இழந்ததை திரும்ப தரும் சங்கரி தேவி

17 October 2020

சங்கரி என்ற சொல்லுக்கு, மங்களத்தை செய்பவள் என்று பொருள். அதாவது, குழந்தைகள் தவறு செய்தாலும், அவர்களுக்கு நல்லதையே செய்யும் தாயை விட மேலானவள், அம்பிகை. நாம், மங்களம் என எவற்றைக் குறிப்பிடுகிறோமோ, அவற்றிற்கும் மங்களத்தை அளிப்பவள் அவள் தான். இதைத்தான், 'சர்வ மங்கள மாங்கல்யே...' எனும் சுலோகம் குறிப்பிடுகிறது. படிப்பு, செல்வம், புகழ் என, எல்லாம் இருந்தாலும், மகிழ்ச்சி என்பது இணைந்தால் தான், மங்களகரமான வாழ்வு என்பது நிறைவாக இருக்கும். இதற்கு தடையாக இருப்பவை, துன்பம், தடை மற்றும் இன்னல் போன்றவற்றை ஏற்படுத்தக்கூடிய விஷயங்கள். இவை, கிரக சஞ்சாரத்தினாலும், முன் வினைப் பயனாலுமே ஏற்படுகின்றன. இவற்றை தடுத்து, மகிழ்ச்சியை மட்டுமே அடையும் ஆற்றல் தேவர்களாகட்டும், மனிதர்களாகட்டும், யாருக்கும் கிடையாது.அம்பிகையைச் சரணடைவோருக்கே, வாழ்க்கை இன்பம் கிட்டும்.
இதற்காக, அம்பிகையை வழிபட, எவ்வளவோ சிறப்பான நாட்கள் இருந்தாலும், எல்லாவற்றை யும் விட மேலானது, நவராத்திரி வழிபாடேயாகும்.யாராலும் தீர்க்க முடியாத கஷ்டங்கள், நோய் நொடிகள் என, எல்லா துன்பங்களையும் போக்கி, அன்னையின் அருளால், நினைத்த வரங்களைப் பெற்று, இன்பமாய் வாழலாம்.சுரதன் எனும் அரசன், பூவுலகம் முழுவதையும், நீதி வழுவாமல் அரசாண்டு வந்தான். அவனது வளர்ச்சியைக் கண்டு, கோலா வித்வம்சினர்கள் என்ற எதிரிகள்,அவனை சூழ்ச்சியால் வென்றனர். ராஜ்ஜியம் இழந்த அவ்வரசனின் அரண்மனை மற்றும் இதர உடைமைகளையும், அவனது சுற்றத்தாரும், அமைச்சர்களும் எடுத்துக் கொண்டு, அவனை ஏமாற்றி விடுகின்றனர். இதனால் மனமுடைந்த சுரதன், காட்டுக்குச் செல்கிறான்.

தனிமையான இடத்தில் இருந்து, நடந்ததை எண்ணி எண்ணி, மனம் சோர்ந்து கொண்டிருந்தான்.அப்போது, அங்கு ஒருவர் தன்னைப் போலவே சோர்வுடன் இருப்பதைக் கண்டு, 'யார் நீங்கள்?' என, வினவுகிறான்.அவரும், தாம் மிகப் பெரிய வணிகர் குலத்தில் பிறந்த செல்வந்தர் என்றும், மனைவி, மக்களே தம்மை ஏமாற்றி, செல்வத்தைப் பிடுங்கிக் கொண்டதாகவும், அதனால், வாழ்க்கையை வெறுத்து, காட்டிற்கு வந்ததாகவும் கூறினார்.இரு வேறுபட்ட கஷ்டங்களால் பாதிக்கப்பட்ட இருவரும், தங்களின் விடிவுகாலம் மற்றும் மோட்சம் பற்றி அறிய, அங்கு தவம் செய்து கொண்டிருந்த, சுமேதஸ் என்ற முனிவரை அணுகி, தங்களது கதைகளை கூறி, துன்பம் நீங்க வழிகாட்டியருளுமாறு வினவினர். முனிவரும், அவர்கள் மீது கருணை கொண்டு, 'அன்னையைச் சரணடைந்தால், உங்கள் துன்பங்கள் அகலும்...' எனக் கூறினார். அரசாட்சியிலும், வியாபாரத்திலும் காலம் செலுத்தி வந்த அவ்விருவரும், அம்பிகையை அறிந்திருக்கவில்லை. எனவே அவர்கள், முனிவரிடம், 'அம்பிகை என்றால் யார்; அவளின் மகிமைகள் என்ன?' என, வினவினர்.முனிவரும், அன்னையின் அற்புத வரலாறுகளை கூறியதுடன், மதுகைடபன், மகிஷாசுரன், சும்பன், நிசும்பன் போன்ற அரக்கர்களை அழிப்பதற்காக, காளி, துர்கை போன்ற அவதாரங்கள் எடுத்து, அசுரர்களை அழித்து, மூவுலகையும் காப்பாற்றிய புராணங்களை அருளினார்.

