கமாண்டர் மூனிகின் காம்போஸ்

01 December 2022

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் ஓரியன் விண்கலன், நிலவை சுற்றும் பணியில் ஒரு முக்கிய மைல்கல்லை அடைந்துள்ளது.திங்கள்கிழமை பூமிக்கு அப்பால் சுமார் 4 லட்சத்து 30 ஆயிரம் கிலோ மீட்டர் (2 லட்சத்து 70 ஆயிரம் மைல்கள்) தூரத்தை இது அடைந்தது. இதுவரை விண்வெளி வீரர்களை ஏற்றிச்செல்ல வடிவமைக்கப்பட்ட விண்கலங்கள் பயணித்த தூரத்தை விட இது அதிக தொலைவாகும்.இந்த விண்கலத்தில் விண்வெளி வீரர்கள் யாரும் பயணிக்கவில்லை. இந்த ஆர்ட்டெமிஸ் விண்கலம் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்தால், அடுத்த இரண்டு ஆண்டுகளில் விண்வெளி வீரர்களோடு நிலவுக்கு பயணம் மேற்கொள்ளும் திட்டமுள்ளது. 50 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்பு, நிலவுக்கு விண்வெளி வீரர்களை கொண்டு செல்ல நாசா இதன் மூலம் திட்டமிடுகிறது. திங்கள்கிழமை எட்டப்பட்ட மைல்கல், இந்த திட்டப்பணி பாதி நிறைவடைந்ததைக் குறிக்கிறது.நாசாவின் ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் மேலாளர் மைக் சராஃபின் இது பற்றி தெரிவிக்கையில், "இந்த திட்டத்தில் பாதி இலக்கு எட்டப்பட்டிருப்பது, நிலவில் மீண்டும் கால் பதிக்கும் நாட்களை நம்மை எண்ணிப்பார்க்க வைத்துள்ளது” என்றார்." இது ஆபத்துகளை குறைக்கவும், விண்வெளி வீரர்களோடு செல்லும் அடுத்த நிலவுப் பயணத்தில் விண்கல செயல்திறனை புரிந்துகொள்ளவும் செய்கிறது.” என்கிறார் மைக் சராஃபின். இந்த பயணத்தின் சில சிறந்த காணொளிகளை ஓரியன் மீண்டும் நேரடியாக அனுப்பி வருகிறது. இந்த மைல்கல் தொலைவை அடைவதற்கு சற்று முன்னதாக, பூமிக்கு முன்னால் நகர்ந்து கொண்டிருந்த நிலவை படம்படித்தது.இந்த விண்கலன் ஃபுளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து நவம்பர் 16ஆம் தேதி 26 நாள் பயணத்தை தொடங்கியது. இதன் அமைப்புகளை விரிவுபடுத்தவும், விண்வெளி வீரர்கள் செல்வதற்கு பாதுகாப்பானதா என்பதை உறுதிசெய்யவும் இது வடிவமைக்கப்பட்டது.ஐரோப்பிய விண்வெளி அமைப்பு (இஎஸ்ஏ) வழங்கிய இயந்திர தொகுதி ஒன்றின் மூலமே ஓரியன் விண்வெளியில் சுற்றவைக்கப்படுகிறது. திறம்பட செயல்பட தேவையான இந்த வாகனம் பெரிய உந்துசக்தியை உள்ளடக்கியது.தொலைதூர வெளிப்புற சுற்றுப்பாதை எனப்படும் நிலவை சுற்றிய ஒரு பெரிய சுற்றுப்பாதையை ஓரியன் அடைவதற்கு இஎஸ்ஏ இரண்டு முக்கிய இயந்திரங்களை வழங்கியது. ஓரியன் விண்கலத்திலுள்ள மனித உடல் பொம்மைக்கு, கமாண்டர் மூனிகின் காம்போஸ் என்று செல்லப்பெயர் சூட்டப்பட்டது.