ஆங்கிலத்தில் பேசுவதற்கு மாணவர்களை தயார்படுத்த வேண்டும்

24 June 2022

பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தெற்கு ஒன்றியத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஆங்கில  பயிற்சி நேற்றும், இன்றும் நடந்தது.இதை வட்டார கல்வி அலுவலர் ஜோசப் கருணாகரன் தொடங்கிவைத்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், பள்ளிகளில் மாணவர்கள் ஆங்கில வகுப்பில் கண்டிப்பாக ஆங்கிலத்தில் தான் பேச பயன்படுத்தி கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் ஆங்கில பாடங்களை நடத்தி, மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேசுவதற்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்றார். ஆசிரியர் பயிற்றுனர் வளர்மதி, பள்ளி ஆசிரியர்கள் சுஜாதா, விமலாதேவி ஆகியோர் பயிற்சியை நடத்தினார்கள். நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சமத்தூர் ராம ஐய்யங்கார் நகராட்சி மேல்நிலைப்பள்ளி ஆகிய 3 இடங்களில் ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சி வகுப்பு நடைபெற்றது. 

இதுகுறித்து கல்வி அதிகாரிகள் கூறியதாவது:- தற்போது அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழிக்கல்வி தொடங்கப்பட்டு உள்ளது.தனியார் பள்ளிகளில் ஆங்கிலத்தில் மாணவர்கள் பேசுகின்றனர். ஆனால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசுவதற்கு தயக்கம் காட்டுகின்றனர். எனவே மாணவர்களுக்கு சிறிய, சிறிய வார்த்தைகளை சொல்லி கொடுத்து,எளிதில் ஆங்கிலத்தில் பேசுவதற்கு தயார்படுத்த வேண்டும். இதற்காக பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் பணியாற்றும் 4, 5-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சி தொடங்கி உள்ளது. பயிற்சியில் ஆங்கில வகுப்புகளில் எப்படி மாணவர்களை ஆங்கிலத்தில் பேச வைக்க வேண்டும்.மேலும் ஆங்கில பாடங்களை மாணவர்களின் மனதில் எப்படி பதிய வைப்பது என்பதை செயல்பாடுகள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.பயிற்சியின் நோக்கம்,பாடம் நடத்தும் முறை,மாணவர்களை எவ்வாறு ஆயத்தப்படுத்துதல் மற்றும் பாடம் எடுக்கும் முறை போன்றவை செயல்விளக்கம் மூலம் காண்பிக்கப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

G. கவி பிரசாந்த்
கொற்றவை செய்தியாளர்
கோவை மாவட்டம்
பொள்ளாச்சி