தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்

26 January 2022

நாகைமாவட்டம்வேதாரண்யம்அருகேமீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை தாக்கி, இலங்கை கடற்கொள்ளையர்கள் பொருள்களை பறித்துச் சென்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மற்றும் கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்துவது தொடர்கதையாகி வருகிறது. இதுகுறித்து தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் நிரந்தரமாக எடுப்பதாக தெரியவில்லை.இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு அசம்பாவிதம் நடந்துள்ளது. ஆறுகாட்டுத்துறை கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கொடூரமாக தாக்கி இரண்டு லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருள்களை பறித்துச் சென்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


ஆரியநாட்டுத் தெருவைச் சேர்ந்த குப்புராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் அவருடைய மகன் வசந்தபாலன் உள்ளிட்ட நால்வர் ஆறுகாட்டுத்துறை நடுக்கடலில் 10 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.அப்போது அதிவேக என்ஜின் பொருத்தப்பட்ட இரண்டு படகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 8 பேர் குப்புராஜின் படகில் ஏறி வசந்தபாலன் உள்ளிட்ட நால்வரையும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாக தாக்கியுள்ளனர்.பின்னர் படகில் இருந்த புதிய என்ஜின், ஜிபிஎஸ் கருவி, இரண்டு செல்போன்கள், 30 லிட்டர் பெட்ரோல், 130 கிலோ எடையுள்ள மீன்கள் உள்ளிட்டவற்றை கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர். படுகாயமடைந்த மீனவர்கள் நால்வரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர்.