தொடர் மழையால் ஸ்தம்பித்து மகாராஷ்டிரா!

10 June 2021

மகாராஷ்டிராவில் மும்பை உள்பட 4 நகரங்களுக்கு மிக பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், அங்கு தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 15 குழுவினர் குவிக்கப்பட்டுள்ளனர்.


மகாராஷ்டிர மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளது. 10 ஆம் தேதி இந்த பருவ மழை தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஒரு நாள் முன்னதாகவே நேற்று தொடங்கியது. மும்பையில் கடும் மழை காரணமாக, பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளன. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

தாழ்வான பல பகுதிகள், வெள்ள நீரில் மிதக்கின்றன. நேற்று காலை 8 மணி வரைக்கும் கொலபா பகுதியில் 8 செமீ மழையும், சாந்தாகுரூஸ் பகுதியில் 6 செமீ மழையும் பதிவாகியுள்ளது.

பல பகுதிகளில் தண்டவாளங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டன. பின்னர் தண்டவாளங்கள் தண்ணீரில் மூழ்கியதால், ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. சத்ரபதி சிவாஜி டெர்மினஸில் இருந்து தானே, வாஷி, பாந்த்ரா/ கோரேகான், குர்லா – சயான் ஆகிய பகுதிகளில் தண்டவாளங்கள் தண்ணீரில் மூழ்கியதால், ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் மும்பை, தானே, பல்கார், ராஜ்காட் ஆகிய 4 நகரங்களில் நாளை கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 15 குழுவினர் கடலோர பகுதிகளில், மீட்பு பணிக்காக வந்துள்ளனர்.