இவற்றையெல்லாம் கேட்ட அரசனும், வணிகரும், 'அந்த அம்பிகையை வழிபட்டு, நாங்களும் அருள் பெற வழி கூற வேண்டும்...' என, வேண்டினர்.'நவராத்திரி தினங்களில், அன்னையின் வரலாறுகளைப் படித்தும், கேட்டும், கொலு வழிபாடு செய்தும், அம்பிகைக்குப் பிரியமான, ஸ்ரீ சண்டி ஹோமம் செய்து வழிபட்டால், நீங்கள் இழந்த வாழ்க்கையை மீண்டும் பெறலாம்...' எனக் கூறினார்.இருவரும் அவ்வாறே செய்ய, யாக குண்டத்திலிருந்து ஸ்ரீ சங்கரிதேவி தோன்றி, 'என்ன வரம் வேண்டும்?' எனக் கேட்க, இழந்த ராஜ்ஜியத்தை பெற மீண்டும் வேண்டினான் அரசன். 'உன் பக்தியிலும், வழிபாட்டிலும் மிக்க மகிழ்ச்சிஅடைந்துள்ளேன்; இதற்கு வரமாக, இப்பிறவியில் பூமண்டல சக்கரவர்த்தியாக ஆண்டும், அடுத்த பிறவியில், சூரியனுக்கு மகனாகப் பிறந்து, 71 சதுர் யுகங்கள் கொண்ட ஒருமன்வந்திரம் முழுதும், உன் பெயரால் உலகை ஆள்வாயாக...' என்று வரமருளினாள். தற்போது நடப்பது, உலக சிருஷ்டியின், 14 வரிசை மனுக்களில், ஏழாவது மனுவாகச் சொல்லப்படும் வைவஸ்வத மன்வந்திரம். அடுத்து வரப்போகும், சாவர்ணிக மன்வந்திரமாக, சுரதன் விளங்கப் போகிறான்.

வணிகர், 'தமக்கு வாழ்க்கை இனி வேண்டாம்; உன்னையே வணங்கி, தவமிருந்து, கண்டு தரிசிக்கும் வரம் வேண்டும்...' என்றார். 'அப்படியே ஆகட்டும்...' என, அன்னை சங்கரி தேவி வரமளித்த வரலாறு, மார்க்கண்டேய புராணம் எனும் நுாலில் கூறிய வண்ணம், நாமும் சிந்தித்தால், சாதிக்க முடியாதது எதுவும் இல்லை எனும் மனோபலத்துடன் வெற்றியுடன் வாழலாம்.பூஜை செய்யும் முறை : தாம்பாளத்தில், அறுகோணக் கோலம் வரைந்து, நடுவிலும் ஆறு கோணங்களிலுமாக, ஏழு தீபங்கள் ஏற்றி வைத்து, 'ஓம் ஸ்ரீ சங்கரி தேவ்யை நமஹ...' என்று அர்ச்சனை செய்யவும். ஆரத்தி எடுத்து நிறைவு செய்யவும்.நிவேதனம் : பாசிப்பருப்புப் பாயசம், காராமணி சுண்டல் நிவேதனம்.பாடல்கள் : தெரிந்த பாடல்களைப் பாடலாம். பெண்களுக்கு :மஞ்சள் நிற ரவிக்கைத் துண்டு மற்றும் மங்களப் பொருட்கள் வழங்க வேண்டும்.இரண்டாம் நாள் சொல்ல வேண்டிய ஸ்தோத்திரம் சரண்யே த்ரயம்பகே தேவி நாராயணி நமோஸ்துதே| பொருள் : இவ்வுலகில் மங்களம் என்று சொல்லப்படும் எல்லாவற்றிற்கும் அடையாளமான மங்களமாக இருப்பவளே...

