வடகொரியா மீது பொருளாதாரத் தடை ?

27 May 2022

வட கொரியாவின் ஏவுகணை பரிசோதனைகளை தண்டிக்கும் அமெரிக்காவின் முயற்சியை நிறுத்த ரஷ்யாவும் சீனாவும் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தின.

தென்கொரியாவுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் வந்திருந்த அமெரிக்க அதிபர் ஜோ பிடன் சியோலில் இருந்து புறப்பட்டுவிட்டார். அவர் கிளம்பிய உடனேயே, வட கொரியா அதன் மிகப்பெரிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (ICBM) உட்பட மூன்று ஏவுகணைகளை சோதனை செய்தது.


இது மேற்கத்திய நாடுகளுக்கு அச்சம் விளைவித்துள்ள நிலையில், வட கொரியாவின் மீதான கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்கா முடிவு செய்தது.


இந்த நிலையில், ரஷ்யா மற்றும் சீனா என இரு நாடுகளும் தங்கள் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி, வடகொரியா மீதான அமெரிக்காவின் கூடுதல் பொருளாதாரத் தடை தொடர்பான தீர்மானத்தை நிறுத்தியுள்ளன.


2006 இல் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில், வடகொரியாவை தண்டிக்கத் தொடங்கிய ப்பிறகு, ஐ.நா சபையில் பகிரங்கமாக முடிவுகளுக்கு எதிர்ப்பு கிளம்புவது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.


அமெரிக்க அதிபர் ஜோ பிடன் சியோலில் இருந்து புறப்பட்ட பிறகு, வட கொரியா அதன் மிகப்பெரிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (ICBM) உட்பட மூன்று ஏவுகணைகளை சோதனை செய்ததே தற்போது அமெரிக்காவுக்கு எரிச்சலைக் கிளப்பியுள்ளது.


எனவே, வாஷிங்டன், லாசரஸ் ஹேக்கிங் குழுவை பிளாக்லிஸ்ட் செய்வதன் மூலம் வட கொரியா மீதான பொருளாதாரத் தடைகளை கடுமையாக்கும் முயற்சியை அறிமுகப்படுத்தியது.


அதுமட்டுமல்ல, வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் தொடர்ந்து புகைப்பிடிப்பவர் என்பதால், வட கொரியாவிற்கு புகையிலை மற்றும் எண்ணெய் ஏற்றுமதியை தடை செய்தது.ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் 13 கவுன்சில் உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்ற போதிலும், சீனா மற்றும் ரஷ்யாவின் தீர்மானத்தின் மீதான எதிர்ப்பு உறுதியாக இருந்தது.


இந்த வாக்கெடுப்பு தீர்மானத்திற்கான எதிர்ப்பைக் கண்டு ஏமற்றமடைந்த அமெரிக்காவின் ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ்-கிரீன்ஃபீல்ட், "ஏமாற்றம் தரும் நாள் இது" என்று விவரித்தார்.


"உலகம் வட கொரியா மீதான DPRK மூலம் தெளிவான மற்றும் நிச்சயமான ஆபத்தை எதிர்கொள்கிறது. சபையின் கட்டுப்பாடுகளால் வடகொரியாவின் அச்சுறுத்தல் குறைந்திருந்தது. ஆனால், தற்போது அந்நாட்டுக்கு அச்சம் குறைந்து தைரியம் அதிகரிக்கும்" என்று அமெரிக்காவின் ஏமாற்றத்தை தாமஸ் கிரீன்ஃபீல்ட் பதிவு செய்தார்.


ரஷ்யாவின் முடிவு குறித்து பேசிய ஐநாவுக்கான ரஷ்ய தூதர் வசிலி நெபென்சியா, "வட கொரியாவுக்கு எதிரான புதிய தடைகளை அறிமுகப்படுத்துவது என்பது முடிவே இல்லாத முட்டுச்சந்திற்கு செல்வதற்கான ஒரு பாதை" என்று கூறினார்.


"பியோங்யாங்கின் மீதான பொருளாதாரத் தடைகளின் அழுத்தத்தை மேலும் வலுப்படுத்துவதன் பயனற்ற தன்மை மற்றும் மனிதாபிமானமற்ற தன்மையை நாம் வலியுறுத்தியுள்ளோம்" என்றும் ரஷ்யாவின் எண்ணத்தை ரஷ்ய தூதர் முன்வைத்தார்.


தடைக்கு எதிர்ப்பு தெரிவித்த சீனாவின் ஐ.நா தூதர் ஜாங் ஜுன், "கொரிய தீபகற்பத்தின் நிலைமை இன்றைய நிலைமையை மோசமாக்கியுள்ளது. அமெரிக்கா, தனது கொள்கைகள் மற்றும் முந்தைய பேச்சுவார்த்தைகளை காப்பாற்றத் தவறிவிட்டது" என்று கூறினார்.


இது தொடர்பாக கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்ட ரஷ்யா மற்றும் சீனாவின் தூதர்கள், பியோங்யாங்கிற்கு எதிரான புதிய தடைகளைவிட, கட்டுப்பாடற்ற நடவடிக்கைகளை விரும்புவதாகக் கூறினார்கள்.அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்புடன், கிம் ஜாங்-உன் மூன்று உயர்மட்ட சந்திப்புகளை நடத்திய போதிலும், வட கொரியா மீதான அழுத்தத்தை கடுமையாக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மூன்று முறை ஒருமனதாக வாக்களித்ததை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மோசமாகின.


உக்ரைன் மீதான படையெடுப்பைத் தொடர்ந்து அமெரிக்காவுடனான உறவுகள் மோசமடைந்த பின்னர், ரஷ்யா வட கொரியாவை நோக்கிச் செல்லத் தொடங்கியுள்ளது. அதேநேரத்தில், சீனா பல தசாப்தங்களாக வடகொரியாவின் நெருங்கிய கூட்டாளியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.


வடகொரியத் தலைவர் கிம் ஜாங் உன், அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் தடுப்பூசிகள் உதவியை நிராகரித்திருந்தார்.


2017 இல் நிறைவேற்றப்பட்ட வடகொரியா மீதான பொருளாதாரத் தடை தொடர்பான தீர்மானத்துக்கு சீனா மற்றும் ரஷ்யா ஆதரவு கொடுத்தன. இந்தத் தடைக்கு காரணம் வட கொரியாவின் அணுசக்தி மற்றும் ICBM ஏவுகணை பரிசோதனைகளால் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.