விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் கனமழை- வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் அவதி!

15 April 2021

சாத்தூர் பகுதியில் பலத்த இடியுடன் கூடிய கனமழை வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.மழைநீர் வடிய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.


       விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கோடை வெயில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கடுமையான வெப்பத்துடன் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

இதனால் இப்பகுதிகளில் அதிகமான சூடு மற்றும் வெப்பக் காற்று வீசியது.பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தினால் மிகவும் சிரமப்பட்டனர்.

தற்போது மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக லேசான மழை பெய்தது.இதையடுத்து இன்று சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் சாத்தூர் மாரியம்மன்கோவில் தெரு,முருகன்கோவில்தெரு,மெயின்ரோடு,மேலகாந்திநகர்,அண்ணாநகர், ஆண்டாள்புரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தெருக்களில் மழை நீர் அதிகமாக தேங்கியது.

மேலும் வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்ததால் பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினார்கள்.மேலும் நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரு பகுதிகளில் மழைநீர் செல்ல வழியில்லாதால் வீடுகளுக்கு மழைநீர் புகுந்தது.

எனவே நகராட்சி நிர்வாகம் சார்பில் மழைநீர் முறையாக செல்ல வாறுகால் அமைக்க வேண்டும் என பொதுமக்களும்,சமூக ஆர்வலர்களும் நகராட்சி நிர்வாக்ததை வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் இந்த பகுதியில் தொடர்ந்து மழைபெய்து வருவதால் இப்பகுதி விவசாயிகள் மிகுந்த மிகிழ்ச்சியடைந்துள்ளனர்.