். திருநங்களை தங்களது வறுமை நிலையை காரணம் காட்டி பிச்சை எடுக்கின்றனர்.இதற்கு இவர்கள் வெவ்வேறு பெயர்கள் வைத்திருந்தாலும், பிறரிடம் கையேந்துவது பிச்சையாகவே கருதப்படுகிறது.

மதுரையில் கொரோனா காலத்தில் தெருவில் ஆதரவற்று இருந்தவர்களை முகாம்களில் தங்க வைத்து அவர்களது சொந்தங்களை தொடர்பு கொண்டு அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.மதுரை மாவட்ட நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை வரவேற்பை பெற்றாலும் பெயருக்கு நடந்ததை தவிர தற்போது எந்த அளவில் பயன்பாட்டில் உள்ளது என்று தெரியவில்லை.
திமுக அரசு கொண்டு வந்ததை அதிமுக அரசு கண்டு கொள்ளாமல் கைவிடுவதும் ,அதிமுக அரசு கொண்டு வந்ததை திமுக அரசு கைவிடுவதும் வழக்கம். அரசு மக்களுக்கான திட்டங்களை அறிவிக்கிறது. ஆனால் அந்த திட்டங்கள் சரியான மக்களுக்கு சென்று சேர்க்கிறதா என்பதை அரசு எப்படி கண்காணிக்கிறது. அப்படி கண்காணித்து இருந்தால் சமீபத்தில் அஸ்வினி என்ற நரிக்குறவர பெண்  எதனால் பாதிக்கபட்டார், ஏன் பாதிக்கபட்டார். இதனை கண்காணிக்க மறந்தவர்கள் ஆட்சியாளர்களா அல்லது அதிகாரிகளா ?. இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க பிச்சைக்கரார்கள் மறுவாழ்வு திட்டத்திற்கு தமிழக அரசு உயிர் கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.