மிருகங்களிடம் இருந்து பிஞ்சுகளை காப்பாற்ற பாலியலை ஜனநாயகப்படுத்துங்கள்

19 December 2021

#justiceforme என்று கேட்கும் நிலையில் தான் சமூகத்தில் ஒவ்வொரு உழைக்கும் மனிதரும் உள்ளனர்.


கூடுதலாக பெண்கள், குழந்தைகள் தங்கள் உடல்களை ஆண்களிடம் இருந்து காத்துக் கொள்ள போராடி மடிய வேண்டி உள்ளது!

மீண்டும் மீண்டும் தண்டனைகள் குறித்த ஆவேசப் பேச்சுகள்... சோர்வைத் தருகின்றன! உங்கள் மகளுக்கு நேர்ந்தாலும் இதே போல் பேசுவீர்களா என்கிற குரூரமான கேள்வியையும் நான் எதிர்கொண்டுள்ளேன்.

சமத்துவமான உழைப்பு உறவுகள் தோன்றாமல் மனிதர்களிடையே சமத்துவம் சாத்தியமில்லை. எனினும்,பெண்களை காத்திடுங்கள் அச்சமின்றி நாங்கள் நடமாட வழி வகை செய்திடுங்கள்.


பெண்கள், ஆண்மை பெண்மை பற்றிய கருத்தியலை களைய அரசுகள் உடனடி வேலைத் திட்டத்தை தொடங்க வேண்டும். "பொம்பள" தான என்ற எண்ணத்தை ஒழித்திட வேண்டும். பெண்களுக்கான கல்வி தொடங்கி பொருளாதார சுதந்திரம் வரை நீண்ட நெடிய மாற்றங்கள் தேவை.
போலியான, அறிவியலுக்குப் புறம்பான ஆணாதிக்க தனியடைமை கண்ணோட்டத்தில் இருந்து பாலியல் தேவைகளை அணுகாமல் இயல்பூக்க அடிப்படையில் - அது மனிதருக்கு மனிதர் மாறுபடும் என்கிற புரிதலை ஏற்படுத்துங்கள்.

பசி என்பது எவ்வளவு இயல்பானதோ, அவரவருக்கு விருப்பங்களும், தேர்வுகளும் உள்ளதோ பாலியல் தேவையும் அப்படியே. அதை போலியான ஒழுக்கவாத அடிப்படையில் கொச்சைப்படுத்தாதீர்கள்! அதீத பாலுறவு வேட்கை கொண்டவர்களை ஏளனம் செய்யாதீர்கள்! எந்தப் பாலினமாக இருந்தாலும்!

பாலியல் வறட்சி என்பது பசிக்கு நிகரான ஒன்றே. Free the society from Sexual poverty பசி முற்றினால் ஒருவன் கொள்ளை அடிப்பான், கொலையும் செய்வான் என்று சொல்லப்படும் "கதைகளை" கண்ணீருடன் பார்த்துவிட்டு பாலியல் பசி பற்றி பேசினால் காறி உமிழ்தல் முட்டாள்தனம்.

ஆணுக்கு மட்டுமல்ல பெண், மாற்றுப் பாலினம் என அனைவருக்கும் பசியும் உண்டு, பாலியல் தேவைகளும் உண்டு. சிலருக்கு குறைவு, சிலருக்கு அதிகம். அதை சரி தவறு என்று வாதிட யாருக்கும் உரிமை இல்லை.

பாலியல் உணர்வுகளைக் கையாள்வது குறித்த அறிவியல் பூர்வ கல்வி தேவை.ஒழுக்கவாத போதனைகள் போதாது என்பதை தாண்டி உதவாது. விருப்பத்தை தெரிவிப்பது, 18 வயது நிரம்பியோர் பரஸ்பர உடன்பாட்டின் அடிப்படையில் "காதல்" என்கிற பாசாங்கு இன்றி "உடலுறவு" வைத்துக்கொள்வதை இயல்பாக்குதல்... உரிய வயதில் Access to Sex (உடலுறவுக்கு வாய்ப்பளித்தல்).. தனி மனிதர்களின் பாலியல் செயல்பாடுகளை கண்காணிக்கும் கலாச்சார காவலை ஒழித்தல்..
எல்லாவற்றுக்கும் மேலாக பாதுகாப்பான உடலுறவு பற்றிய கல்வி, வழிமுறை, சாத்தியங்களை ஏற்படுத்திக் கொடுத்தல் என சமூகம் நகர வேண்டி உள்ளது.

சிறுவர், சிறுமியரை பாலியல் வறட்சிக்கும், பாலியல் வக்கிரங்களுக்கும் பலி கொடுக்கமல் இருக்க பாலியலை (உடலுறவை) ஜனநாயகப்படுத்துங்கள்.

கொற்றவை
எழுத்தாளர்