சாத்தூரில் அறிஞர் அண்ணா காய்கறி மார்க்கெட் மீண்டும் நாளை முதல் உழவர் சந்தையில் செயல்படுகிறது

10 May 2021

சாத்தூரில் செயல்பட்டு வரும் அறிஞர் அண்ணா காய்கறி மார்க்கெட் கொரோனா தொற்று பரவல் காரணமாக கூட்ட நெரிசலை தவிர்க்க மீண்டும் உழவர் சந்தை மற்றும் பேருந்து நிலையங்களில் இடமாற்றம் செய்யப்பட உள்ளது என்று நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று 2வது அலை தீவிரமாக அதிகரித்து வருவதால் அதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது அதன்படி தமிழகம் முழுவதும் 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

 ஊரடங்கின் பொழுது கார் பஸ் வேன் ஆட்டோ உள்ளிட்ட போக்குவரத்து வாகனங்கள் எதுவும் செல்லாது. மேலும் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைக்கான கடைகளாக காய்கறி, மளிகை, மெடிக்கல் மற்றும் பால் பூத் ஓட்டல்கள் உள்ளிட்டவை மட்டும் பகல் 12 மணி வரை திறக்க அனுமதி அளித்துள்ளது. 

மேலும் திரையரங்குகள் சூப்பர் மார்க்கெட்டுகள் சலூன் கடைகள் திருமண மண்டபங்கள் மற்றும் ஏனைய கடைகள் அனைத்தும் திறக்கக்கூடாது என அறிவித்துள்ளது. இந்நிலையில் சாத்தூரில் செயல்பட்டுவரும் அறிஞர் அண்ணா காய்கறி மார்க்கெட் பகுதி முழுவதும் மிகவும் குறுகலான பகுதி என்பதாலும் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுகிறது என்பதாலும் மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகள் அனைத்தையும் நாளை முதல் இடமாற்றம் செய்து சில்லறைக் கடைகள் அனைத்தும் சாத்தூர் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலும் மொத்த விலைக் கடைகள் அனைத்தும் தேசிய நெடுஞ்சாலை அருகிலுள்ள உழவர் சந்தையிலும் செயல்படும் வகையில் இடமாற்றம் செய்யப்பட உள்ளது என்று நகராட்சி நிர்வாகம் சார்பிலும் அறிஞர் அண்ணா காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தின் சார்பிலும் தெரிவித்துள்ளனர்.

 இதனால் பொதுமக்கள் உரிய சமூக இடைவெளியுடன் முகக் கவசங்கள் அணிந்து வந்து பொருட்களை வாங்கிச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் ஆரம்பித்தபோது இதேபோன்று காய்கறி மார்க்கெட் இடமாற்றம் செய்யப்பட்டது. மீண்டும் இரண்டாவது முறையாக நாளை முதல் மார்க்கெட் இடமாற்றம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.