சிவசக்தியே! எல்லாருடைய விருப்பங்களையும் நிறைவேற்றும் அன்னையே! முக்கண்ணியே! உலக உயிர்களுக்கெல்லாம் புகலிடமே!

தேவதேவியே! நாராயண சகோதரியே! உன்னை நமஸ்கரிக்கிறோம். மங்கள வாழ்வு அருள்வாயாக!- ஸ்ரீதேவி மகாத்மியம்.

11வது அத்யாயம்.நவராத்திரி இரண்டாம் நாளுக்கான நிவேதனம் நவராத்திரிக்கு நிவேதன உணவு செய்யச் சொல்லிக் கொடுக்க, ஜி.ஆர்.டி., ஓட்டல் தலைமை சமையல் கலைஞர் சீதாராம் பிரசாத் முன்வந்தார். ஒவ்வொரு பெயராகச் சொல்லச் சொல்ல, நிமிட நேரங்களில் எல்லாவற்றையும் தயார் செய்து அசத்தினார். இனி தினமும், சீதாராம் பிரசாத் சொல்லிக் கொடுப்பார்.தேவையான பொருட்கள்பாசிப்பருப்பு - 100 கிராம்தேங்காய் பால் - 400 மில்லிவெல்லம் - 200 கிராம்ஏலக்காய் பொடி - 1 தேக்கரண்டிமுந்திரி - 50 கிராம்திராட்சை - 20 கிராம்நெய் - 30 மில்லிபாசிப்பருப்பு பாயசம்! : பாசிப்பருப்பை வறுத்து, நன்றாக வேக வைக்கவும்.

அரை கப் மெல்லிய தேங்காய் பால் சேர்க்கவும். வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு காய்ச்சி, வடிகட்டி சேர்க்கவும். பின், மீதமுள்ள தேங்காய் பாலையும் சேர்க்கவும். நன்றாக கலந்து, சிறிது கொதிக்க விட்டு, ஏலக்காய் பொடி சேர்க்கவும்.

நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் திராட்சை சேர்த்து, சூடாக பரிமாறவும்.இதில் அடங்கியுள்ள சத்துக்கள்: மொத்த கலோரிகள், 2,332.6; கார்போஹைட்ரேட், 257.5, புரதம், 41; கொழுப்பு, 129.5காராமணி சுண்டல்! தேவையான பொருட்கள்வெள்ளை காராமணி - 500 கிராம்எண்ணெய் - 20 மில்லிகடுகு - 2 தேக்கரண்டிஉளுந்தம் பருப்பு - 2 தேக்கரண்டிகருவேப்பிலை - 2 ஈர்க்குகாய்ந்த மிளகாய் - 2பச்சை மிளகாய் - 2துருவிய இஞ்சி - 10 கிராம்பெருங்காயம் - 1 தேக்கரண்டிஉப்பு - தேவையான அளவுதுருவிய தேங்காய் - 150 கிராம்காராமணியை எட்டு மணி நேரம் ஊற வைத்து, வேக வைக்கவும். வாணலியில் எண்ணெய் சூடாக்கி, காய்ந்த மிளகாய், கடுகு, உளுந்தம் பருப்பு, கருவேப்பிலை, துருவிய இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் பெருங்காயம் சேர்க்கவும். இதில், காராமணியுடன் உப்பு சேர்த்து, அடுப்பை அணைக்கவும். துருவிய தேங்காய் சேர்த்து, பரிமாறவும்.இதில் அடங்கியுள்ள சத்துக்கள்: மொத்த கலோரிகள், 2,531.3; கார்போ ஹைட்ரேட், 293.4, புரதம், 118.7 ; கொழுப்பு, 92.9.பூஜை நேரம் : மாலை, 5:00 முதல் இரவு, 7:00 வரை.