ரஜினி படங்களை விமர்சித்த ஆர்.ஜே.பாலாஜி. குவியும் பாராட்டு

21 May 2022

பெண்களின் சமத்துவம் தொடர்பாக பேசிய நடிகர் ஆர்.ஜே.பாலாஜி, ரஜினி படங்களிலும் பெண்களை தவறாக சித்தரித்துள்ளதாக கூறியுள்ளார் . இவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அதே நேரத்தில் பலரும் ஆர்.ஜே.பாலாஜிக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் வெளிவந்த எல்.கே.ஜி., மூக்குத்தி அம்மன் திரைப்படங்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து அவர் நடித்திருக்கும் வீட்ல விசேஷம் படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்றது.


அந்த நிகழ்ச்சியில் ஆர்.ஜே. பாலாஜி பேசியது பரபரப்பையும், சர்ச்சையையும் கிளப்பியுள்ளது. இளைஞர்கள் சிலருக்கு பெண்களை எப்படி அணுகுவது என்றே தெரியவில்லை என்று அவர் கூறியுள்ளார்.


ரஜினி நடித்த படையப்பா, மன்னன் படங்களில் பெண்களை ரொம்ப தவறாக காட்டியதுதான், பசங்களுக்கும் பெண்களுக்கும் இடையே சமூகத்தில் மிகப்பெரிய வேற்றுமை உருவாகக் காரணம். படையப்பா படத்துல வீட்ல வேலை செய்ற பொண்ணு நல்லவ. வெளிநாட்டுல படிச்சிட்டு வர்ற பொண்ணு கெட்டவன்னு காட்டிருப்பாங்க.


மன்னன் படத்தில் படிச்சிட்டு கம்பெனி நடத்துற விஜயசாந்தி கெட்டவங்க, காபி போட்டு கொடுக்குற குஷ்புவ நல்லவங்களா காட்டிருப்பாங்க, என்று ஆர்.ஜே. பாலாஜி. பேசியுள்ளார்.அவரது பேச்சை பாராட்டி, நிகழ்ச்சியின்போது கைத்தட்டல்கள் எழுந்தன. நடிகராக இருந்தும் தனது துறையில் நிகழ்ந்த தவறுகளை சுட்டிக்காட்ட பாலாஜி தயங்கவில்லை என அவரை நெட்டிசன்கள் பாராட்டியுள்ளனர். அதே நேரத்தில் சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.